மேலும்

‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’*

கடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம். ‘புதினப்பலகை’ ஒரு கூட்டு முயற்சியாகவே 2009 நவம்பரில் உருவாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருந்தனர். எங்கே என்ன தவறு நிகழ்ந்தது என்பதை அறிய மூன்று நாட்களாயிற்று.

எமது தளம் இயங்க பணம் பெற்று இடமளித்த ‘வழங்கி’ [Server] நிறுவனம் எமது இயங்குதலை முடக்கி இருந்தது. ஏறத்தாழ பதினோராயிம் பதிவுகள் அந்த முடக்கத்துள் சிக்கி உள்ளது. ஏன் முடக்கியது? இன்றுவரை தெளிவான காரணத்தை அறியமுடியவில்லை. இந்நிலையில் புதினப்பலகை ஆர்வலர்களிடமிருந்து விசாரிப்புகளுடன் மின்னஞ்சல்கள் வரத்தொடங்கின. இன்னும் நெருக்கமானோர் தொலைபேசி வழியாகவும் தொடர்புக்கு வந்தனர். அப்போது நாம் தனித்தில்லை தோள்கொடுக்க பலருண்டு என்ற உணர்வும் மகிழ்ச்சியும் ஆட்கொண்டது.

‘புதினப்பலகை’ அறியவைக்கவும், தெளிவை ஏற்படுத்தவும், செய்தியை செய்தியாக வழங்க வேண்டும் என்பதிலேயே எம் கவனத்தை குவித்திருந்தோம். இதனைத் தெளிவாகவே எமது முதல் ஆசிரியர் குறிப்புரையான புதினப்பார்வையில் தெரிவித்திருந்தோம். ஆனால் எமது இருப்பு அதாவது புதினப்பலகையின் இருப்பு ‘தோற்றப் போலிகள்’ பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதையும் அறிவோம். எம்மை எவ்வழியிலாயினும் முடக்க வேண்டுமென முயற்சித்திருந்தனர். அவர்களுக்கு எமது முடக்கம் நிம்மதியை தந்திருக்கும். ஆனாலும் அதே மிடுக்குடன் மீளவும் எழுந்துள்ளோம்.

எமது ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’டன் தொடரும் பயணத்திற்கு தோள் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகள். குறிப்பாக தன்னலமற்ற உணர்வுடன் புதிய தளத்தின் வடிவமைப்பை செய்த ‘இளம் தொழில்நுட்பவியலாளனுக்கு’ நெஞ்சார்ந்த நன்றிகள்.

‘அறி – தெளி – துணி’ எனவாய் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’.

நன்றி.

‘புதினப்பலகை’ குழுமத்தினர்.
03 -11 – 2014

* ஈழத்து கவிஞர் ‘மஹாகவி’ உருத்திமூர்த்தியின் கவிதை ஒன்றின் வரி நன்றியுடன் தலைப்பாக எடுத்தாளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *