மேலும்

தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டியது முக்கியம் – சுமந்திரன்

Sumanthiranதமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு, வரும் அதிபர் தேர்தல் தீர்வைத் தரப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,

“தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரக்கூடிய தேர்தலாக இது இருக்காது என்ற ஆலோசனையை நாம் தமிழ்மக்களுக்கு கூற விரும்புகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. நாம் எமது மக்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம்.

வாக்களிப்பது மிகவும் முக்கியமானது என்ற அறிவுரையை மக்களுக்கு நாம் கூறுகிறோம்.

தமது வாக்குகளை அளிக்கப்போகின்ற எமது மக்களின் ஆலோசனையைப் பெற்றே நாம் முடிவு எடுக்கவுள்ளோம்.

தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது முற்றிலும் பொய்யானது.

இன்னமும் நாங்கள் எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்று முடிவுக்கு வரவில்லை.

கட்டாயம் வாக்களிக்குமாறு மக்களைக் கோருவது என்று மட்டும் இப்போது முடிவு செய்துள்ளோம். இதனை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுகிறோம்.

ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. வாக்களிக்காமல் விடுவது குறித்தோ, தேர்தலைப் புறக்கணிப்பது குறித்தோ மக்கள் சிந்திக்கக் கூடாது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் எமது பலத்தை வெளிப்படுத்தியது போலவே, இந்த தேர்தலிலும், வாக்களிப்பதன் மூலம் எமது பலத்தை வெளிப்படுத்த முடியும்.

எல்லா தேர்தல்களிலும், குறிப்பாக தேசிய தேர்தல்களில் வாக்களிப்பது ஒரு முக்கியமான கருவி. எமது மக்களுக்கு நாம் கூறும் ஆலோசனை இது ஒன்று தான்.

எல்லாப் பிரிவுகளுடனான எமது கலந்துரையாடல்களையும் நாம் முடித்து விட்டோம். எமது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்.

எமக்குள்ள தெரிவுகள் குறித்து கிராம மட்டத்தில் மக்களின் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள நாம் மக்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்முடன் பேச வேண்டிய தேவை இல்லை என்று ஏற்கனவே கூறிவிட்டது. அவர்கள் எம்முடன் பேச விரும்பவில்லை.

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தேர்தலுக்குப் பின்னரே தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து கலந்துரையாட முடியும் என்று கூறியுள்ளார்.

இரு பிரதான வேட்பாளர்களுமே, தேசியப் பிரச்சனையை ஒரு தேர்தல் விவகாரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை.

வாக்களிக்க முன்னதாக, மக்கள் இதனைக் கருத்தில் எடுத்துக் கொள்வது முக்கியம்.

நாம் தமிழ் வாக்காளர்களை எமது முடிவுக்கு இழுத்து வரவில்லை. நாம் ஒரு பிரபலமான கட்சி என்ற வகையில், மக்களுடன் கலந்துரையாடியுள்ளோம். இந்தக் கலந்துரையாடல் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும்.

நாம் உயர்மட்டத்தில் இருந்து முடிவுகளை எடுக்கவில்லை. எமது முடிவை எடுப்பதற்கு முன்னர், அவர்களின் கருத்துகளை அறிந்து செயற்படுகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *