மேலும்

ரோகண விஜயவீர: சிறிலங்காவின் இடதுசாரி சிங்களத் தேசியவாதத் தலைவர்

Rohana Wijeweera1980களின் பிற்பகுதியில், ஜே.வி.பி தடைசெய்யப்பட்ட போது விஜயவீர புதியதொரு மூர்க்கமான கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். தமிழ்ப் புலிகளுடன் சமரசப் பேச்சுக்களை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதானது சிங்களவர்களை விற்பதற்குச் சமமாகும் என ஜே.வி.பி வாதிட்டது.
இவ்வாறு பிபிசி செய்தியாளர் Charles Haviland எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்தள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், 13 நவம்பர் 1989 அன்றைய தினம், தோல்வியுற்ற இரண்டு கிளர்ச்சிகளைத் தலைமை தாங்கிய, இடதுசாரி சிங்களத் தேசியவாதத் தலைவரான றோகன விஜயவீர காவற்துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இறந்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது அறிவிக்கப்படவில்லை.

“நான் விஜயவீரவின் மரணச் செய்தியை அறிந்தேன். நிச்சயமாக இது எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும். ஆனால் அது நிகழப்போகிறது என்பதை நான் அறிந்திருந்தேன்” என விஜயவீரவின் நண்பரும் சட்டவாளருமான பிரின்ஸ் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காத் தீவின் வடக்கில் தமிழ் மக்கள் யுத்தத்தைத் தொடர்ந்த அதேவேளையில் தெற்கிலும் வன்முறைகள் இடம்பெற்றன. விஜயவீரவின் ஜனதா விமுக்திப் பெரமுன (Janatha Vimukthi Peramuna – JVP) அல்லது மக்கள் விடுதலை முன்னணியானது தமது கருத்தியல்களை ஏற்கமறுத்த மக்கள் மீது வன்முறைகளை மேற்கொண்டது. பின்னர் இது சிறிலங்கா அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் றோகன விஜயவீர என்பவர் யார் என ஆராயமுடியும். இவர் 1943ல் சிறிலங்காவின் தெற்கே உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்த கம்யூனிசத்தைப் பின்பற்றும் குடும்பம் ஒன்றில் பிறந்தார். “இவர் செல்வச் செழிப்போடும் வாழவில்லை. இவர் உயர்மட்ட குடும்பப் பின்னணியைக் கொண்டிருக்கவுமில்லை” என விஜயவீரவின் கல்லூரி நண்பரான விக்ரர் ஜவன், விஜயவீரவின் மரணத்தின் பின்னர் இவ்வாறு எழுதியிருந்தார்.

“இவரது பெற்றோர் மிகவும் ஏழைகளாகவும் சாதாரண மக்களாகவும் இருந்தனர்” என விக்ரர் ஐவன் குறிப்பிட்டார். சோவியத் ரஸ்யாவுக்குச் சென்ற விஜயவீர ஸ்ராலினின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டார். ஆனால் இவரது நீண்ட தலைமுடி மற்றும் இவரால் அணியப்பட்ட சிவப்பு நட்சத்திரம் இடப்பட்ட தொப்பி போன்றன கியூபப் புரட்சியின் கதாநாயகனான சேகுவேரா போன்ற தோற்றத்தை விஜயவீரவுக்கு அளித்தது.

“இவர் மிகவும் கவர்ச்சிகரமான, சக்தி மிக்க உரைகளை நிகழ்த்துவார். எவ்வித குறிப்புக்களுமின்றி விஜயவீர தொடர்ந்து மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரை உரைநிகழ்த்துவார். இவரது பேச்சுக்கள் அடிமட்ட கிராமிய மக்களின் கவனத்தை ஈர்த்தன” என விஜயவீரவின் சட்டவாளராகப் பணியாற்றிய இராஜநாயகம் நினைவுகூருகிறார்.

ஆனால் விஜயவீரவின் பேச்சுக்கள் இனவாதத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்தன. அப்போது சிலோன் என அழைக்கப்பட்ட சிறிலங்காவானது கலப்பின நாடாகும். விஜயவீரவின் உரைகள் சிங்களப் பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களில் கற்றிருந்தும் எவ்வித தொழில் வாய்ப்புக்களையும் பெற்றிராதா பெரும்பான்மை சிங்கள மக்களின் மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் சிறிலங்கா அரசின் நிர்வாகத்தைக் குறைகூறுவதே விஜயவீரவின் நோக்கமாகக் காணப்பட்டது.

1971ல் விஜயவீர சிறைக்குள்ளிருந்தவாறே சிறிலங்கா அரசுக்கெதிரான கிளர்ச்சி ஒன்றுக்குத் தலைமை தாங்கினார். ஆனால் இந்தக் கிளர்ச்சியானது வெற்றியளிக்கவில்லை. இக்கிளர்ச்சியின் போது சில ஆயிரக்கணக்கான ஜே.வி.பி உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

1982ல், விஜயவீர அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இதன்போது குணசேகர இவரது தேர்தல் பிரதிநிதியாகச் செயற்பட்டார். விஜயவீர தனது உரைகளில், மக்களது உரிமைகைளை அரசியல்வாதிகள் நசுக்குவதாகக் குற்றம்சுமத்தினார்.

1980களின் பிற்பகுதியில், ஜே.வி.பி தடைசெய்யப்பட்ட போது விஜயவீர புதியதொரு மூர்க்கமான கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். தமிழ்ப் புலிகளுடன் சமரசப் பேச்சுக்களை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதானது சிங்களவர்களை விற்பதற்குச் சமமாகும் என ஜே.வி.பி வாதிட்டது.

தனது பாதுகாப்புப் படைகளிடம் கிளர்ச்சிகளை மேற்கொண்டவர்களைச் சுடுமாறு அப்போதைய அதிபர் உத்தரவிட்டிருந்ததாக பிரின்ஸ் குணசேகர கூறுகிறார்.

“ஜே.வி.பி உறுப்பினர்கள் அல்லது ஜே.வி.பி எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்” என குணசேகர குறிப்பிடுகிறார். பிக்குகள், கல்விமான்கள், அரசியல்வாதிகள் போன்ற பலரை ஜே.வி.பி படுகொலை செய்தது. முன்னால் அதிபர் சந்திரிக்காவின் கணவரான, பிரபலமான அரசியல்வாதியும் நடிகருமான விஜய குமாரதுங்கா ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டார்.

“இவ்வாறான பிரபலங்களுக்கு மரணதண்டனைத் தீர்ப்பை வழங்கி அவர்களைப் படுகொலை செய்வதற்கான உத்தரவை வழங்கும் கங்காரு நீதிமன்றங்களை ஜே.வி.பி கொண்டிருந்தது. சிறிலங்கா அரசாங்கத் தரப்பிலும் சித்திரவதைக் கூடாரங்கள், கொலை மன்றங்கள் காணப்பட்டன. இதனால் 1989ல் சிறிலங்காவானது ஒரு பயங்கரவாத நாடாக மாறியது” என பி.பி.சி சிங்களச் செய்தியாளர் பிரியத் லியனேஜ் குறிப்பிடுகிறார்.

காடுகள், வயல்கள், விகாரைகள், பல்கலைக்கழகங்கள் என எல்லா இடங்களிலும் சிறிலங்கா அரசு தனது பழிதீர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக திரு.குணசேகர குறிப்பிட்டார்.
“ஜே.வி.பி ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது தலைகள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்த வாவியைச் சுற்றிப் புதைக்கப்பட்டன.” இதனைப் பார்க்கும் எவரும் ஜே.வி.பி ஆதரவாளர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை அறிவார்கள்.

“எனது தேர்தல் தொகுதியில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் இருந்தன. அங்கு இளைஞர்கள் கொண்டுவரப்பட்டு சுடப்பட்டு தீயிடப்பட்டனர்” என்கிறார் திரு.குணசேகர.

நவம்பர் 1989ல், தனது குடும்பத்தாருடன் தேயிலைத் தோட்டம் ஒன்றில் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தபோது நீண்ட தேடுதலின் பின்னர் றோகன விஜயவீர கைதுசெய்யப்பட்டார்.

இந்நடவடிக்கைக்கு அப்போதைய சிறிலங்கா அதிபர் றணசிங்க பிறேமதாச ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தனது நண்பன் விஜயவீர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உடனடியாகப் படுகொலை செய்யப்பட்டதாகவும் பிறின்ஸ் குணசேகரா கூறுகிறார். இவர் உயிருடன் எரிக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.

விஜயவீர படுகொலை செய்யப்பட்டதுடன் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியும் முடிவுக்கு வந்தது. சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் சில மாதங்களாக ஜே.வி.பி ஆதரவாளர்களைத் தேடிக் கைதுசெய்தது. இந்த நாளின் போது பல ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயினர்.

“ஜே.வி.பி கடந்த காலத்தில் செய்த அதே வேலையைத் தான் தற்போது சிறிலங்கா அரசாங்கமும் செய்கிறது. மக்களைக் கடத்துகிறது. சிறிலங்காவில் மக்கள் காணாமற் போயுள்ளனர். இவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பிள்ளைகள் எங்கேயிருக்கிறார்கள் என பெற்றோர்கள் அறியாது அவர்களைத் தேடுகின்றனர்” என்கிறார் பிறின்ஸ் குணவர்த்தன.

தென் சிறிலங்காவில் இடம்பெற்ற இக்கிளர்ச்சியின் போது 70,000 உயிர்கள் படுகொலை செய்யப்பட்டன, காணாமற் போயின. ஆனால் தற்போது தமிழர் பிரச்சினை அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்த்தது போன்று ஜே.வி.பி கிளர்ச்சி அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கத் தவறிவிட்டதாக பி.பி.சி செய்தியாளர் பிறியத் லியனேஜ் கூறுகிறார்.

தமிழர் பிரச்சினை தொடர்பாக புலம்பெயர் வாழ் தமிழர் சமூகம்; விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், ஜே.வி.பி கிளர்ச்சியின் போது பிரதானமாக சிங்களவர்கள் குறிப்பாக கிராமிய மட்ட வறிய குடும்பப் பின்னணியைக் கொண்ட மக்களே பாதிக்கப்பட்டனர் எனவும் செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

தற்போது ஜே.வி.பி சட்ட ரீதியான அரசியற் கட்சியாகச் செயற்படுகிறது. இக்கட்சி தற்போதும் றோகன விஜயவீரவைத் தனது அடையாளமாகக் குறியீடாகக் கொண்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் விஜயவீரவின் மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளையும் கடற்படைத் தளம் ஒன்றில் தனது தடுப்புக் காவலில் வைத்திருந்தது. விஜயவீரவின் இறப்பிற்குக் காரணமான முன்னாள் அதிபர் பிறேமதாச மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ன ஆகியோர் பின்னர் தமிழ்ப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *