மேலும்

ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியும் மைத்திரிக்கு ஆதரவு

maithripalaசிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலர் தி.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“எதிர்வரும் அதிபர் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை முழுமையாக பிரயோகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

கடந்த, 1995இல் இந்த நாட்டில் சமஷ்டி முறையிலான தீர்வை பற்றி சிங்கள மக்கள் மத்தியில் பேச முடிந்தது.

இன்று துரதிஸ்டவசமாக இனப்பிரச்சினை நாட்டின் பிரதான கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் போய்விட்டது.

நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் முறையை நீக்குதல், சகல இன, மத சமூகங்களும் சமத்துவமாக வாழ்வதற்கான ஏதுநிலைகள் உருவாகுதல், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான மாகாணசபைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது முழுமைப்படுத்தலுடன், அரசியல் அமைப்பின் 19 வது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு,  17 வது திருத்தச் சட்டத்தை மீளக்கொண்டு வருதல் மூலம் சுதந்திரமான காவல்துறை சேவை, நீதிச் சேவை மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படவேண்டும் என நாம் உணர்கின்றோம்.

ஊழலற்ற, பாரபட்சமில்லாத, மக்களுக்கு நெருக்கமான நிர்வாகம் நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் நிலவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேற்படி எதிர்பார்ப்புக்களுடன் எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொது அணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.

இதற்கிடையே, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *