முக்காற் பங்கு போரை வென்றது நானே – மார்தட்டுகிறார் சந்திரிகா
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரின் முக்காற் பங்கைத் தானே வெற்றி கொண்டதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, எதிரணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்தியதும் அதில் வெற்றி கொண்டதும் சரத் பொன்சேகாவே.
போரின் 75 வீதம், எனது அரசாங்கத்தினாலேயே வெற்றி கொள்ளப்பட்டது.
நாம் விட்டு வைத்த எஞ்சிய 25 வீதத்தை மட்டும் தான் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றிகண்டது.
இருப்பினும், போர் முடியும் போது, நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேனவே” என்றும் சந்திரிகா குமாரதுங்க மேலும் கூறியுள்ளார்.
மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் நேற்று நடந்த எதிரணியின் பிரமாண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, கரு ஜெயசூரிய, மங்கள சமரவீர உள்ளிட்ட எதிரணித் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
சிறிலங்கா காவல்துறையினர், ஒலிபெருக்கிகளை நிறுத்தியும், மின்சாரத்தை தடை செய்தும் இந்தக் கூட்டத்தை குழுப்ப முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.