மாலைதீவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து சிறிலங்கா பாதுகாப்பு செயலர் பேச்சு
சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, மாலைதீவு பாதுகாப்புத் தலைவர்களுடன் உயர்மட்டச் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்புகளின் போது கவனம் செலுத்தப்பட்டது.
மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவை அமைச்சர் ஹசன் ரஷீத் மற்றும் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இப்ராஹிம் ஹில்மி ஆகியோருடன், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்தித்துப் பேசியுள்ளார்.
‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ (Colombo Security Conclave) நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மாலைதீவுக்குச் சென்றுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில், குறிப்பாக பிராந்திய பாதுகாப்பு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தச் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.

