மேலும்

மகிந்தவின் இரகசியங்களை போட்டுடைக்கிறார் சம்பிக்க

MR-champika2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் உரையாற்றிய அவர்,

“சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது அரசாங்கமும், 2005ம் ஆண்டு லண்டனில் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான எமில் காந்தனுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதையும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும், அடிப்படையாக கொண்டதே 2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனை.

ஐதேகவுடன் ஜாதிக ஹெல உறுமய இணைந்துள்ளதாக குற்றம்சாட்டும் சிறிலங்கா அரசாங்கம், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐதேக அரசாங்கம் செய்து கொண்ட உடன்பாட்டின் கீழ், 2005ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியது என்பதை மறந்து விட்டது.

2005ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன், செய்து கொண்ட சில இணக்கப்பாடுகள் எதிர்காலத்தில் தோண்டியெடுக்கப்பட வேண்டும்.

2006ம் ஆண்டு மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் மூடிய போது, அதற்கெதிராக ஜாதிக ஹெல உறுமய பிக்குகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது ஜாதிக ஹெல உறுமயவின் போராட்டத்தை நிறுத்த மகிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுத்தார்.

நாட்டைத் தான் மட்டும் பாதுகாத்ததாக அவர் உரிமை கோர முடியாது.

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறும் நிலை ஏற்பட்டால், ஜாதிக ஹெல உறுமய அதற்கெதிரான நிலைப்பாட்டை எடுக்கும்.” என்றும் சம்பிக்க ரணவக்க  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *