மேலும்

இந்திய- சிறிலங்கா படைகளின் ‘மித்ர சக்தி-XII’  இராணுவப் பயிற்சி நிறைவு

இந்திய- சிறிலங்கா படைகளின் இருதரப்பு இராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி-XII’  நேற்று மாதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நிறைவடைந்தது.

இந்தப் பயிற்சியில் இந்திய மற்றும் சிறிலங்கா ஆயுதப் படைகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட படையினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நவம்பர் 14 ஆம் நாள் முதல் 26ஆம் நாள்  வரை நடைபெற்ற இந்தப் பயிற்சியானது, இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புத் திறனை மேம்படுத்துதல், பரஸ்பர புரிதலை வளர்த்தல் மற்றும் நீண்டகால உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருந்ததாக, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் இறுதிக்கட்டமாக, நவம்பர் 25 ஆம் நாள், ஒரு செயல்முறை விளக்க நிகழ்வு நடைபெற்றது.

இதனை சிறிலங்கா இராணுவத்தின் துணைத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் கே. ஜே. என். எம். பி. கே. நவரத்ன, சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய துஸதரகப் பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாதுரு ஓயாவில் நிறைவு விழா நடைபெற்றது.

இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் மிகப்பெரிய இருதரப்பு பயிற்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘மித்ர சக்தி’, முந்தைய பதிப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து, வெறும் கூட்டு ஆயுதப் பயிற்சி என்ற நிலையிலிருந்து, இரு நாட்டு இராணுவங்களின் பல்வேறு பிரிவுகள் பங்கேற்கும் விரிவான கூட்டுப் பயிற்சியாக மாற்றப்பட்டது.

இது இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த எடுக்கும் முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *