மேலும்

பழிவாங்கல்களுக்கு அஞ்சமாட்டேன் – இந்திய ஊடகத்துக்கு கோத்தா செவ்வி

gotabhaya-rajapakseசிறிலங்கா அரசாங்கத்தினதோ, மேற்கு நாடுகளினதோ பழிவாங்கல்களுக்குத் தாம் அஞ்சப் போவதில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய இணையத்தளம் ஒன்றுக்காக, நிதின் ஏ கோகலேவுக்கு மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“எந்த தரப்பில் இருந்தும் வரும் பழிவாங்கல்களுக்கோ, மேற்குலகின் பழிதீர்க்கும் நடவடிக்கைக்கோ நான் அஞ்சவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடுகளை எதிர்த்து அவர்களின் மீது நடவடிக்கையை மேற்கொண்டபோதே அதன் ஆபத்தை உணர்ந்திருந்தோம்.

நாம் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர போராடினோம். அது எமது நாட்டுக்கு நாம் செய்த கடமை.

அதற்காக நாம் அபாயங்களை எதிர்கொண்டு செய்த தியாகத்தை மக்கள் இன்னமும் மதிக்கிறார்கள்.

ஆட்சியில் இருத்துவதற்கும், அகற்றுவதற்குமான வாக்களிப்பு என்பது வித்தியாசமானது.

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற பின்னர், வின்ஸ்டன் சேர்ச்சில் கூட தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அதற்காக போரை நடத்திய தலைமையை பிரித்தானிய மக்கள் நிராகரித்து விட்டனர் என்று அர்த்தமில்லை.

1980களில் போர் தொடங்கியதில் இருந்து சிறிலங்காவின் எல்லா அரசாங்கங்களுமே,பெரும்பாலான ஆயுத தளபாடங்களை சீனாவிடம் இருந்து வாங்கின. எமது அரசாங்கத்திலும் அது தொடர்ந்தது.

2006ம் ஆண்டு எமது அரசாங்கம் இறுதிக்கட்டப் போரை ஆரம்பித்த போது, தமிழ்நாட்டின் அழுத்தங்களால், இந்தியா எமக்கு ஆயுதங்களை விற்க முடியவில்லை.

இந்தியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிக் கொள்வது சாத்தியமாகியிருந்தால், நிச்சயமாக அதனைச் செய்திருப்போம்.

அந்தக் காலகட்டத்தில் இந்திய பாதுகாப்புச் செயலராக இருந்த விஜய்சிங்கிடம் புதுடெல்லியில் இதுகுறித்து விளக்கியிருந்தேன். அவர் கூட அதனை ஒப்புக்கொண்டிருந்தார்.

போர் தொடங்கியதில் இருந்து முடியும் வரை இந்தியாவுடன் மிக நல்ல உறவு இருந்தது.

எவ்வாறாயினும், கடந்த சில ஆண்டுகளாக,  சீனாவுடனான உறவுகள் குறித்து இந்தியா தவறான கருத்தைக் கொண்டிருந்திருக்கலாம்.

நாம் சீனாவுடன் எப்போதும் மிகச்சிறந்த உறவைக் கொண்டிருக்கிறோம்.

சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன்களின் மூலம் ஒருதொகையான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை சீனாவின் வட்டத்துக்குள் சிறிலங்கா மூழ்கி விட்டதாக, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தவறாக கருதுகின்றனர் என்று நினைக்கிறேன்.

போரின் போது, சிறிலங்கா எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்தியா புரிந்து கொள்வது முக்கியமானதாக இருந்தது.

பரஸ்பர இணக்கப்பாட்டின் அடிப்படையில், நாம், இருதரப்பிலும், மூவர் அணியை உருவாக்கியிருந்தோம்.

இந்தியத் தரப்பில், பாதுகாப்புச் செயலர், வெளிவிவகாரச் செயலர்,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும், சிறிலங்கா தரப்பில் நானும், அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவும், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவும் அந்த அணியில் இடம்பெற்றிருந்தோம்.

இந்த மூவர் அணியில் இருந்தவர்கள், ஒருவர் இன்னொருவருடன் எந்த நேரத்திலும், அது பகலோ, இரவோ நேரடியாகத் தொலைபேசி மூலம் உரையாட முடிந்தது.

சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்ற எல்லா விபரங்களையும், பசில் ராஜபக்ச இந்தியத் தரப்புக்கு அளித்துக் கொண்டிருந்தார்.

இந்தியாவுக்கும் கூட அச்சுறுத்தலான விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் குறித்து இந்தியா நன்றாகவே அறிந்திருந்தது. அந்த புரிதல் எமக்கு உதவியது.

இந்தியாவின் நட்பும் ஆதரவும் சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியம்.

இந்தியாவும் சீனாவும் பல பத்தாண்டுகளாக பதற்றத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால், சிறிலங்கா இந்த இரண்டு நாடுகளுடனும், பாரம்பரியமாக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கிறது.

சீனாவுடனான சிறிலங்காவின் உறவு எப்போதுமே, பொருளாதார நோக்கம் கொண்டது.

கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி எரிபொருள் நிரப்புவதற்காகவே தரித்துச் சென்றது, அதில் எந்த இராணுவ நோக்கமும் கிடையாது.

நாம் அதிகாரத்தில் இருந்தவரையிலும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், அனுதாபிகளும், மீண்டும் தலையெடுப்பதற்கான சாத்தியங்கள் குறித்து விழிப்புடன் இருந்தோம். அந்த விழிப்பு நிலை தொடர்ந்தது.

தமிழ் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக, இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தமிழ்ப் பிரிவினைவாதக் கொள்கை தமிழ்நாட்டின் வழியாகவே, வந்தது.

இந்தியாவில் தமிழ்ப் பிரிவினைவாதம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதுவே சிறிலங்காவுக்கும் பரவியது.

1980களில் தமிழ் தீவிரவாத குழுக்களை ஊக்குவித்து இந்தியா பாரிய தவறை இழைத்துள்ளது.

தவறான மனிதர்களுக்கு மீண்டும் தவறான சமிக்ஞைகளை அனுப்பாமல் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *