மேலும்

மகிந்தவைச் சந்தித்தார் மைத்திரிபால சிறிசேன – கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு

maithripala-mahindaசிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அவர் இன்று காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளார்.

அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிரணியின் பக்கம் தாவ மைத்திரிபால சிறிசேன தயாராகிவிட்ட நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தும் இறுதிக்கட்ட சமரச முயற்சியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மைத்திரிபால சிறிசேன இன்று மதியம் பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, இதுவே தான் பங்கேற்கும் இறுதியான அரச நிகழ்வாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிகார துஸ்பிரயோகம்,ஊழலுக்கு எதிரான கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.

ஐந்து ஆண்டுகள் சுகாதார அமைச்சராக இருந்து சேவையாற்றி விட்டேன். எதிர்காலத்தில் நான் நாட்டுக்காக என்னை அர்ப்பணிப்பேன்

காலம் பலவற்றை மாற்றுகின்றது. நாம் காலத்திடம் எல்லாவற்றையும் சமர்ப்பித்து விட்டு காத்திருப்போம்.

நான் கலந்து கொள்ளும் இறுதி அரசாங்க நிகழ்வு இதுவாகவும் இருக்கலாம்.

சொத்துக்களை குவிப்பதற்காக மக்கள் எமது கைகளில் அதிகாரத்தை வழங்கவில்லை. ஊழல், மோசடிகளைச் செய்வதற்காகவும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை.

அதிகாரம் கிடைத்துவிட்டது என்ற மமதையில் அந்த அதிகாரத்தை  தவறாகப் பயன்படுத்தக் கூடாது.

அந்த அதிகாரத்தில், மக்களை அடிபணியச் செய்யவும் கூடாது. அத்துடன், அதிகாரத்தின் போதையில் நாம் சிக்குண்டிருக்கவும் கூடாது.

பொதுமக்களின் பொறுப்பாளன், ஒருபோதும் அந்த மக்களை அடிமைகளாக்கி நசுக்கக் கூடாது’ என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *