தமிழர்களை வெளியேற்றி விட்டு திருப்பதியில் தரிசனம் செய்த மகிந்த
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடத்த திருப்பதி செல்ல முயன்ற தமிழ் அமைப்புகளை ஆந்திர காவல்துறையினர் தமிழ்நாடு எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நேற்று மாலை திருப்பதி சென்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நேற்றிரவு பத்மாவதி விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார்.
இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவர் திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சென்று சுப்ரபாத சேவையின் போது ஆலய தரிசனம் மேற்கொண்டார்.
நேற்றுமாலை, மகிந்த ராஜபக்ச திருப்பதிக்குச் சென்ற போது, தமிழ் ஊடகங்களையும் கூட அங்கு அனுமதிக்க ஆந்திர காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திருப்பதி செல்ல முயன்றனர்.
அவர்களை தமிழ்நாடு எல்லையில் உள்ள சூளூர்பேட்டையில் அருகே ஆந்திர காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
75 வாகனங்களும், 250 தமிழர்களும் இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டதாக பிரிஐ தகவல் கூறுகிறது.
இவர்கள் கொடிகளையும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர் என்றும் ஆந்திர காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தமிழ்நாட்டில் இருந்து திருப்பதி செல்லும் வீதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால், திருப்பதி ஆலய தரிசனத்துக்காக செல்லும் பெருமளவு தமிழர்கள் நடுவழியில் நிர்க்கதியாக நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது,
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை 8.30 மணியளவில் திருப்பதியில் இருந்து புஙறப்பட்டு, காலை 9.30 மணியளவில் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து கொழும்பு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.