மேலும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலம் மற்றும் சொத்துக்கள் அபகரிப்பு – குற்றவாளிகள் யார்?

landசிறிலங்காப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விட சட்ட ரீதியற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Camelia Nathaniel எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் போர் முடிவடைந்ததிலிருந்து வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினையானது பல ஆண்டுகளாகப் பேசப்படும் பிரதான விடயமாகக் காணப்படுகிறது. சிறிலங்காப் படைகளே வடக்கில் பெருமளவான நிலப்பரப்பைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் அதேவேளையில், இது தொடர்பாக நிலவும் பிறிதொரு பிரச்சினை இதுவரையில் பேசப்படவில்லை.

அதாவது சிறிலங்காவில் போர் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் மக்களின் நிலங்கள் வேறு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த நிலையில் அதனைத் தமது பொறுப்புக்களில் வைத்திருந்த மூன்றாம் தரப்பினர் இந்த வீடுகளையும் காணிகளையும் தற்போது உரிமையாளர்களிடம் மீளவும் வழங்க மறுக்கின்றனர்.
போர் முடிவடைந்ததன் பின்னர் தற்போது சிறிலங்காவுக்குத் திரும்பி வரும் புலம்பெயர் தமிழர்கள் தமது சொந்த நிலங்கள் மற்றும் வீடுகளைப் பார்க்கச் செல்லும் போது அதனை வேறொரு தரப்பினர் கையகப்படுத்தியுள்ளமை வேதனையை உண்டுபண்ணுகின்றது. இதுதொடர்பாகப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்டுள்ள போதிலும் பல ஆண்டுகளாக இவை தீர்க்கப்படாது நிலுவையிலேயே காணப்படுகின்றன.

சிறிலங்காப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விட சட்ட ரீதியற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால் தனியார்களினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விட இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் அளவே அதிகமாகக் காணப்படுவதாக வேறுசிலர் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில், உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் தனியார்களுக்குச் சொந்தமான 6700 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளையில், வன்னியில் 80 சதவீதமான நிலப்பரப்புக்கள் அரசுக்குச் சொந்தமானவையாகும். இவற்றை அரச அனுமதியுடன் தனியார்கள் கையகப்படுத்தியுள்ளனர். அதாவது அரசுக்குச் சொந்தமான 80 சதவீதமான நிலப்பரப்பையும் பாதுகாப்புப் படையினரோ அல்லது அரசாங்கமோ எடுக்கவில்லை. ஆனால் அரச அனுமதியுடன் இந்தக் காணிகளைப் பயன்படுத்தும் தனியார்கள் இவற்றைத் தமக்குச் சொந்தமாக்கிவிட முடியாது. ஆகவே போரின் போது நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த தமிழர்கள் தற்போது தமது காணிகளுக்கு உரிமை கொண்டாடும் போது அது ஏற்கனவே வேறொருவரால் உரிமை கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக ‘சண்டே லீடர்’ பத்திரிகை வீ.ஆனந்தசங்கரி, எஸ்.தவராசா, கலாநிதி முத்துக்கிருஸ்ணா சரவணந்தன், பொன்னம்பலம் மற்றும் நேரு ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளது.

எஸ்.நேரு: பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற, காவற்துறை அதிகாரி தற்போது யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்துள்ளார்:

“நான் நீண்ட காலமாக பிரித்தானியாவில் வாழ்ந்த பின்னர் எனது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் சென்றேன். ஆனால் தனியார் ஒருவரால் எனது நிலம் அபகரிக்கப்பட்டிருந்தது. எனது நிலத்தில் குடியிருந்ததற்கான எவ்வித வாடகையும் அவர் என்னிடம் தரவில்லை. நான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தேன். இரண்டு ஆண்டுகளாகியும் இது தொடர்பாக எவ்வித தீர்ப்பும் வழங்கப்படவில்லை. இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றில் விவாதிக்கப்படுகின்ற போது, எனது எதிராளியின் சார்பாக வாதிடும் சட்டவாளர் இதனை ஒத்திவைக்குமாறு கோருகிறார். யாழ்ப்பாண நீதிமன்றில் இவ்வாறான நில அபகரிப்பு வழக்குகள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன”

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொதுமக்களின் நிலங்களைப் பாதுகாப்புப் படையினர் கையகப்படுத்தியுள்ளனர் எனக் கூறுகின்றனர். ஆனால் உள்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் பாதுகாப்புப் படையினரை விட பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்துள்ளனர். சிறியதொரு நிலப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் தமிழ் மகன் ஒருவர் அது தனது காணி என வாதிடுகிறார். எனது நிலத்தில் குடியிருப்பவர் எனக்கு வாடகையாக ஒரு சதமேனும் தரவில்லை. ஆனால் இவர் தற்போது எனது நிலத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்”

“இவ்வாறான வழக்குகளைத் தீர்மானிப்பதற்கான எவ்வித வழிகாட்டல்களையும் நீதிமன்றம் கொண்டிருக்கவில்லை. இந்த வழக்குகளை ஆறு மாதங்களுக்கு மேல் இழுத்தடிக்கக் கூடாது என நீதிபதிகளிடம் கூறவேண்டும். வழக்குகளை விவாதிப்பதற்குத் தேவையான நீதிமன்றங்கள் இல்லாவிட்டால் சிறிலங்கா அரசாங்கம் மேலதிக நீதிமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிலத்திற்குச் சொந்தமான உறுதி மற்றும் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடம் நிலத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களில் முடிவெடுக்கக் கூடிய மிகச் சாதாரணமான விவகாரமாக இது காணப்படுகின்ற போதிலும் இந்த வழக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கு 5-6 ஆண்டுகள் எடுக்கின்றன”

“நில உறுதியை அல்லது பத்திரத்தைக் கொண்டிருக்காத எவருக்கும் சிறிலங்கா மின்சார சபை மின்வழங்கலை வழங்கக்கூடாது. வாடகைக்கு குடியிருப்பவராயின் வாடகையை உறுதிப்படுத்தும் பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ வேறெந்த அரசியற் கட்சிகளோ இந்த விவகாரம் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதில்லை”

‘காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயத்தில் 6700 ஏக்கர் நிலப்பரப்புக்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவை பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் சட்டம் மற்றும் ஒழுங்குகளைக் காப்பாற்றுவதற்கான பணிகளை ஆற்றுகின்றனர். இவர்களை வீடுகளை மற்றும் நிலங்களை சட்டரீதியற்ற வகையில் அபகரித்து புலம்பெயர் தமிழ் நில உரிமையாளர்களை ஏமாற்றும் தமிழ் மக்களுடன் ஒப்பீடு செய்ய முடியாது”

கஜேந்திரன் பொன்னம்பலம்: (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளரும் தலைவரும்)

வன்னியில் நிலங்களை அபகரிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடும் போது இது குறைவாகும். போரின் போது நாட்டை விட்டு வெளியேறி தற்போது தமது வீடுகள் மற்றும் நிலங்களைப் பார்வையிடுவதற்காகத் திரும்பி வருவோர் ஏமாற்றப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். இதனால் இவர்களின் நலனுக்கேற்ப சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் இது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தற்போதைய சட்டத்தின் படி, வாடகை வீட்டிலுள்ள ஒருவர் அந்த நிலத்தின் உண்மையான சொந்தக்காரரின் பெயரில் 10 ஆண்டுகள் வரை வசிக்க முடியும். இவர் மின்சார சபை, நீர் சபை மற்றும் அரசாங்கத் திணைக்களங்களில் உரிமையாளரின் பெயரில் மாற்றம் செய்ய முற்படக் கூடாது. இவ்வாறான நிலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் உரிமையை மாற்றம் செய்யாது அந்த நிலத்தில் வாழமுடியும்.

குறித்த நிலத்திற்கு வாடகை வழங்காது பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஒருவர் உரிமையாளர் இல்லாதவிடத்து மின்சார சபையில் தனது பெயரைப் பதிவு செய்து நில உரிமையைத் தனதாக்க முடியும். தனது சொந்த நிலத்தில் வாழும் தனியாருக்குப் பணத்தைச் செலுத்தி தமது சொத்துக்களைச் சிலர் மீண்டும் தமது உடைமையாக்குகின்றனர். பலர் இது தொடர்பாக நீதிமன்றுக்குச் செல்வதில்லை என நான் நினைக்கிறேன். ஆனால் வன்னியில் இது மிகப் பெரிய பிரச்சினையாகும்.

வீ.ஆனந்தசங்கரி (தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரும் கிளிநொச்சி வாசியும்)
 
வன்னியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் 80-90 சதவீத நிலங்கள் அரசிற்குச் சொந்தமானதாகும். இதில் தனியார்கள் அரசின் அனுமதியுடன் வாழ்கின்றனர். அரசாங்கத்தின் அனுமதியின்றி இவ்வாறான நிலங்களை நில அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் ஒருவர் கைமாற்றம் செய்ய முடியாது. போரின் இறுதியில் இவ்வாறான நில அனுமதிப்பத்திரங்கள் வைத்திருந்தவர்களின் நிலங்கள் மீண்டும் அவர்களிடம் வழங்கப்பட்டன. ஆனால் இதற்கென காலவரையறை உள்ளது. அரச நிலத்தை வைத்திருக்கும் ஒருவர் பத்து ஆண்டுகளுக்குள் இதனைத் தமதாக்கிக் கொள்வதற்கான விண்ணப்பத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் பதினொரு ஆண்டுகளின் பின்னர் இதற்கான உரிமையை நாம் கோரமுடியாது. இது சட்ட ரீதியற்றது.

கிளிநொச்சியில் 20 ஏக்கர் தென்னங்காணியை நான் வைத்திருந்தேன். இதனை ஒருவர் கையப்படுத்தியிருந்தார். பின்னர் தற்போது இதில் பத்து ஏக்கர்களை நான் மீளவும் எனது உடமையாக்கிக் கொண்டேன். ஆனால் மீதியை இதனைக் கையகப்படுத்தி வைத்திருந்தவரிடம் கொடுத்துவிட்டேன்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் இந்தச் சூழல் வேறுபட்டது. யாழ்ப்பாணத்தில் எண்பது சதவீத நிலப்பரப்பு தனியாருக்குச் சொந்தமானது. ஏனையவர்களிடம் பொறுப்புக் கொடுத்து விட்டு மக்கள் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்திருந்தனர். இவர்கள் தமது நிலங்களைப் பொறுப்பாக ஒப்படைத்தவர்களுடன் சமரசம் பேசி அல்லது ஏதாவது உடன்பாட்டை எட்டுவதன் மூலம் தமது நிலங்களை மீளவும் பெற்றுக் கொள்ள முடியும்.

கலாநிதி முத்துக்கிருஸ்ணா சரவணந்தன் (பருத்தித்துறை அபிவிருத்தி நிலையத்தின் பிரதான ஆய்வாளர்)
 
ஒருவர் ஒழுங்காக வாடகை கொடுக்கும் போது மட்டுமே குறித்த சொத்தைத் தனது உடமையாக்க முடியும் என சட்டம் கூறுகிறது. ஆனால் பல வழக்குகளில் வாடகை வழங்கப்படவில்லை. வேறுவிதமாகக் கூறினால் நிலத்தை அபகரித்து வைத்திருப்பவருக்கு எதிராக சட்டம் மூலம் அணுகும் போது அவர் அதனை உரிமையாளரிடம் கையளிக்க வேண்டும். நில உரிமையாளரும் நிலத்தை அபகரித்து வைத்திருப்பவரும் சமரசப் பேச்சுக்களின் மூலம் இந்தப் பிரச்சினையை அணுகமுடியும். ஒரு நிலத்தில் குடியிருப்பவரை அங்கிருந்து அகற்றுவதற்கு நில உரிமையாளர் பணம் கொடுப்பது வழமையான செயலாகும். சில இடங்களில், நிலத்தில் தங்கியிருப்போர் வேறு இடத்திற்குச் செல்வதற்கான கால அவகாசம் வழங்கப்படுகிறது. பருத்தித்துறையில் மயிலிட்டி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு நிலங்களில் குடியேற்றப்பட்டனர். இந்த நிலங்களின் சொந்தக்காரர் வந்தபோது இவர்கள் நிலங்களை விட்டு வெளியேறினர்.

எஸ்.தவராசா (ஈ.பி.டி.பி வடக்கு மாகாண சபை உறுப்பினரும் வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சியின் தலைவரும்)

தனியாரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மற்றும் வீடுகளை மீளப்பெற்றுக் கொள்வதில் இதுவரை எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. நில உரிமையாளர்கள் தம்மிடமுள்ள அல்லது அரச அதிபர் பணிமனையிலுள்ள நில ஆவணங்களைக் காண்பித்துத் தமது நிலங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளமுடியும்.

வடக்கில் பத்து ஆண்டுகளாக வேறொருவரின் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர் அந்த நிலத்தைத் தனதாக்க முடியாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சட்டத்தில் திருத்தம் ஒன்றை முன்வைத்தார். இது போரின் போது நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்காகவே முன்வைக்கப்பட்டது. ஆனால் இது சட்டத்தில் இணைக்கப்படுமா என்பது சந்தேகமே. சில தொழினுட்பப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இதனை எதிர்த்து த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையை என்னால் நினைவுபடுத்த முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *