மேலும்

புதுடெல்லியை கவலை கொள்ள வைத்துள்ள சிறிலங்காவின் குழப்பமான சமிக்ஞைகள்

Maithri-Liu Jianchaoசிறிலங்காவின் தற்போதைய சிறிசேன அரசாங்கம் தேர்தல் பரப்புரையின் போது சீனாவின் திட்டங்களை எதிர்ப்பேன் என வாக்குறுதி வழங்கிய போதிலும் அதனைத் தற்போது மீறிவருகிறது.

இவ்வாறு இந்தியாவின் கல்கத்தாவில் இருந்து வெளியாகும் TheTelegraph நாளிதழில், சாரு சுதன் கஸ்தூரி எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாதம் வெளிநாட்டிற்கான தனது முதலாவது அதிகாரபூர்வ பயணமாக இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். ஆனால் சீனாவின் அதிருப்தியைத் தணிக்கும் வகையில் சிறிலங்காவின் புதிய அதிபரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இந்திய அரசாங்கத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சிறிலங்கா அதிபர் பெப்ரவரி 16 அன்று இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளையில் இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்வதற்கான நல்லெண்ண சமிக்கைகளைக் காண்பித்துள்ளதுடன், இவர் போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வடக்கிலுள்ள யாழ்ப்பாணத்திற்கும் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடி யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டால், இவரே இந்தியப் பிரதமர் என்ற வகையில் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பிரதமராக இருப்பார்.

தேர்தல் காலத்தின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பாகவே இந்தியா தனது நாட்டிற்கு வருகை தரும் சிறிலங்காவின் புதிய அதிபருடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

‘சிறிசேன அரசாங்கத்திடமிருந்து பலவற்றை இந்தியா எதிர்பார்க்கிறது. அதாவது எமது கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது சிறிசேன அரசாங்கத்திடம் நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். அதிபர் சிறிசேன தற்போது இந்தியாவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளதானது சில உறுதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என நாம் நம்புகிறோம்.

ஆனால் சில முக்கிய விடயங்களில் சிறிலங்கா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என நாம் தற்போதும் காத்திருக்கிறோம்’ என சிறிலங்காவுடன் பல்வேறு தொடர்புகளைப் பேணிய இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை காலை 7.29 மணியளவில் அதாவது சிறிலங்கா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய போது இந்தியப் பிரதமர் மோடி இலங்கையர்களை வாழ்த்தி தனது ‘ருவிற்றர்’ பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

‘நாங்கள் வரலாறு, கலாசாரம் மற்றும் விழுமியங்களை எமக்குள் பகிர்ந்து கொண்டுள்ளமையானது உடைத்தெறியப்பட முடியாத ஒன்றாகும்’ என மோடி குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இம்மாதம் இந்தியாவுக்கு வரவுள்ள அதிபர் சிறிசேனவை வரவேற்பதற்குத் தான் ஆவலாக உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டிருந்தார்.

இந்தியப் பிரதமர் மோடி தனது ருவிற்றர் பக்கத்தில் இலங்கையர்களை வாழ்த்தி செய்தி வெளியிட்டு 45 நிமிடங்களின் பின்னர், சிறிலங்காவின் அதிபர் சிறிசேன மற்றும் இலங்கையர்களுக்கு சுதந்திரதின வாழ்த்துச் செய்தியை சீன அதிபர் சி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக சீன அரசிற்குச் சொந்தமான Xinhua ஊடகம் தனது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

‘சீனாவும் சிறிலங்காவும் பாரம்பரியமாக நட்புடன் பழகுகின்ற அயல்நாடுகளாகும். இவ்விரு நாடுகளுக்குமான உறவுநிலையானது அசைக்க முடியாதது. இது காலம் செல்லச் செல்ல மேலும் உறுதியாகும்’ என சீன அதிபர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

சீன அதிபரின் வாழ்த்துச் செய்தியானது இந்தியப் பிரதமரின் வாழ்த்துச் செய்திக்கு ஒப்பாகக் காணப்பட்டது. சீன அதிபர் தனது வாழ்த்துச் செய்தியில் சிறிலங்காவுடனான சீனாவின் உறவானது ‘அசைக்க முடியாததாகும்’ என வர்ணித்திருந்தார்.

இது இந்தியப் பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த சிறிலங்காவுடனான இந்தியாவின் உறவு ‘உடைத்தெறியப்பட முடியாதது’ என்பதை எதிர்த்து வெளியிடப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் சீனா-சிறிலங்கா உறவுநிலை மேலும் உறுதியாகும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமையானது சிறிலங்காவுடனான சீனாவின் தொடர்பு மேலும் பலப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில் தனது வெளியுறவுக் கோட்பாட்டில் இந்தியாவே முதன்மைப்படுத்தப்பட்டிருப்பதாக சிறிசேனவின் அரசாங்கம் குறிப்பால் உணர்த்தியுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய வெளியுறவுச் செயலர் மங்கள சமரவீர பதவியேற்று நான்கு நாட்களின் பின்னர் முதன் முதலாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்ட வேளையில், சிறிலங்காவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுள் 15 பேரை விடுவிக்கவுள்ளதாக அதிபர் சிறிசேன அறிவித்திருந்தார்.

சிறிலங்கா அதிபராகப் பதவியேற்றுக் குறுகிய காலத்தில் அதிபர் சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவிற்குச் செல்லும் சிறிசேன, சிங்களவர்களான பௌத்தர்களின் வணக்கத்தலமான புத்தகாயவிற்கும் தமிழர்களான இந்துக்களின் புனித தலமான திருப்பதிக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்மூலம் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகளிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சிகளை இவர் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறான நல்லெண்ண சமிக்கைகளை சிறிலங்கா அதிபர் காண்பிப்பதுடன், மீண்டும் மீண்டும் வாக்குறுதிகளை வழங்குகின்ற போதிலும், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் கட்டுமாணத்திட்டங்கள், மின்சக்தித் திட்டங்கள் மற்றும் கலாசாரத் திட்டங்கள் போன்றன தொடர்பில் முக்கிய தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதற்காக இந்தியா தற்போதும் காத்திருக்கின்றது.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போது இந்தியாவால் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட 350 மில்லியன் டொலர் பெறுமதியான சம்பூர் அனல் மின்நிலையம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி போன்றன உள்ளடங்குகின்றன. இத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான காலத்தை சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் வழங்குவதில் ஆர்வங்கொண்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிறிலங்காவின் தற்போதைய சிறிசேன அரசாங்கமானது தேர்தல் பரப்புரையின் போது சீனாவின் திட்டங்களை எதிர்ப்பேன் என வாக்குறுதி வழங்கிய போதிலும் அதனைத் தற்போது மீறிவருகிறார்.

கொழும்பின் புறநகர்ப் பகுதியில்  சீனாவால் மேற்கொள்ளப்படவுள்ள 1.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தை நீக்குவேன் என தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

எந்தவொரு சீனத் திட்டங்களும் நிறுத்தப்படமாட்டாது என சிறிலங்காவின் முதலீட்டுத் துறை அமைச்சர் கபிர் ஹசீம் மற்றும் அவரது பிரதி அமைச்சர் எரன் விக்கிரமட்ன ஆகியோர் கொழும்பிலுள்ள சீனத் தூதுவரிடம் தெரிவித்திருந்தார்.

சூழல் நிலைப்பாடுகள் மீளஆராயப்படும் பட்சத்தில் இத்திட்டங்கள் ஓரங்கட்டப்படலாம் என சிறிலங்காவின் முதலீட்டுத் துறை அமைச்சர்கள், சீனத் தூதுவரிடம் தெரிவித்திருந்தனர். எவ்வித வரையறைகளும் இருந்தாலும் கூட, சீனாவின் கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டமானது தனது பிராந்தியத்திற்கு மூலோபாய அச்சுறுத்தலாக அமையலாம் என இந்தியா கருதுகிறது.

இத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இந்தியக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தின் ஊடாகச் செல்லும் போது சீனா கட்டுப்பாட்டை விதிக்கலாம் என இந்தியா அச்சம் கொள்கிறது. கொழும்புத் துறைமுகத்தின் ஊடாக இந்தியாவின் 70 சதவீத இந்தியக் கப்பல்கள் தற்போது பயணிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *