மேலும்

கோத்தா கறைபடுத்திய பாதுகாப்புச் செயலர் பதவி வேண்டாம் – சரத் பொன்சேகா

sarath fonsekaகோத்தாபய ராஜபக்சவின் கறைப்படுத்தப்பட்ட பாதுகாப்புச் செயலர் பதவியைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, பாதுகாப்புச் செயலராகப் பதவியேற்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நான் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு இடமளிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜெயந்த கோத்தாகொட விலகிக்கொள்ளாது போனால், உயர்நீதிமன்றத்துக்குச் செல்வேன்.

பகிரங்கமாக தாம் பதவி விலகுவதாக கூறிய அவர் தற்போது அதற்கு மறுத்து வருகிறார்.

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தம்மைப் பதவி விலகக் கூடாது என்று ஆலோசனை கூறியுள்ளதாக ஜெயந்த கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களும் அவருக்கு இதேபோன்ற ஆலோசனை கூறியுள்ளனர்.

நான் நாடாளுமன்றத்தில் மீண்டும் பிரவேசிப்பதை இப்போதைய அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களும் கூட விரும்பவில்லை.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

எனது இராணுவ அறிவுக்கு எட்டிய வரையில். சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போன்று, விடுதலைப் புலிகளால் செயற்பட முடியாது.

ஆனால் எதையும் எதிர்கொள்ளத் தக்கவகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *