மேலும்

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இன்று மாலை 5 மணி

sri lanka parliamentசிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பெருமெடுப்பிலான கட்சித் தாவல் இடம்பெறலாம் என்று ஊடகங்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில், தோல்வியடைந்தால், அரசியலமைப்பு விதிகளின் படி நாடாளுமன்றம் இயல்பாகவே கலைக்கப்பட்டு விடும்.

அதன் பின்னர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையாளருக்கு புதிய தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தல் விடுக்க வேண்டும்.

இன்று அதிகளவிலான அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசதரப்பில் இருந்து கட்சி தாவவுள்ளதாக, எதிரணியினர் கூறி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று பெரியளவில் கட்சி தாவல் இடம்பெற்றால், வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

எனினும் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.

எனினும், ஏற்கனவே, ஆளும்கட்சியில் இருந்து ஜாதிக ஹெல உறுமய மற்றும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளியேறியுள்ளதால், 2010ம் ஆண்டில் இருந்து ஆளும்கட்சிக்கு கிடைத்து வந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று கண்டிப்பாக சபை அமர்வு முடியும் வரை நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் வரலாற்றில், 1960ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் தோல்வியுற்றதையடுத்து, பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்க உடனடியாகவே பதவி விலகியதுடன், நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *