மேலும்

ஒட்டுசுட்டான் காட்டில் புதைகுழி தோண்டும் பணி ஆரம்பம் – சாம்பல் மட்டுமே கிடைத்தது

mass-gravesமுல்லைத்தீவில், விடுதலைப் புலிகளால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஜெயரட்ணம், இராணுவ அதிகாரி கப்டன் லக்கி உள்ளிட்ட 80 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை அகழும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பெரியஇத்திமடு என்ற இடத்திலேயே இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் போது, நான்கு சாட்சிகள் தெரிவித்த தகவல்களை அடிப்படையாக கொண்டு, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எம்.ஐ.வஹாப்தீனின் உத்தரவுக்கமைவாக இந்த அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் இந்த அகழ்வு நடவடிக்கைக்கு, அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள், சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் கொழும்பு ஜயவர்தனபுர, ரஜரட்ட ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நிபுணர்கள் உதவி வருகின்றனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது கொல்லப்பட்டவர்களின் உடல்எச்சங்களோ அல்லது வேறு எந்த தடயப் பொருட்களோ மீட்கப்படவில்லை.

mass-graves

ஆயினும் கொல்லப்பட்டவர்கள் எரியூட்டப்பட்டதற்கான அடையாளங்களைக் கொண்ட தடயங்களை இராசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் சேகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த அகழ்வு நடவடிக்கை இன்றும் நாளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *