மேலும்

சீனாவுடன் சேர்ந்து இந்தியாவின் கோபத்தைக் கிளறாதீர்கள் – சிறிலங்காவுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

sampanthanகுறுகிய அரசியல் நலன்களுக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம்தள்ளி விட்டு, சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் மூலம், சிறிலங்கா ஆபத்தையே விலைகொடுத்த வாங்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், இன்று நடந்த வரவுசெலவுத் திட்டத்தில் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில், “சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

இதன்காரணமாக எதிர்காலத்தில் நாடு பெரும் விபரீதங்களையே சந்திக்க நேரிடும்.

ஆசியாவிலுள்ள எல்லா நாடுகளுடனும் சிறிலங்கா உறவுகளை வைத்துக் கொள்வது அவசியம் தான்.

எனினும், தொன்று தொட்டு சிறிலங்காவுடன் உறவுகளை வளர்த்து வந்துள்ள இந்தியாவைப் புறந்தள்ளி – அதனைக் கோபமடையச் செய்து சீனாவுடன் உறவைப் பேணுவது ஆரோக்கியமானதல்ல.

இன்று பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் போன்ற சகல துறைகளிலும் சீனாவிடம் இலங்கை உதவியை நாடி நிற்கிறது.

இதன்காரணமாக, சிறிலங்கா இன்று சீனாவின் ஆதிக்கத்துக்குள் வந்துள்ளது. இது நாட்டுக்கு அழகல்ல.

சிறிலங்கா அரசு இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். இந்தியாவுடனான உறவை பலப்படுத்த வேண்டும்.

சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நேரடியாக சிறிலங்காவுக்கு வந்து கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை கடும் சீற்றம் அடைந்துள்ளது.

தமது அதிருப்தியை இந்திய பாதுகாப்புத்துறை சிறிலங்காவிடம் தெரிவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் பிராந்திய நாடுகளுடனான வெளிவிவகார கொள்கைகளை சரியாகக் கடைப்பிடிப்பதற்கு சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *