மேலும்

பிரிகேடியர் கெப்பிட்டிவலன இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்

Sri_Lanka_Army_Flagசிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் டி.சி.கெப்பிட்டிவலன, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிகேடியர் கெப்பிட்டிவலன கொழும்பு நகர பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த காலப்பகுதியில், நடந்த காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், மற்றும் படுகொலைகள்  தொடர்பாக அரசாங்கம் சிறப்பு விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளில் இவர் தலையீடு செய்யலாம் என்பதாலேயே, இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை விசாரணையிலும், பிரிகேடியர் கெப்பிட்டிவலனவின் பெயரும், குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மாத நடுப்பகுதியில், இடம்பெற்ற இராணுவக் கட்டமைப்பு மாற்றங்களின் போது, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் வேண்டுகோளின் பேரில், பிரிகேடியர் கெப்பிட்டிவலன, இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரிகேடியர் கெப்பிட்டிவலனவை காலாற்படை நடவடிக்கைப் பணிப்பாளராக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளராக பிரிகேடியர் ஜெயந்த குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, வன்னிப்படைகளின் கட்டளைத் தளபதியாக இருந்து, அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

வன்னிப் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர மீண்டும், இராணுவத் தலைமையத்தில் உள்ள இராணுவச் செயலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *