மேலும்

போர்நிறுத்த காலத்தில் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் ரணில் – அட்மிரல் வசந்த கரன்னகொட

admiral wasantha karannagodaபோர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொண்ட போது, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க கண்ணை மூடிக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட.

‘அதிஸ்டானய‘ என்ற தலைப்பில், நான்காவது கட்ட ஈழப்போரில், சிறிலங்கா கடற்படையின் பங்கு குறித்து விபரிக்கும் நூலை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.

அந்த நூலில் அவர், வெவ்வேறு அரசியல் தலைமைகளின் கீழ், தனது அனுபவங்களையும் எழுதியுள்ளார்.

நேற்று நடந்த நூல் வெளியீட்டு விழாவில், உரையாற்றிய சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க,  வெவ்வேறு அரசியல் தலைமைகளின் கீழ் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய போது, கிடைத்த அனுபவங்கள் குறித்து அட்மிரல் வசந்த கரன்னகொட கூர்மையான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

போர்நிறுத்தம் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை அட்மிரல் வசந்த கரன்னகொட முன்வைத்துள்ளதாகவும், போர்நிறுத்த உடன்பாட்டின் மூலம் விடுதலைப் புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொண்டிருந்த போது, சிறிலங்கா அரசாங்கம் கண்ணை மூடிக் கொண்டிருந்ததாகவும், இதனை அரசாங்கத்துக்குச் சுட்டிக்காட்டிய மூத்த படைத் தளபதிகள் கடுமையாக நடத்தப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளதையும் லலித் வீரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் இருந்த போது இராணுவம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கடைப்பிடித்த அணுகுமுறைகளை அட்மிரல் கரன்னகொட ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Adishtanayaரணில் விக்கிரமசிங்க தன்னை அலட்சியம் செய்ததாகவும், விடுதலைப் புலிகளின் இலக்கந்தை முகாம் தொடர்பான விவகாரத்தில், திருகோணமலையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக விளக்கமளிக்க முற்பட்ட போது, ஏனைய அதிகாரிகளின் முன்பாக தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், அட்மிரல் கரன்னகொட குறிப்பிட்டுள்ளதாகவும், லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு குறித்தும் அவர் இந்த நூலில் விபரித்துள்ளார்.

அப்போது சிறிலங்கா அதிபர் தலையிட்டு, பாலர் பாடசாலைச் சிறுவர்கள் போல செயற்படக் கூடாது என்றும், போர் பிரபாகரனுடன் மட்டுமே தவிர, உங்களுக்குள் இல்லை என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துமாறு தன்னிடம் கூறியதாகவும் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *