மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டி

elections_secretariatஅடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 10 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில் 9 பேர் அரசியல் கட்சிகளின் சார்பிலும், ஒருவர் சுயேட்சையாகவும் போட்டியிடவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒக்கம வெசியோ, ஒக்கம ரஜவரு கட்சி சார்பில் தாமினிமுல்ல, சமாஜவாடி சமந்த கட்சி சார்பில் பானி விஜேவர்த்தன, ஐக்கிய சோசலிசக் கட்சி சார்பில் சிறிதுங்க ஜெயசூரிய, எக்சத் லங்கா மகா சபா கட்சி சார்பில் கலாநிதி நாத் அமரகோன், சிறிலங்கா ஜாதிக பெரமுன சார்பில் விமல் கீகன்னே, ஜனசெத பெரமுன சார்பில் பத்தரமுல்ல சீலாரத்ன தேரர், மற்றும் சுயேட்சையாக ஐ.எம்.இல்யாஸ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இன்று காலை ஐக்கிய சமாதான முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு, எம்.ஐ.எம்.நில்சார் சார்பில் தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அதிபர் தேர்தலில், அஞ்சல் மூலம் வாக்களிக்க அரச பணியாளர்கள் விண்ணப்பிக்க இறுதி நாள் நாளையாகும்.

இதற்குப் பின்னர் கால நீடிப்புச் செய்யப்படாது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் அமரதாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23, 24ம் நாள்களில் அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

இந்த நாட்களில் தவறியவர்கள் எதிர்வரும் 30ம் நாள் மாவட்டச் செயலகங்களில் அஞ்சல் வாக்குகளை அளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *