மேலும்

‘பாப்பரசர் சிறிலங்காவுக்கான பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்’ – சிறிலங்கா வாழ் பிரதிநிதிகளும் மதகுருமார்களும் வேண்டுகோள்

“சிறிலங்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஐந்து நாட்களின் பின்னர் பாப்பரசர் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சிறிலங்கா அரசாங்கமானது இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன், மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு பாப்பரசர் அவர்கள் தனது ஆதரவை வழங்குவதாக பரப்புரை மேற்கொள்வதால் இந்தப் பயணத்தைப் பிற்போடவேண்டும்”

அடுத்த ஆண்டு ஜனவரி 13 அன்று பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்வதாகத் திட்டமிட்டுள்ள நிலையில், பாப்பரசர் அவர்கள் இந்தப் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிறிலங்காவில் உள்ள றோமன் கத்தோலிக்கத்தைச் சேர்ந்த முன்னணி மதகுருமார்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஐந்து நாட்களின் பின்னர் பாப்பரசர் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சிறிலங்கா அரசாங்கமானது இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன், மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு பாப்பரசர் அவர்கள் தனது ஆதரவை வழங்குவதாக பரப்புரை மேற்கொள்வதால் இந்தப் பயணத்தைப் பிற்போடவேண்டும் என சிறிலங்கா வாழ் பிரதிநிதிகளும் கத்தோலிக்க மதகுருமார்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
17ம் நூற்றாண்டில் அனுப்பப்பட்ட ஜோசப் வாசு சிறிலங்காவின் முதலாவது திருத்தூதராகப் பணியாற்றி புனிதப்பேறு பெற்றதற்கான திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்காகவே பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் இடம்பெறவேண்டிய அதிபர் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடாத்தப்படவுள்ளதாக நவம்பர் 20 அன்று அறிவிக்கப்பட்டவாறு ஜனவரி 08 அன்று மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளதானது சிறிலங்கா வாழ் கத்தோலிக்கர்களின் மனங்களை மிகவும் ஆழமாகக் காயப்படுத்துவதாக கத்தோலிக்க பத்திரிகையான The Messenger இன் முன்னாள் ஆசிரியர் ஹெக்ரர் வெல்கம்பொல குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் போன்றன திரு.ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாப்பரசர் அவர்கள் ஆசிர்வதித்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகின்றன. “அவருடைய பரிசுத்தமான ஆசிர்வாதத்தால் நீங்கள் எமது அதிபராவீர்கள்” என ஒரு பதாகையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒக்ரோபரில் வத்திக்கானில் சிறிலங்கா அதிபரும் அவரது மனைவியும் பாப்பரசர் அவர்களைச் சந்திக்கும் போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களும் ஒட்டப்பட்டுள்ளன.

“இவ்வாறான அரசியற் பதாகைகள் தேர்தல் பரப்புரைக்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. 303 ஆண்டுகளாக கத்தோலிக்கர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் மிகவும் புனிதமான நிகழ்வில் அரசியலைப் புகுத்திக் களங்கப்படுத்தியுள்ளமையானது கத்தோலிக்க மதகுருமார்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என திரு.வெல்கம்போல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாப்பரசர் அவர்களின் சிறிலங்காவுக்கான பயண அறிவிப்பானது சிறிலங்கா வாழ் கத்தோலிக்க திருச்சபைக்குள் இரு வேறு பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த ஒரு சாரார் சிறிலங்கா அரசாங்கத்தை உத்தியோகபூர்வமாக ஆதரிப்பதுடன், மறுசாரார் தேர்தற் காலத்தில் பாப்பரசர் சிறிலங்காவுக்கு வருகை தருவதை எதிர்த்து நிற்கின்றனர். அரசியல் முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக வழமையாக தேர்தற் காலங்களில் பாப்பரசர் எவ்வித உத்தியோகபூர்வ பயணங்களையும் மேற்கொள்வதில்லை.

பாப்பரசர் அவர்களின் சிறிலங்காவுக்கான பயணம் திட்டமிடப்பட்டவாறு இடம்பெறும் எனவும், பாப்பரசர் மற்றும் கத்தோலிக்க திருச்சபையைக் குறிக்கும் தேர்தற் கால பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் சிறிலங்கா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கத்தோலிக்க உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

பாப்பரசர் அவர்களின் சிறிலங்காவுக்கான பயணமானது அரசியலாக்கப்பட்டுள்ளது எனவும் சிறிலங்காவில் தேர்தலுக்குப் பின்னான வன்முறைகள் பொதுவானவை எனவும் சிறிலங்காவிலுள்ள ஆயர்களுக்கு எழுதிய கடிதத்தில் உயர் மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பாடல் இயக்குனர் வணக்கத்திற்கு லியோ பெரேரா தெரிவித்துள்ளார்.

“தேர்தற் காலத்தில் பாப்பரசர் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்வதானது அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் எனவும் அரசியல் ரீதியான குழப்பங்கள் மற்றும் முரண்பாடுகள் நிலவும் தற்போதைய சூழலில் சிறிலங்காவுக்கான பாப்பரசரின் வருகையானது அவரது பணியைத் தவிர்க்க முடியாதளவு களங்கப்படுத்தும். தேர்தற் காலத்தில் பாப்பரசர் இங்கு வரவேண்டும் என அழுத்தம் கொடுப்பதானது சிறிலங்காவில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு மேலும் அழிவை ஏற்படுத்தும்” என பெரேரா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் வரை திரு.ராஜபக்ச தேர்தலில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை மேற்கொண்டு அடுத்த நாள் இவரது சுகாதார அமைச்சர் தனது பதவியிலிருந்து விலகி எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். இவருக்குப் பின்னர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவினர். ஆளுங்கூட்டணியில் அங்கம் வகித்த சில கட்சிகளும் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டன. தற்போது சிறிலங்கா அதிபர் உண்மையான போட்டியை எதிர்கொள்வதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

எதுஎவ்வாறிருப்பினும், இவ்வாறான சவால்கள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் வெல்லப்பட வேண்டும். பாப்பரசரின் சிறிலங்காவுக்கான வருகையானது தேர்தற் பரப்புரையின் போது விவாதிக்கப்படலாம் எனவும் கத்தோலிக்க மனித உரிமைகள் சட்டவாளர் றுக்கி பெர்னாண்டோ, பிரான்சிஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மொத்த சனத்தொகையான 20 மில்லியனில் ஆறு சதவீதத்தினர் றோமன் கத்தோலிக்கர்கள் என புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செய்தி வழிமூலம் : By DHARISHA BASTIANS ‘The New York Times’
மொழியாக்கம் : நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *