மேலும்

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைகிறாராம் சம்பந்தன் – பீரிஸ் குற்றச்சாட்டு

g.l.peirisசீனாவுடனும், இந்தியாவுடனும், சுமுகமான உறவை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்துக்குப் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் அரசாங்கமும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் கொள்கை ரீதியான உறவுகளை மேற்கொண்டு வருகிறது.

சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கும் இராஜதந்திர நடவடிக்கைகள் வெளிவிவகார உறவுக் கொள்கைகள் என்பன நாட்டிற்குப் பல வெற்றிகளைத் தேடிக்கொடுத்துள்ளன.

கொமன்வெல்த் மாநாடு சிறிலங்காவில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட அதேவேளை 54 நாடுகளின் தலைவர்களும் இங்கு வருகை தந்திருந்தனர். இதன் மூலம் எமது உறவுகள் விரிவடைந்தன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் மீதான நம்பிக்கையின் பேரிலேயே கொமன்வெல்த் நாடுகளின் அனைத்துப் பணிகளும் வெற்றி பெற்றன.

கடந்த காலங்களைப் போலல்லாது, அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுடனான உறவு மேலும் விரிவடைந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு மூத்த உறுப்பினராவார்.

அவர் மீது நான் மரியாதை கொண்டிருக்கிறேன். எனினும் அவர் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு முயற்சிக்கிறார்.

சீனாவுடனான உறவு, இந்தியாவுடனான உறவு மற்றும் சீனாவுடன் சிறிலங்கா அரசு கொண்டிருப்பதான உறவு குறித்த இந்தியாவின் நிலைப்பாடு என்று ஒன்றையொன்று பிணைத்து, அவர் முன்வைத்த குழம்பிய கருத்துக்களை முன்வைத்திருப்பதை ஏற்க முடியாது. இதனை நான் கண்டிக்கிறேன்.

சீனாவுடனான உறவு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்திலிருந்தே பேணப்பட்டு வருகிறது.

சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில்தான் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது.

அதேபோன்று முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் காலப்பகுதியில் தான் கொழும்பு உயர்நீதிமன்ற கட்டிடத்தொகுதி நிறுவப்பட்டது.

நாம் இந்தியாவுடன் மிகவும் நட்புரீதியான உறவினைப் பேணி வருகின்றோம்.

பிரதமர் நரேந்திரமோடி இரு தினங்களுக்கு முன்பு கூட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியூடாக பேச்சு நடத்தியுள்ளார்.

அத்துடன் இந்தியத் தூதுவரும் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியா நிறுவனங்கள், அபிவிருத்தி மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இதற்கு நாம் இந்தியாவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது இரா.சம்பந்தன் அவதூறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்க முடியாது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *