மேலும்

”அதிபர் மாளிகையில் காலடி வைக்கமாட்டேன்” – மைத்திரி சூளுரை

maithri-hidepark (1)அடுத்தமாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், அதிபர் மாளிகையில் காலடி எடுத்து வைக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

கொழும்பில், ஹைட் பார்க்கில் நேற்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

“அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அதிபர் மாளிகையில் காலடி எடுத்து வைக்கமாட்டேன். அது எனக்குரிய இடம் அல்ல.

ஏனென்றால் நான் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான ஆணையையே கோரியுள்ளேன்.

அதிபராகப் பதவியேற்ற 100 நாட்களுக்குள், அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

போருக்குப் பின்னர், சட்டம் ஒழுங்கு இல்லாத, ஊழல், குழப்பங்களுக்குள் வீழ்ந்து விட்ட நாட்டை, அதில் இருந்து மீட்கும் பணியையே நான் மேற்கொள்ளவுள்ளேன்.

18வது திருத்தச்சட்டத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்ட, சுதந்திர ஆணைக்குழுக்கள் மீள நிறுவப்படும்.

தகவல் உரிமைச் சட்டமும், புதிய தேர்தல் முறையும் துரிதமாக நடைமுறைப்படுத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

maithri-hidepark (1)

????????

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் 9வது இடத்தில் தந்தையும், 14வது இடத்தில் மகனும் இருக்கின்றனர் என்று மகிந்த ராஜபக்சவையும், நாமல் ராஜபக்சவையும் சுட்டிக்காட்டினார்.

முன்னார் அதிபர் சந்திரிகா குமாரதுங்க இங்கு உரையாற்றிய போது அலரி மாளிகைக்கான மாதாந்த உணவுச்செலவு 25 மில்லியன் ரூபா என்றும், அதைவிட பழங்களுக்காக மாதம் தோறும் 5 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் தகவல் வெளியிட்டார்.

ஊழல்மிக்க ராஜபக்ச அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை விட்டுச் செல்வதை தடுப்பதற்காக அவர்களுக்கு 250 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் சந்திரிகா குற்றம்சாட்டினார்.

cbk

“எங்களைத் தேசத் துரோகிகள் என்றும், 100 நாட்களுக்குள் நாட்டை புலிகளிடம் கொடுக்கப் போவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் பரப்புரை செய்கிறது.

ஆனால் தேசத் துரோகிகள் எம்மத்தியில் இல்லை. துரோகிகளை அரசாங்கத்தில் வைத்திருப்பது ராஜபக்ச ஆட்சி தான்.

பெருமளவு பொதுமக்களை கொன்று குவித்த கருணாவை அமைச்சராக வைத்திருக்கிறார்.

புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் குமரன் பத்மநாதனுக்கு முக்கிய பிரமுகர்களுக்காக வசதிகள் வழங்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *