மேலும்

மகிந்த சிந்தனை வெளியீட்டு நிகழ்வில் ரத்னசிறி பங்கேற்காததால் பரபரப்பு

Rathnasiri Wickremanayakeசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில், மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க கலந்து கொள்ளவில்லை.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ‘மகிந்த சிந்தனை – முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டு வைத்தார்.

இந்தநிகழ்வில் அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க பங்கேற்காதது, அவர் எதிரணிக்குத் தாவலாம் என்ற சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அண்மைய நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் அவர் இதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மெளனம் காத்து வருகிறார்.

இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் ரத்னசிறி விக்கிரமநாயக்கவை அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும், தேடிய போதும், அவர் எங்குமே தென்படவில்லை.

இதையடுத்து. அவர், எதிரணியின் பக்கம் சாயலாம் என்ற ஊகங்கள் மேலும் வலுத்துள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், பண்டாரநாயக்க குடும்பத்தின் தீவிர விசுவாசியுமான ரத்னசிறி விக்கிரமநாயக்க, அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் மீது அதிருப்தியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று ஊகங்கள் வெளியிடப்பட்ட நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பலரும், இன்றைய மகிந்த சிந்தனை வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *