மேலும்

சசி வீரவன்சவுக்கு விளக்கமறியல் – மோசடிக்கு விமல் வீரவன்சவும் உடந்தை

wimal-sashiபோலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இராஜதந்திரக் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை வரும், 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன், அவர் வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம், மாலபேயில் உள்ள மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்ட சசி வீரவன்ச, தொடர்ந்தும், காவல்துறை பாதுகாப்புடன், அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று மாலபே மருத்துவமனைக்குச் சென்ற கொழும்பு பிரதம நீதிவான், சசி வீரவன்சவை 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லத் திட்டமிட்டதாகவும் எனவே அவரது கடவுச்சீட்டை முடக்க வேண்டும் என்றும்  குற்றப்புலனாய்வுத் துறையினர், நீதிவானிடம் கோரியிருந்தனர்.

இதையடுத்து, அவரை வெளிநாடு செல்ல நீதிவான் தடைவிதித்தார்.

sashi-hospital

மருத்துவமனையில் பிள்ளைகளுடன் சசி வீரவன்ச. படம்- அததெரண

அதேவேளை, மோசடியான முறையில் பெறப்பட்ட இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, 2010ம் ஆண்டுக்குப் பின்னர், சசி வீரவன்ச ஆறு  தடவைகள் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

2010 செப்ரெம்பர் 13ம் நாள் வழங்கப்பட்ட D3642817 இலக்கமுடைய இராஜதந்திர கடவுச்சீட்டில், சசி வீரவன்சவின் பெயர், ரன்துனு முதியான்சலாகே சேஹஷா உதயந்தி ரணசிங்க என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவர் முதல் முறையாக 2010 செப்ரெம்பர் 22ம் நாள் கோலாலம்பூர் சென்று வந்துள்ளார்.

அதன் பின்னர், 2011 ஏப்ரல் 10ம் நாள் டுபாய்க்கு ஏழு நாள் பயணத்தை மேற்கொண்டார்.

மீண்டும், அதே ஆண்டு மே 21ம் நாள் டுபாய் சென்ற அவர், 24ம் நாள் நாடு திரும்பினார்.

2011ஒக்ரோபர் 20ம் நாள் மும்பைக்குச் சென்று மறுநாள் திரும்பினார்.

கடந்த ஆண்டு, இரண்டு முறை வெளிநாடு சென்றுள்ளார். ஏப்ரல் 14ம் நாள்  சிங்கப்பூர் சென்ற சசி வீரவன்ச 17ம் நாள் திரும்பினார்.

அதன் பின்னர், ஜூன் 25ம் நாள் வெளிப்படுத்தப்படாத இடம் ஒன்றுக்கு, யுஎஸ் 001… விமானத்தில் சென்றுள்ளார். இது சிறிலங்கா அதிபரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  ஜூன் 30ம் நாள் அவர் நாடு திரும்பியிருந்தார்.

அவர் இராஜதந்திரக் கடவுச்சீட்டை கடைசியாக பயன்படுத்தியது இதன்போதேயாகும்.

அவரது சாதாரண கடவுச்சீட்டு N1284124 என்ற இலக்கத்தில், 2004 மே 24ம் நாள் சீர்ஜா உதயந்தி வீரவன்ச என்ற பெயரில் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ள குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா, முன்னாள் அமைச்சர் என்ற வகையில் விமல் வீரவன்ச எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை அடுத்தே, சசி வீரவன்சவுக்கு இராஜதந்திரக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிரடையே, சசி வீரவன்சவின் தேசிய அடையாள அட்டை தொடர்பான ஆவணங்கள், ஆட்பதிவுத் திணைக்களத்தில் இருந்து காணாமற்போயுள்ளதாகவும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமல் வீரவன்சவும் தனது வயதைக் குறைத்து ஆவணங்களில் மோசடி செய்துள்ளதும் அம்பலத்துக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *