மேலும்

யாழ்ப்பாணத்தில் 1000 ஏக்கர் உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

Army_Sentryயாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள, பிரதேசத்தில் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த  அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

முதற்கட்டமாக வலிகாமம் கிழக்குப் பகுதியில் வளலாய் கிராம அதிகாரி பிரிவில் உள்ள 220 ஏக்கர் காணி விடுவிக்கப்படும்.

அங்கு போரினால் இடம்பெயர்ந்த 1022 குடும்பங்கள் முன்னோடியாக மீளக்குடியமர்த்தப்படவுள்ளன.

இங்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 பேர்ச் காணிகள் வழங்கப்படவுள்ளதுடன், அங்கு வீடுகளை அமைக்க நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது.

இங்கு பாடசாலை, ஆரம்ப பாடசாலை, மருத்துவமனை, வழிபாட்டு இடங்கள், சனசமூக நிலையங்கள், மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

ஏனைய 780 ஏக்கர் நிலமும், போரினால் இடம்பெயர்ந்த மக்களை எதிர்காலத்தில், மீளக்குடியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும்.

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில், சிறிலங்காப் படையினர் வசம் 6,152 ஏக்கர் காணிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் பாணமையில் சிறிலங்கா விமானப்படை வசம் உள்ள காணிகளையும், கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயத்தில், அதிபர் மாளிகை, அலரிமாளிகை என்பனவற்றைச் சுற்றியுள்ள கட்டங்களையும் விடுவிக்கவும், அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *