மேலும்

தேர்தல் அறிவிப்பு நள்ளிரவு வெளியாகவில்லை – சிறிலங்கா அரசுக்குள் இழுபறி

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதவியேற்று நேற்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பை நேற்று நள்ளிரவு வர்த்தமானி மூலம் வெளியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த எதிர்பார்ப்பை வலுப்படுத்தும் வகையில், நேற்றுமாலை 7.30 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நேற்றிரவு நடந்து அமைச்சரவைக் கூட்டத்தில், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஒப்புதல் பெற்றிருந்தார்.

இதையடுத்து. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது.

நேற்றிரவு 10.30 மணி வரை இந்தக் கூட்டம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்துவதற்கு இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் பெயரை, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா முன்மொழிய, பிரதமர் டி.எம். ஜெயரட்ண வழிமொழிந்தார்.

அத்துடன், தொகுதி மற்றும் மாவட்ட அளவில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்கான குழுக்களும் இந்தக் கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, நேற்று நள்ளிரவு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இன்றுகாலை அது சிறப்பு வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

இன்று காலை சிறிலங்கா அதிபர் தேர்தல் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும், வர்த்தமானி அறிவிப்பு வெளியான பின்னர், தேர்தல் ஆணையாளரே தேர்தல் நாளைத் தீர்மானிப்பார் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

ஆனால், நேற்று நள்ளிரவு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றும், இன்னும் 24 அல்லது 48 மணிநேரத்துக்குள் அதுபற்றி அறிவிக்கப்படலாம் என்றும் மற்றொரு தகவல் கூறுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தேர்தலை மார்ச் மாதம் வரை ஒத்திவைப்பது குறித்தும் பேசப்பட்டதாகவும், எனினும், இறுதியில் ஜனவரியில் தேர்தலை நடத்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாகவும், அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் எதிர்த்தரப்புக்குத் தாவவுள்ளதாக வெளியான தகவல்களையடுத்தே, தேர்தல் அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், கட்சித் தாவல்கள் இடம்பெறும் என்று அரசதரப்பு அஞ்சுவதாகவும், அதனாலே இழுபறி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மைத்திரிபால சிறிசேன, வசந்த சேனநாயக்க ஆகியோர் எதிர்க்கட்சிக்குத் தாவப் போவதாக தகவல்கள் பரவியுள்ளன.

இந்தநிலையில், மைத்திரிபால சிறிசேனா கட்சி தாவுவதைத் தடுக்க அவருக்கு பிரதமர் பதவியை வழங்க நேற்றிரவு முடிவெடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

இந்தக் குழப்பங்களால், தேர்தல் அறிவிப்பு ஓரிரு நாட்கள் தாமதமாகலாம் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, தேர்தலுக்கான அறிவிப்பு வரைவு தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், இன்னமும் தேர்தல் நாளே கேள்விக்குறியாக இருப்பதாகவும் கூட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *