மேலும்

மகிந்தவுக்கு கொடுத்த ஆதரவை மறுபரிசீலனை செய்யும் கூட்டணிக் கட்சிகள்

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக எதிரணி அறிவித்துள்ள நிலையில், ஆளும்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் தமது முன்னைய முடிவுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க இணங்கியிருந்த, மலையக மக்கள் முன்னணி, தமது முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யவுள்ளதாக கூறியுள்ளது.

மலையக மக்களின் வீடமைப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில் தமது கட்சி முன்வைத்திருந்த கோரிக்கைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபரிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்காத காரணத்தினாலேயே தமது கட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் தலைவரும் அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான கட்சியின் நிலைப்பாடு அடுத்தவாரம் நடக்கவுள்ள கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும்.

ஏற்கனவே மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தாங்கள் அறிவித்திருந்த போதிலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எமது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

எமது கோரிக்கைகள் தொடர்பில் பொது எதிரணியின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது பற்றியும் சிந்திக்க முடியும்.

அமைச்சர் பதவி கொடுத்ததற்காக அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஆமாம் சாமியாக இருக்க முடியாது”  என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது, மற்றும் ஆளும் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா என்பது குறித்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று கூடி ஆராய்ந்துள்ளது.

உள்ளூராட்சி சபைகள், மாகாணசபைகள்  மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் மக்களின் மன உணர்வுகளும் எண்ணங்களும் இந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டதாக அதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

“இந்தக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களை உள்வாங்கி கட்சியின் உயர்பீடம் விரைவில் இறுதி முடிவை எடுக்கும்.

இந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை, இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வரை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்றைய முஸ்லிம் சமூகத்தின் நிலை சம்பந்தமாக அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்திகளை பிரதிநிதிகள் வெளிப்படுத்தியிருந்தார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இன்று முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *