மேலும்

சிறிலங்காவைக் கடனாளியாக்குகிறது சீனா – இரா.சம்பந்தன்

sampanthanசிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ள நிதி உதவிகளில், 98 வீதமும் கடன்கள் தான் என்றும், வெறும் 2 வீதம் மட்டுமை நன்கொடைகள் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது அவர்,

சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் இருந்து பாரியளவிலான கடன்களை அதிக வட்டிக்குப் பெற்று வருகின்ற அதேவேளை, சீனா சிறிலங்காவில் பாரிய கருத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

சீனாவுடனான சிறிலங்கா அரசாங்கத்தின் இராஜதந்திர உறவுகள்,சிலருக்கு நன்மையளிப்பதாக இருக்கின்ற அதேவேளை இந்த உறவுகளில் வெளிப்படைத்தன்மை ஒன்றைக் காண முடியாதுள்ளது.

சிறிலங்காவில் கருத்திட்டங்களின் மூலம் சீன ஆதிக்க நிலை மேலோங்கி வருவது தொடர்பாக புதுடில்லி கவனம் செலுத்தியிருக்கிறது.

சிறிலங்கா மீதான சீனாவின் ஆதிக்கம் மற்றும் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சீனாவின் செயற்பாடுகள் தொடர்பிலான வெளிப்படைத்தன்மை தொடர்பில் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

சீனாவின் தலையீடுகள் மற்றும் ஆதிக்க நிலைமைகளையடுத்து சிறிலங்காயில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்ற போதிலும் இது குறித்து மக்கள் அறியாதுள்ளனர்.

சீனாவுடனான உறவுகள் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா ஆகியோரின் காலப்பகுதிகளில் இருந்தே தொடர்ந்து வருகின்ற போதிலும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இது அதிகரித்த நிலையைக் காட்டுகிறது.

2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் 2.18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சீனாவிடமிருந்து கடனாக பெறப்பட்டுள்ளது.

2005 முதல் 2013 வரையான காலப்பகுதிகளில் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதி உதவிகளில் வெறும் இரண்டு வீதமே நன்கொடையாகும். மிகுதி 98 வீதமும் கடன் உதவியாகும்.

எனினும்  சிறிலங்காவுக்கு இந்தியா 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருக்கிறது. இதில் மூன்றில் ஒருபகுதி நன்கொடையாகும்.

சிறிலங்கா மீதான சீனாவின் ஆதிக்கம் சிறிலங்காவில் புவியியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்தி விடுமா என்பது குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சிந்திக்க வேண்டும்.

சீனாவின் செயற்பாடுகள் குறுகிய நோக்கம் கொண்டவை என்பதையும் அரசியல் ரீதியிலான இலக்குகளை அடைந்து கொள்வதற்கான முயற்சிகளாக உள்ளன என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது விடயத்தில் நாட்டு மக்கள் அக்கறை உடையவர்களாகவே இருக்கின்றனர்.

சீனாவுடனான சிறிலங்காவின் உறவு அடிப்படையிலான கருத்திட்டங்கள் சிறிலங்கா – இந்திய பிராந்திய நலன் கருதியதாக அமையப் பெறவில்லை.

திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில்கூட கலந்தாலோசிக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

இந்தநிலையில் தான் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களும் சிறிலங்கா வந்து சென்றுள்ளன.

முன்னைய காலப்பகுதிகளில் இப்படியான செயற்பாடுகள் சிறிலங்காவில் இடம்பெற்றது கிடையாது.

இதுவே பல கேள்விகளை எழுப்புவதற்கு காரணமாகியுள்ளதுடன் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

சிறிலங்கா மீது சீனாவின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்து சிறிலங்காவில் இந்தியாவின் வகிபாகத்தை இல்லாது செய்வதற்கும் இந்தியாவை ஓரம் கட்டுவதற்கும் முயற்சிக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *