மேலும்

எக்காரணம் கொண்டும் வடக்கில் படைக்குறைப்பு நடக்காது – படையினருக்கு வாக்குறுதி

Ruwan-Wijewardaneவடக்கில் இருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிலங்காப் படையினரைக் குறைக்கப் போவதில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார்.

வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளை மீளாய்வு செய்வதற்காக, முதல் முறையாக இன்று வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் ருவான் விஜேவர்த்தன.

இன்று பிற்பகல் பலாலிப் படைத்தளத்தில், சிறிலங்கா படையினர் மத்தியில் உரையாற்றிய அவர்,

”எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும்.

எந்தச் சூழ்நிலையிலும் அந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படாது என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.

பாதுகாப்புக் கவலைகள் தொடர்பாக பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளையும், இட்டுக்கட்டிய கதைகளையும் ஆயுதப்படையினர் நம்பக் கூடாது.

ruwan-jaffna

யாழ். குடாநாட்டில் இருந்து எந்தவொரு படைப்பிரிவையும் அரசாங்கம் விலக்கிக் கொள்ளாது, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைத்துக் கொள்ளாது என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

ஆயுதப் படையினருக்கான எல்லா நலன்புரித் திட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.அவர்களின் கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு கற்கைநெறிகள், படிப்புகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். ஐ.நாவுடன் இணைந்து அமைதிப்படையில் கூடுதல் படையினரைச் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகள்,  கூட்டுப்படைகளின் தளபதி சகிதம், யாழ்ப்பாணம் சென்றுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, நாளை கிளிநொச்சிக்குச் சென்று பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *