மேலும்

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – செவ்வாயன்று நாடாளுமன்றில் சூடுபறக்கும்

maithri-parliamentசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு வரும் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூட்டப்படும் போது, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த வாரம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற செயலரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில், 112 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

எனினும், முன்னதாக 113 உறுப்பினர்களின் கையெழுத்து பெறப்பட்ட போதும், அது துரதிஷ்டமான எண் என்பதால், ஒரு உறுப்பினரின் கையெழுத்து நீக்கப்பட்டது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில், எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா பிரதமருக்கு எதிரான 112 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பது இதுவே முதல்முறையாகும்.

இதற்கிடையே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் போலிக் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *