உயிர்த்தெழும் சாட்சியங்கள்! – டி.அருள் எழிலன்
தங்களின் வரலாற்று வலியை, இன அழிப்பின் வேதனையை வலிமிகுந்த சினிமாவாகப் பதிவுசெய்ய ஆரம்பித்திருக்கிறார்கள், உலகம் முழுக்க உள்ள ஈழத் தமிழர்கள். போர் தந்த துயரங்களை லண்டன், பிரான்ஸ், நார்வே, ஆஸ்திரேலியா, ஜெர்மனி… போன்ற நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறை, திரைப்படங்கள் மூலம் பேசுவதால் மேற்கு உலக நாடுகளில் ஈழ சினிமா வேர்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
நன்றி : ஆனந்த விகடன் 26 Nov, 2014
‘ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்’
இரண்டே திரைப்படங்களின் மூலம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்திருக்கிறார் லெனின் எம்.சிவம். கனடா தலைநகர் டொரான்டோவில் வசிக்கிறார். இவரது ‘1999’ என்ற படமும், ‘ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்’ (Gun & Ring) என்ற படமும் உலக அளவில் பேசப்படுகின்றன. போரின் வடுக்களும் பேரினவாதத்தின் துரத்தல்களும் உலகெங்கும் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழர்களையும் கூட விடாமல் துரத்துவதுதான் லெனின் படங்களின் பேசு பொருள்.
”இலங்கை வடமராட்சி உடுப்பட்டியில் நான் பிறந்தேன். என் அப்பா வி.எம்.எல்.சிவம், இலங்கையில் தயாராகி வெளிவந்த ‘மீனவப் பெண்’ படத்தின் கதாநாயகன். யுத்த நெருக்கடிகளால் ஈழத் தமிழர்களின் சினிமா முயற்சிகள் தேங்கிப்போக, அப்பாவும் அங்கு வாழ முடியாமல் கனடாவுக்கு இடம்பெயர்ந்தார். நான் 17 வயதில் கனடா வந்தேன். சினிமா எடுக்க வேண்டும், அதுவும் ஈழ மக்களுக்கான சினிமாவாக இருக்க வேண்டும் என்பது என் கனவு. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட முக்கியப் பிரச்னை, எங்கள் இளைஞர்களிடயே பரவிவந்த வன்முறை கலாசாரம். தஞ்சம் கோரிக் குடியேறிய ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறை வன்முறைப் பாதையில் சென்றது. குழு மோதல்கள், தலைமறைவுத் தொடர்புகளில் ஈடுபட்டு பலர் மரணித்தும் போனார்கள். அதை மையமாக வைத்து ‘1999’ படத்தை எடுத்தேன். சேனல் 4 வெளியிட்ட ‘ஸ்ரீலங்கா கொலைக்களங்கள்’ ஆவணப் படத்தைப் பார்த்தபோது அது எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. யுத்தத்தை நேரடியாக எதிர்கொள்ளாத எனக்கே இவ்வளவு பாதிப்பு இருக்கும்போது, அதை எதிர்கொண்ட மனிதர்கள் எவ்வளவு வதைகளை அனுபவித்திருப்பார்கள் என உருவானதுதான் ‘ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்’ படம்.
ஷாங்காய் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் தேர்வான முதல் தமிழ் சினிமா இது. மான்ட்ரியல் உலகத் திரைப்பட விழா உள்பட பல திரைப்பட விழாக்களிலும் கவனம் பெற்றது. போர் என்பது தாக்குகிறவர், தாக்குதலுக்கு உள்ளாகிறவருடன் மட்டும் முடிந்துபோவது இல்லை; அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அது துயரங்களைத் தருகிறது. தனிமையோடு புலம்பெயர்ந்த ஒவ்வொரு ஈழத் தமிழனையும் துரத்துகிறது. இவற்றை என் படத்தில் பதிவுசெய்தேன். போரை எதிர்கொண்ட நாங்களே எங்கள் பிரச்னைகளைப் பேசும்போது, அதற்குக் கூடுதலான அழுத்தமும் கவனமும் கிடைக்கின்றன” என்கிற லெனின் எம்.சிவம், 1983 – ஜூலைக் கலவரத்தை மையமாகவைத்து அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.
‘காட் இஸ் டெட்’
300 யூரோ செலவில் சதா பிரவணன் எடுத்த ஒரு நிமிடப் படம், ‘காட் இஸ் டெட்’. இது வாங்கிக்குவித்த பரிசுத்தொகையோ 6,000 யூரோவுக்கு மேல். தன் அடுத்த படத்துக்கான நிதியை ஒரு தனியார் வங்கியின் ஸ்பான்ஸரில் பெற்றிருக்கும் சதா பிரவணன் வசிப்பது பிரான்ஸில்.
”இதற்கு முன்னர் ‘இன்று 27’ என்ற குறும்படத்தை எடுத்தேன். ‘நவம்பர்- 27’ அன்று, மாவீரர் தினத்தை புலம்பெயர் தமிழர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். ஆனால், அதிலும் ஒற்றுமை இல்லாமல் யாருக்கு அதிகக் கூட்டம் கூடுகிறது, யார் உண்மையானவர்கள் என்பதுபோல பல குழுக்கள்… எனக் கூட்டம் சேர்ப்பதற்காக இவர்கள் நடத்தும் அப்பட்டமான அரசியலை விமர்சித்து, ‘இன்று 27’ என்ற படத்தை எடுத்தேன். அடுத்து சகோதர யுத்தம், போராளிக் குழுக்களுக்கு இடையேயான முரண்பாடுகள் பற்றி ‘போராளிக்கு இட்ட பெயர்’ என்றொரு படமும் எடுத்தேன். இந்த இரு படங்களின் தொழில்நுட்பமும் கதை சொல்லும் விதமும் சிறப்பாகப் பேசப்பட்டன.
இந்தப் படங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான், பிரான்ஸில் உள்ள தனியார் வங்கி நடத்திய திரைப்பட விழாவின் ஓர் அங்கமாக ‘மொபைல்’ குறும்பட விழா அறிவிப்பு வெளிவந்தது. ராணுவத்தின் சித்ரவதைக்குள் சிக்கிக்கொண்ட ஒரு குடும்பத்தின் துயரை, ஐ-போன் மூலம் ஒரே ஷாட்டில் ஒரு நிமிடப் படமாக எடுத்தேன். அந்தத் திரைப்பட விழாவில், சிறந்த படமாக அது தேர்வாகி சுமார் 3,000 யூரோ பரிசும் கிடைத்தது. கொரியன் சர்வதேசத் திரை விழாவில் மொபைல் படப் பிரிவில் முதல் பரிசை வென்று, அங்கும் பரிசுத்தொகையாக 3,000 யூரோக்களுக்கு மேல் கிடைத்தது. கடவுளாலும் கைவிடப்பட்ட மக்கள் நாங்கள். இப்போது நாங்கள் பேசத் தொடங்கியிருக்கிறோம்” என்கிறார் சதா பிரவணன்.
‘ஏதிலிகள்’
தன் குழந்தையைப் போரில் பறிகொடுத்த பெண், லண்டன் வந்த பின் அனுபவிக்கும் மனத் துயரமும் அதன் பாதிப்புமே ‘ஏதிலிகள்’ படம்.
”நினைவுகள் எங்களைத் துரத்திக்கொண்டிருக்கின்றன. யுத்தத்தின் வடுக்களில் இருந்து நாங்கள் மீண்டுவர இன்னும் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எங்களின் பிரச்னைகளை நாங்கள் உலகுக்கு நினைவுபடுத்த வேண்டிய தேவை இருப்பதால் குறும்படங்கள் மூலமாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் பேசுகிறோம். சகோதர மோதல், குடும்பங்களின் சிதைவு, உளவியல் சிதைவு உள்பட ஏராளமான பிரச்னைகளை புலம்பெயர் சமூகம் சந்திக்கிறது. ஏனென்றால், நாங்கள் அனைவரும் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள். இவர்கள் போருக்குள் வாழவில்லையே தவிர, போரின் நினைவுகளோடுதான் வாழ்கிறார்கள்” என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் பிரேம் கதிர்.
‘மௌன விழித்துளிகள்’
பங்கர் வாழ்வின் துயரத்தை 12 நிமிடங்களில் பதிவுசெய்திருக்கும் இளங்கோ ராம், இலங்கையில் வசிக்கிறார். போரின் போது பங்கருக்குள் பதுங்கியிருக்கும் தந்தைக்கும் கண்கள் தெரியாத மகளுக்குமான உரையாடலும், அந்தக் குடும்பத்துக்கு நேரும் துயரமும்தான் கதை.
”போர் நடந்தபோது நாம் அனைவருமே வேடிக்கை பார்த்தோம். இந்தக் குற்றவுணர்ச்சி அனைவரிடமும் இருக்கிறது. இந்த உணர்வை வெளிக் கொண்டுவரும் விதத்தில் உருவானதுதான் ‘மௌன விழித்துளிகள்’ குறும்படம். போரின் துயரை நேரடியாக அனுபவித்தவர்கள் ஈழத் தமிழர்கள் என்றாலும், போரை வெறுத்த சிங்களர்களும் உண்டு. ‘இது சுயநலத்துக்கான யுத்தம்’ என்றும் ‘போர் வேண்டாம்’ என்றும் சொன்ன சிங்கள மக்களும் உண்டு. அப்படிப் போர் சூழலில் வேதனையடைந்த என் நண்பர்கள்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இலங்கைக்குள் இருந்து என்னால் எதைப் பேச முடியுமோ, அதை நேர்மையாக என் குறும்படங்கள் வழியே பேசுகிறேன். வலி சுமந்த நாட்களை மறக்கவும், இன்னொரு போர் வேண்டாம் என உலகுக்குச் சொல்லவும், நாங்கள் மீண்டும் மீண்டும் திரைமொழியில் பேசியாக வேண்டிய தேவை இருக்கிறது” என்கிறார் இதன் இயக்குநர் இளங்கோ ராம்.
மாபெரும் ஓர் இன அழிப்புப் போரை எதிர்கொண்ட சமூகம், தங்களின் துயரத்தைத் தாங்களே பேச முயல்வது மிகவும் முக்கியமானது. ஈழப் பிரச்னையை சில பன்ச் வசனங்களாக மட்டுமே தமிழ் சினிமா அணுகிவரும் நிலையில், இத்தகைய பதிவுகள், அறியப்படாத அவலங்களை, உலகத்தின் பார்வைக்கு உயிர்ப்பித்துத் தருகின்றன!