மேலும்

கோத்தாவும் பரப்புரையில் இறங்கினார் – தேர்தல் விதிமுறையை மீண்டும் மீறுகிறார்

gotabaya-rajapakseவரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார்.

பேருவளையில் நேற்று முஸ்லிம்களைச் சந்தித்த அவர், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பளிக்கும் என்றும், மீண்டும் அவரையே தெரிவு செய்யுமாறும் கோரியுள்ளார்.

முஸ்லிம்களுக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான தொடர்பை துண்டித்து அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னலிருந்து சதித்திட்டங்களை மேற்கொள்கின்றன.

முஸ்லிம்கள் இவர்களின் தீயவலையில் சிக்காது புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு நூற்றுக்கு ஐநூறு வீதமான பாதுகாப்பை வழங்குவதற்கு சிறிலங்கா அதிபரும் அரசாங்கமும் என்றும் தயாராக இருக்கிறது.

முஸ்லிம்கள் எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் தீர்மானம் கொண்டு வந்த போது அரபு நாடுகள் சிறிலங்காவுக்கு சார்பாக இருந்ததை எம்மால் மறக்க முடியாது.

ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக இந்நாட்டு முஸ்லிம்கள் ஒன்று திரண்டு அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியதையும் மறக்க முடியாது.

அந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தான் சிறிலங்கா அதிபருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை தூரமாக்குவதற்கு சில தீய சக்திகள் கங்கணங்கட்டி செயற்பட தொடங்கின.

கொழும்பிலுள்ள முஸ்லிம்களை அப்புறப்படுத்துவதாக பொய்யான பரப்புரைகளையும் மேற்கொண்டனர்.

இவ்வாறான போலியான பரப்புரைகளின் மூலம் மூஸ்லிம் மக்களின் ஆதரவை தம் பக்கத்திற்கு இழுத்துக் கொள்வதற்கு சில சக்திகள் செயற்பட்டு வருகின்றன.

பொய் பரப்புரைகளைச் செய்து முஸ்லிம்களை திசைதிருப்ப முனைவது கவலைக்குரிய விடயமாகும்.

இதற்கு முன்பிருந்த அரசாங்கத்தின் காலத்திலும் இன வன்முறைகள் ஏற்பட்டதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.

அக்காலத்தில் நாம் செய்ததைப் போன்று மீள்புரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படவில்லை.

பல்வேறு தியாகங்கள், சவால்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட சமாதானத்தை தவிடுபொடியாக்கி விட முடியாது.

மகிந்த ராஜபக்ச நாட்டை பொறுப்பேற்கும் போது நாடு இரண்டாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் இந்நாட்டு முஸ்லிம்களின் முழுமையான ஆதரவு அதிபர் மகிநத ராஜபக்சவுக்கு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, ஒரு அரசஅதிகாரியாக இருந்து கொண்டு அரசியல் பரப்புரைகளை மீண்டும் மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே மேல் மாகாணசபைத் தேர்தலில், உதய கம்மன்பிலவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு கேட்ட அவர் பின்னர், அதற்காக சிறிலங்கா தேர்தல் ஆணையாளரிடம் மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *