மேலும்

சிறிலங்காவுடன் இறுகிவரும் சீனாவின் உறவு : இந்தியாவுக்கான சவால்

chinaசீனா தனது அயல்நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்வதை இந்தியா எதிர்க்கவில்லை. ஆனால் சீனாவானது, எமது அயல்நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்வதானது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு  Daily Mail இணையத்தளத்தில் KANWAL SIBAL எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சீன நீர்மூழ்கிக் கப்பலானது இரண்டு தடவைகள் சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நின்றதால் இந்தியர்களாகிய நாம் சீனாவைக் கையாள்வது மற்றும் எமது அயல்நாடுகளைக் கையாள்வது தொடர்பில் எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்கிறோம் என்பதே அண்மைய வாரங்களின் முதன்மைச் செய்திகளாகும்.

இவ்விரு சவால்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. சீனாவானது எமது அயல்நாடுகளுடன் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான தொடர்பைப் பேணிவருகிறது. சீனா தனது அயல்நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்வதை இந்தியா எதிர்க்கவில்லை. ஆனால் சீனாவானது, எமது அயல்நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்வதானது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் எல்லைப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை. இது அவ்வப்போது தீவிரம் பெறுகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியான மோதல்கள் ஏற்பட்டாலும் கூட, இராணுவ ரீதியான மோதல்களைத் தவிர்க்க வேண்டும் என நாங்கள் அண்மைய சில ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம். ஆனால் இவ்வாறான மோதல் நிலை உச்சம் பெறும்போது இராணுவ மோதலை நிரந்தரமாகத் தவிர்க்க முடியும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

சீனாவானது பிரமாண்டமான அளவில் தனது இராணுவ  நிலைகளை திபேத்தில் பலப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு அதன் எல்லைப் பிரச்சினை தொடர்பில் அழுத்தத்தைக் கொடுப்பதே சீனாவின் நோக்கமாகும்.

இதேவேளையில் இந்தியாவின் வடக்கே பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் சீனா மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதன் மூலம் மேலும் இந்தியா மீது சீனா அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை சீனாவானது மிகத் தீவிரமாக வளர்த்துவருகிறது. இந்தியாவானது தனது வடக்கு எல்லையில் மேலும் கம்பங்களை நிறுத்துவதெனவும், கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையை அமைப்பதெனவும் அண்மையில் தீர்மானித்த போது சீன வெளியுறவு அலுவலகம் இதனை எதிர்த்தது. ஆனால் இதேவேளையில் சீனா, இந்தியாவின் வடக்கில் தனது இராணுவ நிலைகளை அவசர அவசரமாகப் பலப்படுத்தி வருகிறது. இந்தியா, வியட்நாமுடன் செய்து கொண்ட எண்ணெய் ஆய்வும் சீனாவின் எதிர்ப்புக்கு உள்ளாகியது.

இவ்வாறான எதிர்ப்புக்கள் சீன அதிபர் இந்தியாவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்தே கிளம்பியுள்ள நிலையில், சீனா மற்றும் இந்தியாவுக்கிடையில் பொருளாதார உறவுகள் விரிவுபடுத்தப்படும் போது சீனாவானது இதன் நலனைக் கருத்திற் கொண்டு எல்லைப் பிரச்சினையைத் தணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் மீதான சீனாவின் மூலோபாய முதலீடானது சாதாரணமானதல்ல. எந்தவொரு நாடும் தனது அணுவாயுதங்கள் மற்றும் ஏவுகணைத் தொழினுட்பங்கள் போன்றவற்றை பிறிதொரு நாட்டுக்கு வழங்காது. ஆனால் சீனா இவற்றை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளன.

சீனாவானது தற்போது நேபாளத்தின் அரசியலில் ஒரு முதன்மையான பங்காளியாக உள்ளது. இந்த விடயத்தில் சீனா, இந்தியாவிற்கு இணையாகச் செயற்பட முனைகிறது. பூட்டானின் Chumbi  பள்ளத்தாக்கின் ஒரு பகுதியைத் தனதாக்குவதற்கான முயற்சியை மிக நீண்டகாலமாக சீனா மேற்கொண்டுள்ளது.  ஆனால் இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கின்ற நடவடிக்கையாகும்.

இந்திய மாக்கடல் பிராந்தியம் முழுவதிலும் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தி இந்திய மாக்கடலில் இந்தியாவுக்கு உள்ள ஆதிக்க நிலையை உடைத்தெறிவதற்கான மூலோபாய நகர்வை சீனா தற்போது மேற்கொள்கிறது.

சீனா தனது வர்த்தக நோக்கங்களுக்காக துறைமுக வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளதென இங்கு விவாதிக்க முடியும். சீனா தனது பாரிய வர்த்தகப் போக்குவரத்தின் மூலம் கடல் வழிகளைச் சுதந்திரமாகப் பாதுகாக்க முடியும் என்பது சட்டரீதியானது என விவாதிக்க முடியும்.

பல நீண்டகாலமாக சீனாவானது சிறிலங்காவின் துறைமுகங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும், குவாடாரில் தனது வளங்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. இது தனது வர்த்தகத் தேவைகளுக்காக மட்டுமே என சீனா கூறிவருகிறது. தனது நாட்டில் சீனா துறைமுகங்களை அமைப்பதானது முற்றிலும் வர்த்தக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே என சிறிலங்கா உறுதிப்படுத்துகிறது. இது எமது பாதுகாப்பு நலன்களுக்கும் துணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் சீனாவின் இராணுவக் கப்பல்கள் சிறிலங்காவின் துறைமுகங்களில் தரித்து நிற்பதானது அனைத்துலக நடைமுறையின் படி ஒரு சாதாரண நடவடிக்கையாகும் என சீனாவும் சிறிலங்காவும் வாதிடுகின்றன. சிறிலங்காவில் சீனா தொடர்ந்தும் தனது தலையீட்டை விரிவுபடுத்துவதானது எமது நாடான இந்தியாவுக்கு குந்தகத்தை விளைவிக்கும் என்பதை சிறிலங்கா நன்கு உணர்ந்திருந்தும், தொடர்ந்தும் இதனைக் கருத்திற்கொள்ளாது எமக்கெதிராக சீனாவுடன் உறவைப் பேணிவருகிறது.

35 ஆண்டுகளாக சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சீன நீர்மூழ்கிக்கப்பலானது செப்ரெம்பர் 07 அன்று சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற அதேநாளன்று யப்பானியப் பிரதமர் அபே சிறிலங்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமையானது சீன அரசாங்கத்தால் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வாகும்.

இதே சீனக் கப்பல் ஒக்ரோபர் 31 அன்று அடேன் விரிகுடாவில் ‘கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கையில் பங்கெடுத்த பின்னர்’ சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் ஓய்வெடுப்பதற்காகத் தரித்து நிறுத்தப்பட்டது. கடந்த செப்ரெம்பரில் சீன அதிபர் சிறிலங்காவுக்கு வருகை தந்தபோது அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

இதேபோன்று கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் சீனா கைச்சாத்திட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு வெளியே 235 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் 20 ஹெக்ரேயரை சீன நிறுவனத்திற்கு இலவசமாகவும், 88 ஹெக்ரேயரை 99 ஆண்டுகாலக் குத்தகைக்கும் சிறிலங்கா வழங்கியுள்ளது. இதில் சிறிலங்கா அரசாங்கத்தின் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி சீனா தனது செயற்பாடுகளை மேற்கொள்கிறது.

கொழும்புத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கையின் எழுபது சதவீதமானது இந்தியாவால் கையாளப்படுகிறது. அட்மிரல் கப்பலின் பாகங்களைத் தேடுவதற்கான நடவடிக்கையில் சீனாவும் சிறிலங்காவும் இணைந்து கைச்சாத்திட்டுள்ளன. இதன்மூலம் சீனாவானது பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா மற்றும் திருகோணமலைக் கடற்பரப்புக்களில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பைப் பெறும்.

இவ்வாறான சூழ்நிலையில், சிறிலங்காவில் தொடர்ந்தும் சீனா செயற்படுவதற்கான உறுதிப்பாடுகளை சிறிலங்கா வழங்கும் போது சீனா ஒருபோதும் சிறிலங்காவை விட்டு வெளியேறாது. இதனால் தனது பிரதேசத்தில் சீனா தவிர்ந்த வேறெந்த நாடும் உள்வருவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்காது.

இந்திய மாக்கடலில் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் சீனாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்வாறான சவால்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இதற்கு இந்தியா தக்க தருணத்தில் சரியான பதிலை அளிக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *