மேலும்

அந்தரிக்கும் ஐந்தரை இலட்சம் அஞ்சல் வாக்காளர்கள்

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் வரலாற்றில், பிரதான வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதிகளை அறிந்து கொள்ளாமலேயே, வாக்களிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகியுள்ளனர் சுமார் ஐந்தரை இலட்சம் வாக்காளர்கள்.

சிறிலங்கா அதிபர் தேர்தலின் ஒரு கட்டமாக, தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச பணியாளர்கள் மற்றும் சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், நாளை முதல் அஞ்சல் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர்.

நாளை 23 மற்றும் 24ம் நாள்களில், அரச பணியகங்கள் மற்றும், படைமுகாம்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களிலும் அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் காவல்நிலையங்களில் வரும் 26ம் நாள் காவல்துறையினர் தமது அஞ்சல் வாக்குகளை அளிக்க முடியும்.

இந்த மூன்று நாட்களிலும் வாக்களிக்கத் தவறுபவர்களுக்கு மாவட்டச் செயலகங்களில், வரும் 30ம் நாள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 541,432 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

Print

வரைகலை – சண்டே ரைம்ஸ்

எனினும், இவர்கள், பிரதான வேட்பாளரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையைப் படித்து அவரது தேர்தல் வாக்குறுதிகளை அறிந்து கொள்ளாமலேயே வாக்களிக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இன்னதாக இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை, வரும் 26ம் நாளே வெளியிடப்படும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

இதனால், இந்த தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்கவுள்ள சுமார் ஐந்தரை இலட்சம் வாக்களர்களும், அவரது தேர்தல் வாக்குறுதிகளை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதைவிட, இந்த தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இன்னமும் அறிவிக்கவில்லை.

இந்தக் கட்சிகளின் முடிவுகளை அறிந்து வாக்களிக்க எதிர்பார்த்திருந்த அஞ்சல் வாக்காளர்களும், இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *