மேலும்

இராணுவ இராஜதந்திரிகளுக்கு மைத்திரி அரசும் பச்சைக்கொடி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாகவும், அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்ட, 16 பேரை உடனடியாக நாடு திரும்ப புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், இவர்களில், முன்னாள் இராணுவ அதிகாரிகளான நால்வருக்கு மட்டும், விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 10ம் நாளுடன் தமது பணிகளை முடித்துக் கொண்டு நாடு திரும்புமாறு, வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தூதுவர் பதவிக்குக் கீழ் பணியாற்றும் 36 பேருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இவர்களில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும்,  முன்னைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

எனினும், அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகளான நான்கு பேருக்கு மட்டும், தமது சேவைக்காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திருப்பி அழைக்கப்பட்டுள்ளவர்களில், பிரசெல்சில் உள்ள முதல் நிலைச்செயலர் தர்சி லொக்குகே (முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேயின் மகள்), ரோக்கியோவில் உள்ள இரண்டாம் நிலைச்செயலர் ஜே.எம்.எஸ்.எல்.பண்டார (முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் சகோதரர்), நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான தூதரகத்தின் இரண்டாம் நிலைச்செயலர் சமித்ரி ரம்புக்வெல (முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகள்), வொசிங்டனில் உள்ள இரண்டாம் நிலைச்செயலர் ஜனத்ரி நாணயக்கார ( முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காவின் பெறாமகள், டுபாயில் உள்ள மூன்றாம் நிலைச் செயலர் தில்ருக்சன் ஜெயசிங்க ( அமைச்சர் சந்திரானி பண்டாரவின் மகன்) ஆகியோரும் அடங்கியுள்ளனர்.

அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்டு திருப்பி அழைக்கப்படும் அதிகாரிகளில், ஆறு பேர் அவுஸ்ரேலியாவில் இருந்து, திருப்பி அழைக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *