மேலும்

“இலங்கையில் அரச வன்முறைகள் இன்னமும் தொடர்கின்றன” – சென்னையில் விக்னேஸ்வரன் உரை [இரண்டாம் இணைப்பு]

cv.wikki-chennaiஇலங்கையில் அரச வன்முறைகள் தொடர்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சென்னையில் இன்று தெரிவித்துள்ளார்.[அவரது முழுமையான உரை இணைக்கப்பட்டுள்ளது.]

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பாடசாலையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது,

அதில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,

தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தியதில் நீதித்துறைக்கும் கூட பங்களிப்பு உள்ளது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் எங்களால் தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இதற்காக வருந்துகிறோம்.

இலங்கை வாழ் வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் மக்கள் சார்பாக 1987ஆம் ஆண்டில் ஏற்பட்ட உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டது.

ஒற்றையாட்சி அரசியல் சட்டத்தின் கீழ் உண்மையான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியவில்லை.

அனைத்து அதிகாரங்களும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி அதிகாரத்திலுள்ள மத்திய அரசின் கையில் உள்ளது.

அதனால், வடக்கு மாகாணத்தில் தமிழர் நலனுக்காக பாடுபட முடியவில்லை.

அப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அங்கு இந்த நிலைமை தான் உள்ளது.

எங்களை சிங்கள அரசு செயற்பட விடாமல் தடுத்து வருகிறது.

அதுதான் அவர்களது முக்கிய குறிக்கோளாக உள்ளது.

அதிகாரமில்லாத வட மாகாண சபையில் முதல்வராக ஏன் இருக்கிறீர்கள் என என்னைக் கேள்வி கேட்கிறார்கள்.

தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது.

அது, தமிழ் பேசும் மக்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் ஊடுருவல்கள் அதிகரித்து வருகிறது.

இலங்கை சுதந்திரம் பெற்ற போது தமிழர் பகுதியில் சிங்களவர் 5 சதவீதம் பேர் மட்டுமே இருந்தனர்.

இப்போது அவர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக அதிகரித்து விட்டது.

இலங்கையில் உள்ள குடிமக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதில் இந்தியாவுக்கு சட்டரீதியான, தார்மீக ரீதியான கடப்பாடுகள் உள்ளன.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

cm-chennai (1)

அவரது முழுமையான உரை:

பாதுகாப்பையும் இறைமையையும் பங்கமின்றிப் பாதுகாத்தல்

என் அன்புள்ள தமிழ்ப் பேசும் பாரத நாட்டுச் சகோதர சகோதரிகளே,

ஆங்கிலத்தில் பேசினால் மட்டும் போதாது எங்கள் தாய் மொழியிலும் நீங்கள் பேசவேண்டும் என்றார்கள் கூட்ட அமைப்பாளர்கள். இன்று ஆங்கிலத்தில் நான் பேசியதைத் தமிழாக்கம் செய்யப்போவதாக அறிவித்திருக்கின்றபடியால் உங்கள் அயல்நாட்டுத் தமிழர் அவையில் அன்றாடம் நடப்பதை அல்லது  நடக்காதிருப்பதை அண்ணளவாவது அலசி ஆராய்ந்தால் என்ன என்று எனக்குப் பட்டது. அங்கு நடப்பது பற்றி சற்று நேரத்திற்கு முன் என் ஆங்கிலப் பேச்சிலும் குறிப்பிட்டிருந்தேன்.

அதாவது தனக்கென மட்டும் அன்றி இலங்கைவாழ் வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் சார்பாகவும் 1987ம் ஆண்டின் இலங்கை – இந்திய உடன்படிக்கையில் பாரதம் கையெழுத்திட்டது.

13வது திருத்தச் சட்டம் என்பது இந்தியாவால் தமிழர் சார்பில் எடுத்துரைத்த விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கையளித்த ஒரு முழுமையற்ற தீர்வாவணம். உடன்படிக்கையை எக்காரணம் கொண்டும் விரைவில் முடித்துவிடவேண்டும் என்று அக்கால இருநாட்டு முதல்வர்களும் முடிவெடுத்திருந்ததால் 13வது திருத்தச் சட்டம் முக்கியமான அதிகாரங்களை நியாயமான முறையில் மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் பகிர்ந்து  கொடுத்துள்ளதா என்ற கேள்விக்கு விடை தேடாமலேயே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

மற்றவற்றைப் பிறிதொரு ஆவணத்தில் எம் உள்ளுரில் பதிய உடன்பாடு ஏற்பட்டது.  அவ்வாறு கொண்டுவந்த சட்டந்தான் மாகாண சபைகள் (Provincil Councils Act) சட்டமாகும்.

உண்மையில் பாரதத்தின் எதிர்பார்ப்பு ஒன்றாய் இருக்க இலங்கை அரசாங்கம் கொடுத்த பதில் யாப்புத் திருத்தமும் அதையொட்டிய மாகாணசபைகள் சட்டமும் ஒருகையால் கொடுத்த அதிகாரங்களை மறுகையால் திரும்ப எடுப்பது போல் அமைந்திருந்தன. அதாவது ஆளுநரின் குறுக்கீட்டுக்கு ஆனவழிதேடி ஆவணம் அமைத்து, தந்ததைப் பறிக்க அரசியல் சதி செய்யப்பட்டது.

முழுநாட்டுக்கும் ஏற்புடைத்தான இச்சட்டம் தெற்கில் உள்ளவர்களுக்குப் பெரிய பிரச்சனையாக அமையவில்லை. காரணம் அவர்கள் யாவரும் ஒரே இனத்தவர்கள். பெரும்பாலும் ஒரே கட்சியினர், ஒரே மொழியினர். எம்மையோ இச்சட்டம் பலவிதங்களில் பாதித்தது.

இது பற்றி ஏற்கனவே எமது தமிழ்த்தலைவர்கள் தெரிந்து கொண்டு 13வது திருத்தச் சட்டம் ஜனனமான காலத்திலேயே நடக்கப் போவதைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்தியம்பியிருந்தனர். பிரதமர் இராஜீவ்காந்தி அவர்களுக்கு எமது தமிழ்த் தலைவர்கள் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ந் திகதி எழுதி அனுப்பிய கடிதத்தில் இத்தீர்க்க தரிசன கருத்துக்கள் இடம்பெற்றன.

வடக்கையும் கிழக்கையும் பிரிப்பார்கள் தென்னவர்கள் என்றார்கள். அது நடந்தது. மாகாண அதிகாரங்களை வலுவற்றதாக்க வழி ஏற்படுத்தப்படும் என்றார்கள். அது நடந்தது. சடங்கு ரீதியான பதவியில் இருத்தப்படும் ஆளுநர் அச்சட்டத்தை வைத்தே சபைகளின் அதிகாரங்களைத் தனதாக்கிக் குறுக்கிட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றார்கள். அதுவும் நடக்கின்றது. எதுவுமே இல்லை இந்த 13வது திருத்தச் சட்டத்தில் என்றார்கள். அதைத்தான் நாங்கள் தேர்தல் காலத்திலும் கூறினோம். இப்பொழுதும் கூறி வருகின்றோம்.

ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் உண்மையான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது என்பது தான் நாம் முக்கியமாகக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதொன்றாகும். ஒற்றையாட்சியின் ஒரேயொரு அதிகார மையம் இதுதான் என்று எமது அரசியல் யாப்பு மத்தியையே சுட்டிக் காட்டுகின்றது. மத்தி மனமுவந்து அதிகாரங்களைப் பகிர முன் வந்தால் தான் மாகாணங்கள் தம் மக்கள் நலனுக்காகப் பாடுபடலாம்.

வடமாகாண இனப்பரம்பலையே மாற்றியமைத்துப் பெரும்பான்மையினரை உள்நுழைத்து, கிழக்கு மாகாணம் போல் பெரும்பான்மையினரை வடக்கிலும் பெருவாரியாகக் குடியிருத்த இராணுவ மூலமாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசாங்கம் மனமுவந்து எமக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அது தான் தற்போதைய நிலை. எல்லா விதத்திலும் எம்மை இயங்கவிடாது தடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கின்றது.

அதிகாரம் இல்லாத வடமாகாண சபைக்கு ஏன் நீங்கள் தெரிவானீர்கள் என்று கேட்பீர்கள். நியாயமான கேள்வி அது. முன்னர் இதேபோல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நாங்கள் பகிஷ்கரித்ததால் அரசாங்கத்தின் கையோங்கி தமிழ்ப்பேசும் பிரதேசமான கிழக்கு மாகாணம் பாரிய சிங்கள ஊடுறுவல்களுடன் தற்பொழுது காட்சி அளிக்கின்றது. நாம் சுதந்திரம் பெற முன் 5 சதவிகிதத்திற்குங் குறைய இருந்த கிழக்கு மாகாண சிங்கள மக்களின் விகிதாசாரம் தற்பொழுது 30 சதவிகிதத்தைத் தாண்டி விட்டது. கிட்டத்தட்ட 35 சதவிகிதமாக இருக்கின்றது. முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் சேர்ந்து இருப்பதால் கிழக்குமாகாண முதலமைச்சர் முஸ்லிமாகவும், அவைத் தலைவர் சிங்களவராகவும் எதிர்க்கட்சித் தலைவர் தமிழராகவும் இருக்கின்றார்கள்.

இதே நிலை வடமாகாணத்தைப் பாதிக்கக் கூடாது என்பதாலேயே வலுவற்ற, வெறிதான 13வது திருத்தச் சட்டத்தின் கீழும் நாம் தேர்தலில் முன்னிற்க முடிவெடுத்தோம்.

பலவிதங்களில் அது நன்மை பயந்துள்ளது. வெளிநாட்டுப் பணத்தில் பாரிய தெருக்களைப் போட்டு, இந்திய அரசாங்கத்தின் பணத்தில் புகையிரத வழிபாதைகள் அமைத்து, சர்வதேச நிறுவன உதவியுடன் கட்டிடங்கள் கட்டி வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்தி விட்டோம் என்ற அரசாங்கத்திற்கு எம் மக்கள் தக்க பாடம் புகட்டினார்கள்.

தேர்தலின் போது 38 ஆசனங்களில் எமது கட்சி 30ஐக் கைப்பாற்றியது. எனவே மக்களின் மனோநிலை இத்தேர்தல் ஊடாக உலகத்திற்குத் தெரியவந்துள்ளது. தாம்  நினைத்தவாறு ஆடி வந்த பாரிய இராணுவத்தின் பிரசன்னம் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படுகின்றது.
அப்படியிருந்தும் சிங்கள மக்களைத் தெற்கில் இருந்து கொண்டு வந்து வடமாகாணத்தில் குடியேற்ற அரசாங்கம் சகல நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. இராணுவத்தினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றது. தமிழ்ப் பேசும் மக்களின் அரசாங்க அதிபர்களாக சிங்களவர்களை நியமித்துள்ளார்கள். எனினும் எமது சொற்ப அதிகாரங்களைப் பாவித்து பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் சிங்கள மயமாக்கல் பயணத்திற்கு முட்டுக்கட்டைகளை இட்டே வருகின்றோம்.

cm-chennai (2)

ஆனால் எமது பிரதம செயலாளர் அரசாங்கத்தின் கைப்பொம்மையாக செயல்பட்டு ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் கருமங்கள் ஆற்றுவதால் எமக்கு கிடைக்க வேண்டிய  அதிகாரங்களையும் நாம் பறிகொடுத்த நிலையில்த்தான் வாழ்கின்றோம். எமது வடமாகாண சபையின் நாளாந்த நடவடிக்கைகளில் நாம் எதிர்நோக்கும் சில விடயங்களை அடுத்துப் பட்டியல் இட்டுக் காட்டுகின்றேன். அவையாவன :-

1.    பிரதம செயலாளர் முதலமைச்சரின் கட்டளைகளை ஏற்க வேண்டியதில்லை என்ற அடிப்படையில் மாகாண நிதிச்செயற்பாடுகளை நிர்வகிக்கும் அதிகாரம் முதலமைச்சரிடமிருந்து விலக்கப்பட்டுள்ளது.

2.    மாகாண அமைச்சரவையின் எல்லாத் தீர்மானங்களும் பிரதம செயலாளர் மற்றும் ஆளுநரின் அனுமதியுடனேயே செயற்படுத்த முடியும் என்பதோடு இவர்கள் இருவரும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருப்பதால் மத்தியின் அரசியல் விருப்புக்கு மாறான விடயங்கள் அமுல்ப்படுத்தப்பட முடியாமல் இருக்கின்றது.

3.    மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மாகாண நிர்வாகத்துடன் எந்த வகையிலும் இணைந்து செயற்படாமல் மத்தியின் நிர்வாகத்தையும் மாகாண நிரல் கடமைகளையும் நிறைவேற்றி வருகின்றனர். முக்கியமாகக் காணி சம்பந்தமான கடமைகள் இவற்றுள் அடங்குவன.

4.    ஆளணி விடயங்களில் ஆளுநருக்கு வழக்கப்பட்டுள்ள நியமனம், பதவி உயர்வு, ஒழுக்காற்று அதிகாரத்தின் மூலம் ஆளனியினரை மாகாண அரசு தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு சுதந்திரமாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

5.    நாம் செய்ய எத்தனிக்கும் விடயங்கள் மத்திய அரசில் உள்ள அரசியல் கட்சிகளின் விருப்புக்கு மாறான விடயங்களாக இருந்தால் மாகாண அரச அலுவலர்களைக் கொண்டு நாங்கள் அவற்றைச் செயற்படுத்தப் புகும்போது  பிரதம செயலாளர் மற்றும் ஆளுனரின் அச்சுறுத்தல் மூலம் அவை தடை செய்யப்படுகின்றன.

6.    மத்தியின் ஆளுங்கட்சி மற்றும் அதன் பிரதேச தலைவர்களின் முகவராக ஆளுநர் செயற்படுவதால் அவருக்கு அஞ்சி மாகாண அரசின் கடமைகளை எமது அலுவலர்கள் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கின்றனர்.

7.    அத்துடன் மாகாண அலுவலர்கள் நேரடியாக ஆளுநரின் பணிப்புரைகளைச் செயற்படுத்த வேண்டியுள்ள ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

8.    மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு ஆளுநரின் அறிவுறுத்தலுக்கேற்ப மத்திய அரசின் விருப்பு வெறுப்புக்களுக்கமையவே செயற்படுகின்றது. மாகாண அரசுக்கு வேண்டிய நியமனங்களை மேற்கொண்டு நடத்தல்,  மத்திய அமைச்சுக்களின் கட்டளைகளை சிரமேற்கொள்ளல் போன்றவை எமக்கு பலத்த பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

9.    நியதிச்சட்டங்களை அனுமதிப்பதில் ஏனைய மாகாணங்களில் இல்லாத கட்டுப்பாடுகளை ஆளுநர் எம் மாகாணத்தில் பிரயோகித்து வருகிறார்.

உதாரணத்திற்கு அண்மையில் வடமாகாண முதலமைச்சர் தமக்கென உத்தியோகபூர்வமான நிதியம் ஒன்றைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபைக்கென ஒரு நிதியம் இருக்கின்றது. அது பிரதம செயலாளர் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. அதை விட்டு முதலமைச்சர் நிதியம் ஒன்றை அமைக்க நாங்கள் முற்பட்ட போது அது நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்கள் நான்கில் அப்பேர்ப்பட்ட நிதியங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி ஜனாதிபதியிடம் இந்திய உயர் ஸ்தானிகரால் அண்மையில் வினவப்பட்டது. அதற்கு அவர் அளித்த மறுமொழி நாங்கள் பதவிக்கு வரமுன்னர் திறக்கப்பட்டவையே அந்த நிதியங்கள். நாங்கள் வந்த பின் அப்பேர்ப்பட்ட நிதியங்களைத் திறக்க நாங்கள்  இடமளிக்கவில்லை. திறக்க விடவும் மாட்டோம் என்றாராம். இதிலிருந்து இன்றைய மத்திய அரசாங்கத்தின் மனோநிலையை நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

அதே மனோநிலையால்த் தான் “புலிவரப்போகிறது” “புலிவரப்போகிறது” என்று கூறி சுமார் 1.5 இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் எல்லா விதத்திலும் அவர்கள் உள்ளிடுகின்றார்கள். பெண்களின் கதி பெருத்த சங்கடமாக உள்ளது.

எமது காணிகளை இராணுவத்தினர் கையேற்று அவற்றைப் பயிரிட்டு அறுவடை செய்து எமக்கே விற்கும் ஒரு நிலை தான் தற்போது நடைபெறுகின்றது. தெற்கில் இருந்து சிங்கள மீனவர்கள் வந்து படையினரின் உதவியுடன் தடுக்கப்பட்ட மீன்பிடி முறைகளில் ஈடுபடுகின்றார்கள். எம்மவர் அவற்றில் ஈடுபட்டால் பிடித்தடை என்கின்றார்கள்.

மற்ற காணிகளை விட ஒரேயொரு இடத்தில் மாத்திரம், அதாவது வலிகாமம் பிரதேசத்தில் இராணுவம் 6000க்கு மேற்பட்ட காணிகளைச் சுவீகரித்து தாம் நினைத்தவாறு பலாத்காரமாக அங்கு இருந்த குடியிருப்புக்களை, கல்லூரிகளை, கோயில்களை அழித்து பாரிய வாஸஸ்தலங்களையும், கொல்வ் (golf) விளையாட்டுத் திடல்களையும், நீச்சல் தடாகங்களையும் கட்டி வருகின்றனர். அங்கிருந்த மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வாழ வழியின்றி எமது அனுதாபங்களில் காலத்தைக் கடத்தி வருகின்றார்கள் தற்காலிகத் தங்குமிடங்களில். இது அவர்களின் பாதிப்புக்கு மேலதிகமாக சமூக, கலாசாரச் சீரழிவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது.

இவ்வாறு எமது நிலையை அடுக்கிக்கொண்டே போகலாம். எமது கருத்துக்களை வெளிப்படுத்தும் போது பலவிதமான கட்டுப்பாடுகளை நாம் உபயோகித்தே பேசவேண்டியுள்ளது. உண்மைகளை உள்ளுரில் கூறினால் “உனக்கும் புலிகளுக்குந் தொடர்புண்டு” என்று கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றார்கள்.

சட்டப்படி பாரிய குற்றங்களை இழைத்த முன்னைய இயக்கத் தலைவர்கள் பலர் அரசாங்க விருந்தாளிகளாக இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். சிறிய குற்றங்களில் ஈடுபட்ட இளவயது எம்மக்கள் பலர் எத்தனையோ வருடங்கள் சிறைகளில் வாடி வாழ்கின்றார்கள். மிகவும் மனவேதனையுடன் காலத்தைப் போக்கி வருகின்றனர். அவர்களை வெளியில் எடுக்க நாம் எடுத்த பிரயத்தனங்கள் யாவும் பலன் அற்றுப் போயுள்ளன.

வரப்போகும் தேர்தலில் எம்மிடம் யார் தானும் வாக்களிக்குமாறு உதவி கேட்கும் நிலை ஏற்பட்டால் பல கோரிக்கைகளை முன்வைத்து அவற்றைச் செய்யுமாறு கேட்கவிருக்கின்றோம். எமது சிறையில் வாடும் இளைஞர் யுவதிகளை அப்பொழுதேனும் நாங்கள் விடுவிக்கலாமா என்று பார்ப்போம்.

மேலும் சில விடயங்களை இத்தருணத்தில் உங்கள் முன்னிலையில் கூறிவைப்பது உசிதம் என்று கருதுகின்றேன். 30,40 வருடங்களுக்கு முன்னர் அனுமதிப் பத்திரம் பெற்று போரின் போது அப்பத்திரங்களைத் தொலைத்து காணிகளில் இருந்து வெளியேறி இப்பொழுது தமது காணிகளுக்கு சென்றவர்கள் அங்கு வேறு நபர்கள் இருப்பதைக் காண்கின்றார்கள். கேட்டால் உங்களிடம் பத்திரங்கள் இல்லை. இவை அரச காணிகள். நாங்கள் திரும்பவும் அவற்றைக் கையேற்று வேறு நபர்களுக்குக் கொடுத்து விட்டோம் என்கிறார்கள்.

அநேகமாக இங்கு வந்து அகதிகளாக இருப்போர் எம் நாடு திரும்பினால் அவர்கள் கதியும் இவ்வாறே அமையப்போகின்றது. எனவே அவர்களைத் திருப்பி அழைத்து புதிய இடங்களில் குடியிருத்த இந்திய அரசாங்கம் எமக்கு உதவ வேண்டும்.

மேலும் போரினால் பாதிக்கப்பட்ட வலுவற்றவர்கள், மாற்று வலுவுடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று 18000ற்கும் மேலானவர்கள் இருக்கின்றார்கள். ஒரு இலட்சத்திற்குக் கிட்டிய தொகையினரான இளம் விதவைகள் இருக்கின்றார்கள். தாய் தந்தையரை இழந்த அநாதைக் குழந்தைகள் இருக்கின்றார்கள். வேலையற்ற இளைஞர் யுவதிகள் பலர் சில தொழில்களுக்குத் தகைமை இருந்தும், தரம் இருந்தும் தவித்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இன்னுமொரு பிரச்சனை உண்டு. தொழிற்திறம் எம்மக்களிடையே குன்றியுள்ளதால் தெற்கில் இருந்து கொத்தன்மார் போன்றவர்களை வரவழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மக்களின் மனோநிலை போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைப் போக்க வேண்டிய வைத்திய வசதிகள் ஆலோசனை கூறும் வசதிகள் எம்மிடம் இல்லை. குழந்தைகளின் போஷாக்கின்மை மற்றொரு விடயம்.

இவற்றுடன் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழான வீடுகள் தேவையானவர்களுக்குக் கிடைக்காது அரசியல் சகாயம் பெற்றவர்களுக்குக் கிடைத்து வருகின்றது. தேர்ந்தெடுக்கும் முறை, தேர்ந்தெடுப்போர், வீட்டைக் கட்ட உதவும் பணம் யாவையும் நாம் வர முன் தீர்மானிக்கப்பட்டவை. இத்திட்டமானது மக்களுக்கு நன்மை பயக்க இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. ஆனால் ஊழல்கள் மலிந்து காணப்படுகிறது. இவற்றை நாம் எமது இந்தியத் தூதரகத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.

இவை பற்றிப் பேசுவதற்காக நான் வரவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தமிழில் பேசவேண்டும் என்றார்கள். மனதில் உள்ளதை உங்கள் முன் கொட்டித் தீர்க்கின்றேன். இதுவரை காலமும் இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டின் அரசாங்கங்களும் தமிழ்மக்களின் தலைவர்களும் எமக்கு அளித்து வந்திருக்கும் உதவிகள் எமது மனமார்ந்த ஆழ்ந்த நன்றிக்கு உரித்துடையன. ஒருஇலட்சத்திற்கும் மேலான மக்களை பார்த்து பராமரித்து வந்ததை பாராட்டுக்குரியது. எமது மனபூர்வமான நன்றியறிதல்களை இது சார்பாக தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஆனால் நாங்கள் இங்கு பேசும் பேச்சுக்கள், உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் இறுக்கும் பதில்கள் எம்மை மட்டும் அல்ல எமது வடமாகாண சபையையும் பாதிக்கக் கூடும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறக்கக் கூடாது. அதாவது உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுக்களை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி எமது வடமாகாண சபையைக் கலைக்கவும் தயங்காது எமது மத்திய அரசாங்கம்.

ஓன்றரை இலட்சம் படை வீரர்கள் முகாம் இட்டிருக்கும் இடத்தில் அவர்களை பாதிக்கும் கருத்துக்களை நாம் எடுத்தியம்பும் போது மிக்க கவனம் அவசியம். நிதானம் அவசியம். அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வராதீர்கள். சூழலுக்கு ஏற்பச் சூள் உரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டி விடுவார்கள்.

இறுதியாக நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். உங்கள் உணர்ச்சிகளை நாம் புரியாதவர்கள் அல்ல. நான் அவ்வாறு புரியாத ஒருவன் என்ற மாயையைப் பத்திரிகைகள் சில ஏற்படுத்தியுள்ளதை நான் அறிவேன். ஆனால் எமக்குத் தற்போது வேண்டியது உணர்ச்சிகள் அல்ல. உதவிகள் கூட அல்ல. அதற்காக நான் உதவி வேண்டாம் என்று கூறியதாக நினைக்க வேண்டாம். உரிய சட்ட மாற்றமே முக்கியம்.

தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் 13வது திருத்தச் சட்டமானது மேலும் திருத்தியமைக்கப்பட்டாலும் அது எமக்கு நன்மை பயக்காது. யாப்பின் அடிப்படை ஒற்றையாட்சியில் இருந்து மாற்றப்பட வேண்டும். எமது தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் யாப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனைக் கோர, கொண்டுவர இந்திய அரசாங்கத்திற்குத் தார்மீக உரித்து உள்ளது என்பதைக் கூறி வைக்கின்றேன்.

எம் சார்பிலுந் தான் நீங்கள் 1987ம் ஆண்டின் உடன்பாட்டில் கையெழுத்திட்டீர்கள் என்பதை மறவாதீர்கள். நீங்கள்  எதிர்பார்த்தவாறு எமது நிலைமை அமையவில்லையானால் எம் சார்பில் குரல் எழுப்ப உங்கள் நாட்டிற்கு  உரிமையுண்டு. எமக்குப் போதிய  உரித்தளிக்க எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுமாறு நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

வடகிழக்கு மாகாண மக்களிடையே கருத்துக்கணிப்பு நடைபெற வேண்டும் என்பது அந்த உடன்பாட்டின் உள்ளடக்கம். அதை உங்கள் அரசாங்கம் நடத்துமாறு கேட்கலாம். எமது நாளாந்த வாழ்க்கையை மற்றவர்களின் உள்ளீடல்கள் இன்றி நாம் வாழ இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளில் இறங்கலாம் என்று கூறி என்னைத் தமிழில் பேச வழிவகுத்த மக்கள் ஒன்றியத்தாருக்கு நன்றி கூறி அமர்கின்றேன்.

நன்றி

வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
வட மாகாண முதலமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *