மேலும்

மீரியபெத்தவில் மீட்பு நடவடிக்கையை கைவிட்டது சிறிலங்கா அரசு

meriyabedda-rescue-1மலையகத்தில், மீரியபெத்த நிலச்சரிவின் போது புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கைகளைக் கைவிடவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

காணாமற்போனவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அபேவீர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவே மீட்பு நடவடிக்கை கைவிடப்படுவதாகவும், மண்சரிவில் புதையுண்ட இடத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல்போனவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு அந்த இடத்தைத் தனியொரு பிரதேசமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் நாள் இடம்பெற்ற இந்த நிலச்சரிவில் புதையுண்டவர்களை கண்டுபிடிப்பதற்கு கடந்த 12 நாட்களாக தேடுதல்கள் நடத்தப்பட்டன.

நேற்றைய தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு உடல்களையும், ஒரு பெண்ணின் தலைப் பகுதியையும் கண்டெடுத்ததாக தேடுதல் நடவடிக்கைக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படுவது தொடர்பாக தமக்கு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மண்ணில் புதையுண்டு, பழுதடைந்துள்ள உடல்களைத் தேடி எடுத்து அதனைக் கையாள்வதில் பயனில்லை என்றும், அதற்குப் பதிலாக தேடுதல் நடவடிக்கையை நிறுத்தி அந்த இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரியிருப்பதாகவும், மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நிலச்சரிவில் புதையுண்டவர்களின் சடலங்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அந்தத் தேடுதல் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதற்குப் பலரும் தயாராக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *