மேலும்

போரில் பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் – எரிக் சொல்ஹெய்ம்

erik-solhaimசிறிலங்காவில் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக நோர்வே மீது தாக்குதல் தொடுக்கப்படுவது கடந்த பத்தாண்டுகளாக இருந்து வரும் வழக்கமே என்று, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எரிக் சொல்ஹெய்ம் மீதும், நோர்வே மீதும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதற்குப் பதிலளித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இன்று அவர் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழுக்கு இதுதொடர்பாக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தற்போதைய சூழலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச என் மீதும், நோர்வே மீதும் குற்றச்சாட்டைத் தொடுப்பதற்கு வரப்போகின்ற தேர்தல் தான் காரணம்.

சிறிலங்காவில் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக நோர்வே மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

இது கடந்த பத்தாண்டுகாலமாகவே நடந்து வருகிறது.

சமாதான முயற்சியின் தோல்விக்கான காரணங்கள்

சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, சில ஆண்டுகளாக சமாதான முயற்சிகள் மிகவும் நன்றாகவே இடம்பெற்றன.

இந்தியாவின் நெருக்கமான ஒத்துழைப்பும் பெறப்பட்டது.

2005-06 காலப்பகுதியில், இருதரப்பும் போருக்குத் திரும்ப விரும்பிய போது, அனைத்துலக சமூகத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளிவிலேயே செயற்பட முடிந்தது.

சமாதான முயற்சிகள் தடைப்பட்டுப் போனதற்கு இரண்டு முக்கிய பிரச்சினைகள் காரணமாக இருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைமைக்கு சமஸ்டியை பிரச்சினைக்கான தீர்வாக முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாதிருந்தது.

அவர்களைத் தனிமைப்படுத்தியது, பரந்துபட்ட உலகம் குறித்த வரையறுக்கப்பட்ட புரிதலுக்கு இட்டுச் சென்றது.

இரண்டாவது, சிறிலங்காவின் இரு பிரதான அரசியல் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐதேகவுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டது மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

போர்க்குற்ற விசாரணை

போரின் இறுதிக்கட்டத்தில், இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா ஒரு விசாரணைக் குழுவை உருவாக்கியுள்ளது.

விசாரணையாளர்களுக்குத் தேவையான தகவல்களை இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் வழங்க வேண்டியது கடமையாகும்.

ஐ.நாவினால் எடுக்கப்படும் முடிவுகளை நாம் மதிக்கத் தவறினால், ஐ.நாவினால் பணியாற்ற முடியாது.

சிறிலங்கா போரின் இறுதியில் பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாதிப்புகள் மிகப் பயங்கரமானவையாக இருந்தன.

போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால், அதனைக் கவனிப்பது ஐ.நாவின் பொறுப்பு.

நாம் பான் கீ மூனின் தலைமைத்துவத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *