மேலும்

பேராசிரியர் றொகான் குணரத்னவுக்கு ஒரு பதிலடி

Prof. Rohan Gunaratnaகடற்படையினர் மீன்பிடியில் ஈடுபடுவதும், இராணுவத்தினர் பண்ணைகள், விடுதிகள் மற்றும் உணவகங்களை வைத்திருப்பதும் தான் தேசிய பாதுகாப்பின் நோக்கங்களா? இவ்வாறு பேராசிரியர் றொகான் குணரத்னவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் பொருளியல் நிபுணரும், ஆய்வாளருமான கலாநிதி முத்துகிருஸ்ண சர்வானந்தா.

‘சிலோன் ருடே’ இதழில், பேராசிரியர் றொகான் குணரத்ன வெளியிட்ட கருத்துகளுக்குப் பதிலளித்து, அவர் எழுதியுள்ள பத்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

பெப்ரவரி 15,2015 அன்று வெளியிடப்பட்ட Ceylon Today ஊடகத்தின் பத்தாவது பக்கத்தில் ‘வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டாம்: பேராசிரியர் றொகான் குணரத்ன’ என்கின்ற தலைப்பில் ‘அனைத்துலக பயங்கரவாத வல்லுனர்’ பேராசிரியர் றொகான் குணரத்னவால் ஊடகவியலாளர் Zahrah Imtiaz  இற்கு எழுதப்பட்ட ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் இங்கு பதியப்பட்டுள்ளன.

‘பாதுகாப்பு இல்லாதவிடத்து அங்கு சுதந்திரமும் அபிவிருத்தியும் காணப்படாது’ என்கின்ற பேராசிரியர் றொகான் குணரத்னவின் கருத்திற்கு நான் உடன்படுகிறேன். ஆனால் இதனை மறுதலையாக நோக்கும் போது சுதந்திரம் மற்றும் அபிவிருத்தி இல்லாதவிடத்து அங்கு பாதுகாப்பு என்பதற்கு இடமில்லை என்பதிலும் உண்மையுள்ளது என நான் இங்கு விவாதிக்க விரும்புகிறேன்.

‘பாதுகாப்புத் தான் முதலாவது’ என பேராசிரியர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மனித உயிரினங்களுக்கான பாதுகாப்புத் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்பது எனது வாதமாகும். மனிதப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால், உள்நாட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசிய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குவது இலகுவானதாக இருக்கும்.

அனைத்துலக பயங்கரவாத வல்லுனரான பேராசிரியர் றொகான் குணரத்ன ஆப்கான் மற்றும் ஈராக் நாடுகளில் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் மூலம் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சிவாதிகள் மற்றும் பயங்கரவாதப் போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட, ஒரு பத்தாண்டு காலத்திற்குள் இவர்களில் பெரும்பாலான கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதக் குழுக்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளன.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளில் அமெரிக்க இராணுவம் போர் வெற்றியைப் பிரகடனப்படுத்திய பின்னர் இந்த நாடுகளில் கிளர்ச்சிகளும் பயங்கரவாதச் செயற்பாடுகளும் மீண்டும் ஆரம்பித்தன என்பது சிறிலங்காவுக்கு பொருத்தமற்றதாக இருக்கும்.

அரசியல் உறுதித்தன்மைக்கு அப்பால் பாதுகாப்பு உறுதித்தன்மையே போர் வெற்றிகளுக்குக் காரணமாக இருந்துள்ளன என்பதற்கு ஒரு முக்கிய சாட்சியாகும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளில் வெளியக இராணுவச் சக்தி காணப்பட்டது. போர்க்களத்தில் அகப்பட்ட தனது படைகளைப் பின்வாங்கச் செய்வதற்காகவும் நாட்டில் அரசியல் மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் இவ்விரு நாடுகளும் அமெரிக்க இராணுவத்தின் உதவிகளை நாடின.

மறுபுறத்தே நோக்கும் போது சிறிலங்கா இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக போரின் மூலம் அழித்தனர். வட அயர்லாந்தில் ‘IRA’ காணப்படுவது போன்றும் நேபாளத்தில் ‘மாவோயிஸ்ட்டுக்கள்’ காணப்படுவது போன்றும் சிறிலங்காவில் புலிகள் செயற்படுவதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.

அதாவது இவ்விரு நாடுகளிலும் உள்ள கிளர்ச்சிக் குழுக்கள் தமது ஆயுதங்களைக் கையளித்து தாமும் சரணடையவில்லை.

சிறிலங்கா இராணுவத்தினர் போருக்குப் பின்னான மனவழுத்த நோய்க்கு உட்படவில்லை என பேராசிரியர் றொகான் குணரத்ன கூறிய கருத்துத் தொடர்பில் எனக்குள் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.

நாடு பூராவும் சிறிலங்கா இராணுவத்தால் செயற்படுத்தப்படும் உளவள ஆற்றுப்படுத்தல் மையங்கள் பேராசிரியரின் இக்கருத்தை மறுதலித்து நிற்கின்றன.

வடக்கிலுள்ள இராணுவம் முழுவதையும் நீக்குமாறு நான் இங்கு விவாதிக்கவில்லை. மாறாக வடக்கு மற்றும் நாடு முழுவதிலும் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு வேண்டுகிறேன்.

சிறிலங்காவின் முப்படைகளையும் சேர்ந்த படையினரின் எண்ணிக்கை வடக்கு மாகாணம் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள மக்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாசாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

படையினரின் மொத்த எண்ணிக்கையானது நாட்டில் வாழும் மொத்த சனத்தொகையின் அல்லது வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்பதே எனது கருத்தாகும்.

சிறிலங்காவின் ஒன்பது மாகாணங்களிலும் சனத்தொகை குறைந்த மாகாணம் வடக்கு மாகாணம் ஆகும். ஆகவே வடக்கிலுள்ள இராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கையானது பத்தாயிரமாகக் குறைக்கப்பட வேண்டும்.

சிறிலங்காவின் சனத்தொகை 21 மில்லியனுக்கும் குறைவாகும்.

ஆகவே நாட்டில் சேவையில் ஈடுபடுத்தப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கையும் 210,000 ஐ விட அதிகரிக்கக் கூடாது. இதற்குள் விமானப் படை, இராணுவப் படை மற்றும் கடற்படை ஆகியன உள்ளடங்க வேண்டும்.

இராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கை தேசிய பாதுகாப்பை அதிகரிப்பதற்கு மிகவும் அவசியமானது என நான் நம்பவில்லை.

இதற்கு மாறாக இராணுவத்தினரின் போரிடும் திறன் மற்றும் போரிடுவதற்கான அவர்களின் ஈடுபாடு போன்ற பல்வேறு போரியல் பண்புகள் அதிகரிக்கப்படுவதே நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமாகும் என்பதே எனது விவாதமாகும்.

இதுவே நாட்டின் வினைத்திறனும் விளைதிறனும் மிக்க இராணுவ வீரர்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்.

ஆகவே இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை விட அவர்களின் தரத்தில் அதிக கவனம் செலுத்துமாறு நான் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கும் மேலாக கடற்படையினர் மீன்பிடியில் ஈடுபடுவதும், இராணுவத்தினர் பண்ணைகள், விடுதிகள் மற்றும் உணவகங்களை வைத்திருப்பதும் தான் தேசிய பாதுகாப்பின் நோக்கங்களா?

வடக்கில் அல்லது தெற்கில் இராணுவத்தினர் வர்த்தகங்களில் ஈடுபடுவதற்காக தனியார் காணிகள் மற்றும் உடைமைகளை அபகரித்துள்ளனர். இராணுவ வீரர்கள் வர்த்தக சார் செயற்பாடுகளில் ஈடுபட விரும்பினால் அவர்களை இராணுவத்திலிருந்து நீக்க வேண்டும்.

இராணுவத்தினர் சிறிலங்கா அரச திறைசேரிகளில் வருமானத்தை ஈட்டும் பணிகளில் ஈடுபடும் போது, மே 2009ல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து பாதுகாப்புச் செலவீனங்கள் ஒவ்வொரு ஆண்டும் கணிசமானளவு அதிகரிக்கப்படுவதற்கான காரணம் என்ன?

உயர் பாதுகாப்புச் செலவீனங்கள் அல்லது மிகவும் உயர்ந்த எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் தேசிய பாதுகாப்புக்கு  அவசியமானதல்ல. இதற்கு முன்னாள் சோசலிச சோவியத் குடியரசுகள் வீழ்ச்சியடைந்தமை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறிலங்கா ஏன் ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளக் கூடாது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலி அமைப்பு என பேராசிரியர் றொகான் குணரத்ன குறிப்பிட்டிருந்ததானது, கல்விமான் என்பதற்கு அப்பால் இவரது குறுகிய சிந்தனையையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

2001 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலி அரசியற் கட்சியாகச் செயற்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அதற்கு அப்பாலான காலப்பகுதியில் இக்கட்சி அவ்வாறு செயற்படவில்லை.

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போதும் பிரபலமடைந்துள்ளதற்கான காரணம் என்னவெனில், இங்கு தொடரப்பட்ட போராட்டத்தை சிறிலங்காப் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக தோற்கடித்திருந்தாலும் கூட, இதுநாள் வரை சிறிலங்கா வாழ் சிறுபான்மைத் தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை சிறிலங்காவின் அரசியல்வாதிகள் முன்னுரிமைப்படுத்தத் தவறியமையே ஆகும்.

இந்த அடிப்படையில், முன்னைய சிறிலங்கா அரசாங்கம் முஸ்லீம் சமூகம் போன்ற ஏனைய சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அவாக்களைத் தீர்த்து வைக்காததால் எவ்வாறான விளைவுகளைச் சந்தித்தது என்பதை அண்மைய அதிபர் தேர்தலின் பெறுபேறுகள் பிரதிபலிக்கின்றன.

2009இன் முற்பகுதி மற்றும் பிற்பகுதியிலும் கூட தமிழீழ விடுதலைப்புலிகளை ஒருபோதும் முற்றாக அழிக்க முடியாது என்பதை பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக வல்லுனரான பேராசிரியர் றொகான் குணரத்ன தனது பொது அறிவித்தலின் மூலம் தீர்மானிக்க முடியும்.

இதன் பிறகும் இது தொடர்பாக நான் அதிகம் கூறவேண்டுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *