மேலும்

சிறிலங்காவில் சீனக் கடற்படைத் தளம் அமைய வாய்ப்பு – அவுஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்

chinese-submarineகடல்வழிப் பட்டுப்பாதை என்ற கோட்பாட்டின் கீழ், சிறிலங்காவின் கடற்படைத் தளத்தை அமைப்பதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் தன்னை வலுப்படுத்தும் திட்டத்தைச் செயற்படுத்த சீனக் கடற்படை தயாராகியுள்ளதாக, மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் அவுஸ்ரேலிய இந்திய நிறுவகத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் பிரூஸ்டர் தெரிவித்துள்ளார்.

ரோக்கியோவைத் தளமாக கொண்ட டிப்ளோமற் இதழில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“கடல்வழிப்பட்டுப் பாதை மூலம், தெற்காசியாவில் இருந்து ஐரோப்பா வரை பீஜிங் தனது தரைவழி பட்டுப்பாதையை விரிவாக்க முனைகிறது.

துறைமுகங்கள், உட்கட்டமைப்பு திட்டங்கள், சிறப்பு பொருளாதார வலயங்களை இணைக்கும் வகையில், தெற்காசியாவில் இருந்து வட இந்திய பெருங்கடல் வரை இந்த கடல்வழிப் பட்டுப்பாதை உருவாக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை செயற்படுத்தும் போது, இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை, புதிய பொருளாதார நிலையமாக சீனாவுடன் நெருக்கத்துக்குள் கொண்டு வரும்.

சில ஆண்டுகளாக சீனாவுக்கும் அயல்நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்புகள் குறித்து அமெரிக்காவும், இந்தியாவும் கவலை கொண்டுள்ளன.

இந்தப் பிராந்தியத்தில் சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஸ்யா கூட, தமது மூலோபாய பாதுகாப்பு ஒத்துழைப்பு வலையமைப்பை கட்டியெழுப்ப கடுமையாக பணியாற்றுகின்றன.

கடல்வழிப் பட்டுப்பாதை மூலோபாய சமநிலையில் பிரதானமான தாக்கத்தைச் செலுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்தியப் பெருங்கடலில், நம்பகமான கூட்டணிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு சீனா பல தடைகளை தாண்ட வேண்டியிருக்கும்.

எவ்வாறாயினும், பங்களாதேஸ் இராணுவத்துக்கு பிரதானமான ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கும் நாடாக சீனாவே இருந்தாலும், சீனாவிடம் இருந்து நீர்மூழ்கிகளை வாங்கும் தனது பிரதான திட்டத்துக்குப் பதிலாக, ரஸ்யாவிடம் இருந்து இரு நீர்மூழ்கிகளை வாங்கவுள்ளது.

இந்தியாவின் அழுத்தங்களினால், சீனாவின் மேலாதிக்கத்துக்குப் பதிலாக சொனாடியா உள்ளிட்ட தனது ஆழ்கடல் துறைமுகங்களை அனைத்துலக முதலீட்டாளர்களுக்குத் திறந்து விட பங்களாதேஸ் முடிவு செய்துள்ளது.

இந்தப் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு சீனாவுக்கு மிகச் சிறந்த தெரிவாக சிறிலங்கா உள்ளது.

இது சீனாவுக்கு மிக நெருக்கமான மூலோபாய பங்காளியாகவும் விளங்குகிறது.

அண்மைக்காலமாக இராணுவ சம்பந்தமான வசதிகளுக்கு சீனாவுக்கு இடமளிப்பதற்கு சிறிலங்கா தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது கட்ட அபிவிருத்தி திட்டத்தை, பொறுப்பேற்கவும் சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனது விமானப்படைக்கு உதவியாக, வடக்கில் சீனாவின் தளம் ஒன்றை உருவாக்கவும், சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

கொழும்புத் துறைமுகத்துக்கு கடந்த செப்ரெம்பர் மற்றும் ஒக்ரோபரில், சீன நீர்மூழ்கிகள் பயணம் மேற்கொண்ட பின்னர், சீனக் கடற்படை நீர்மூழ்கிகளின் வெளிநாட்டுத் தளமாக சிறிலங்கா மாறக் கூடிய சாத்தியம் உள்ளது.

இந்த ஏற்பாடுகள் எந்தளவுக்கு இருக்கும் என்று இன்னமும் தெளிவாகவில்லை என்ற போதிலும், கொழும்புடனான பீஜிங்கின் பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்தப் பிராந்தியத்தில் பொருளாதாரத் திட்டம் ஒன்றை உருவாக்குவதாக மட்டும் இருக்கவில்லை” என்றும், டேவிட் பிரூஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *