ஆனந்தபுரச் சமர் – பாகம்: 2
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைகளின் இறுதிக்கட்டப் போரின் போது, ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற சமரில் நிகழ்ந்தேறிய, அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக திட்டம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வறிக்கையின் இரண்டாவது பகுதி.
இறுதி ஆட்டம் ஆரம்பம்
மார்ச் மாதம் முழுவதும், ஆனந்தபுரம் பெட்டி எனப் பெயரிடப்பட்ட பகுதிக்குள் நிலைமைகள் மோசமடைந்தமையால், ஆனந்தபுரத்திற்கு வெளியே நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் தளபதிகள், ஆனந்தபுரத்தின் வடக்கு பிரதேசத்திற்கு வடக்காக உள்ள, சிறிலங்கா இராணுவ நிலைகளுக்கு எதிராகப் பாரிய பதில் தாக்குதலை நடத்துவதற்குத் திட்டமிட்டார்கள்.
இந்த தாக்குதலுக்கான அணி 400 – 500 போராளிகளைக் கொண்டிருந்தது. அவர்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கையிருப்பினை மேற்பார்வை செய்து வந்த சாட்சி 1, அவரது அணியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40 பேருடன், அங்கம் வகித்திருந்தார்.
இதற்காக தெரிவு செய்யப்பட்ட போராளிகளில் நிர்வாகத்தில் இருந்தவர்களும், பலவந்தமாக இணைக்கப்பட்டவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இவர்களுக்கு, இந்த தாக்குதலுக்காக முள்ளிவாய்க்காலில் வைத்து அப்போது பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
சாட்சி 1, பெட்டிக்கு வெளியே அனுப்பப்பட்டு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 100 பெண் போராளிகளுக்குப் பொறுப்பாக விடப்பட்டார். இரணைப்பாலையில் இருந்து பக்கவாட்டாக சிறிலங்கா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாததுவதே திட்டமாக இருந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.
“கிடைமட்டமாக இலக்குகளை தாக்கக் கூடியதான ஆட்டிலறிகளை பயன்படுத்தி, கடுமையாகத் தாக்குதல் நடத்துவதன் மூலம், சிறிலங்கா பாதுகாப்பு படையினரை கிட்டத்தட்ட 5 கிலோ மீற்றர்களுக்கு பின்வாங்கச் செய்யவதே, புலிகளின் நோக்கமாக இருந்தது” என “த நேசன்” என்ற செய்தித்தாள் பின்னர் தனது அறிக்கையில் விளக்கமளித்தது.
சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவைச் சேர்ந்த கேணல் கோபித்தின் கட்டளையின் கீழ், இந்த நடவடிக்கைக்காக விடுதலைப் புலிகளின் முக்கிய அணிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக இன்னுமொரு போராளி தெரிவித்தார், ஆனால், ஒரு உயர்மட்ட ஒன்றுகூடலின் போது சிறிலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கோபித்தும் ஏனையோரும் கொல்லப்பட்டார்கள், இது திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கையை கடுமையாகப் பாதித்தது.
சிறிலங்கா இராணுவம் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி ஆனந்தபுரத்தினைச் சுற்றி தனது முற்றுகையை இறுக்கியதால் விடுதலைப் புலிகளின் திட்டமிடப்பட்ட இந்த எதிர்த்தாக்குல் கைவிடப்பட்டது.
ஆனந்தபுரத்தினை இறுதித் தாக்குதலுக்கான அல்லது இறுதிப் போராட்டத்திற்கான தனது தளமாக மாற்றுவதற்கு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முன்னர் உறுதிபூண்டிருந்த போதிலும், உயர் நிலைத் தளபதிகள், அவர் அந்தப் பெட்டியை விட்டு வெளியேற வேண்டும் என நிர்ப்பந்தித்தார்கள்.
சாட்சி 1 மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட 100 பெண் பேராளிகளை உள்ளடக்கிய போராளிகள், சிறிலங்கா இராணுவத்தின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியிலும், சண்டையிட்டு மீண்டும் உள்ளே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
பாதுகாப்பான ஒரு வழியைப் பெற்று, அதன் மூலம் 2009 மார்ச் 26 ஆம் நாள் சிறப்பாக பயிற்சி பெற்ற போராளிகள், பிரபாகரனை இரகசியமாக அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
ஆயினும், அங்கு தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தளபதிகளில் அநேகமானவர்கள் அந்தப் பெட்டிக்குள்ளே விடப்பட்டார்கள். அதற்குப் பொறுப்பாக மூத்த தளபதி கேணல் பானுவும் அவருக்கு அடுத்ததாக கேணல் தீபனும் இருந்தனர்.
அந்தப் பெட்டிக்குள் இருந்த ஏனைய தளபதிகளில் கேணல் கீர்த்தி, கேணல் கடாபி, கேணல் மணிவண்ணன், கேணல் விதுசா மற்றும் கேணல் துர்க்கா ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
பெரும்பாலான விடுதலைப் புலிகளின் சிறப்புப் படைகளும், போர் அனுபவம் மிக்க பேராளிகளும் அங்கு தங்கியிருந்தார்கள்.
சாட்சி 1 அங்கு நிற்குமாறு கேட்கப்பட்டார். கட்டளை மையத்திற்கு அருகில் இருந்த ஆனந்தபுரம் சந்தையடியில் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளை அமைக்குமாறு அவருக்கு தளபதி பானுவிடமிருந்து அறிவுறுத்தல்கள் கிடைத்தன.
மதிப்பீடுகள் வேறுபட்டாலும், பெட்டிக்குள் சுமார் 800 வரையான போராளிகள் இருந்ததாகவும், அவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர், ஏற்கனவே ஓரளவு கடுமையாக அல்லது மிகக் கடுமையாக காயமடைந்திருந்ததாகவும், சாட்சி 1 கூறுகின்றார்.
அடுத்த நாள் மார்ச் 27 இல், சிறிலங்கா இராணுவத்தினர் தற்போதிருந்த தமது முன்னரங்க நிலைகளை மீளநிலை நிறுத்திக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கிட்டத்தட்ட 2 சதுர கிலோமீற்றர்களாக சுருங்கியிருந்த இந்தப் பெட்டி மீது, சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இராணுவம் குண்டு வீச்சுக்களையும் எறிகணைத் தாக்குதல்களையும் சரமாரியாக மேற்கொண்டது. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பினை முறியடிப்பதற்கே இந்த தந்திரம் கையாளப்பட்டது.
பெட்டிக்கு உள்ளே முன்னேறிச் செல்வதற்கான எந்த முயற்சியையும் சிறிலங்கா இராணுவம் உடனடியாக மேற்கொள்ளவில்லை.
சாட்சி 1 விரைவில் காயமடைந்தவர்களுடன் இணைந்து கொள்கின்றார். அவர் சினப்பர் தாக்குதலுக்கு இலக்காகி, கழுத்து எலும்பில் காயமடைந்தார், இதன் பின்னர் இவரால் இலகுவாக அவரது தலையை அசைக்க முடியவில்லை.
இரத்தப் போக்கினை நிறுத்துவதற்கு, காயத்திற்கு கட்டுப்போடும் துணியைத் தவிர, அவரது காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு எந்த மருந்துப் பொருட்களும் இருக்கவில்லை, இவர் காயத்துடன் நடமாடக் கூடியவர்களில் ஒருவராக இருந்தார். மருத்துவ சேவைகள் அப்போதும் வழங்கப்பட்டு வந்த பெட்டியின் மேற்குப் பக்கத்திற்கு மாற்றப்பட்டார்.
இந்தப் பெட்டிக்குள் இன்னுமொரு போராளியான சாட்சி 3 உம் காயமடைந்திருந்தார், இவர் முன்னர் தொடையில் ஏற்பட்ட குண்டுச் சிதறல் காயத்துடன், தெற்குப் பக்கமாக இருந்த பாதுகாப்பு முன்னரங்கப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்.
காயமடைந்து மூன்று நாட்களின் பின்னர், முற்றாகக் குணமடையாத அவரை, அவரது தளபதியான கேணல் கடாபி மீண்டும் வருமாறு அழைத்தார், சரியாக அந்த நேரத்தில் தான், அவரும் அதற்குள் மாட்டிக் கொண்டார்.
இந்தக் கட்டத்திற்கு முன்னர் போராளிகளுக்கு ஒழுங்காக வெடிபொருட்கள் வழங்கப்பட்டு வந்ததுடன், போதியளவு உலர் உணவு மற்றும் தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகளும் வழங்கப்பட்டதாக, அவர் பதிவு செய்கிறார்.
விநியோக வழிகள் முடக்கப்பட்டதை தொடர்ந்து, நிலைமை அவ்வாறிருக்கவில்லை, அவரும் அவரது சகாக்களும் மெல்ல மெல்ல பட்டினியால் வாட ஆரம்பித்தார்கள்.
கொத்துக் குண்டுகள் மற்றும் வெள்ளை பொஸ்பரசு போன்றன, சிறிலங்கா அரசாங்கத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் புதிதானவை இல்லை என்றாலும், இவற்றைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினை சாட்சி 3 இப்போது தான், முதல் தடவையாக நேரடியாக முகங்கொடுக்கின்றார்.
பெப்ரவரியில் இருந்து நிலக்கண்ணிகளை வீதிகளில் அகற்றுவதில் இருந்து, மருத்துவ உதவிக்காக பேராளிகளை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்த சாட்சி 4, பத்துப் பேரைக் கொண்ட தனது மருத்துவக் குழுவுடன் அந்தப் பெட்டிக்குள் அகப்பட்டுக் கொண்டார்.
அவரும் அவரது குழுவைச் சேர்ந்த மூன்று பேரும், புதுக்குடியிருப்பு பக்கமாக இருந்த அப்போதைய முன்னரங்க நிலையில் இருந்த ஒரு பதுங்குகுழியில் கேணல் கீர்த்தியால் விடப்பட்டார்கள்.
அங்கே அவர்கள் சாட்சி 4 விபரிப்பது போல், ‘புதிதாக இணைந்தவர்களுடன்’ அல்லது ஆதரவுக் குழுக்களுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றினார்கள். அதாவது இந்தச் சமரினை எதிர்கொண்ட இவர்களில், போர் அனுபவம் கொண்டவர்களாக எவரும் இருக்கவில்லை.
சாட்சி 7, ஒரு பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர். இவர் ஆனந்தபுரத்திற்கு அனுப்பப்பட்ட எட்டுப் பேரைக் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தார், இவர்கள் அனைவரும் இறுதியில் பெட்டிக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள்.
நடைமுறையில் இந்தப் பெட்டி மூடப்பட்ட நிலையில், சிறிலங்கா அரசாங்கப் படைகள் கட்டவிழ்த்து விட்ட ஒரு பாரிய தாக்குதலினை விபரிக்கின்றார்.
எறிகணைகளின் ஊடாகவும் விமானங்களின் ஊடாகவும் கொத்துக் குண்டுகள் மழைபோல் பொழியப்பட்டதாக சாட்சி 7 பதிவு செய்கின்றார், ஆனால் பொஸ்பரஸ் அல்லாத, அவருக்கு தெரிந்திராத, சில வகையான குண்டுகள், வழமைக்கு மாறான -பயங்கரமான பாதிப்புக்களை -அவர் சிகிச்சையளித்தவர்கள் மீது ஏற்படுத்தியிருந்ததாகவும், அவர் கூறுகிறார்.
ஒரு வகையான குண்டு ‘மூச்சுத் திணறலினை ஏற்படுத்தியதுடன், அந்த பிரதேசமே கறுப்பாக மாறியது. அத்துடன் அங்கிருந்தவர்களினால் பார்க்க முடியவில்லை, சிலர் மயங்கி விழுந்தார்கள். அது அவர்களின் பார்வையை மறைத்தது. இதனை சற்றுத் தொலைவில் இருந்து அவரே அனுபவித்ததுடன் அவருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் இருந்தன.
அவரால் அடையாளங்காண முடியாத இன்னுமொரு வகைக் குண்டு, எறிகணைகள் மூலம் வீசப்பட்டது, அது புகையினை வெளியிட்டதுடன், வழமையான எறிகணை தாக்குதல்களில் ஏற்படுவதை விட, வித்தியாசமான முறையில், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது எரிகாயங்களை ஏற்படுத்தியது.
விடுதலைப் புலிகள் போராளிகளுடன் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த வரை தேங்காய் எடுப்பதற்காக வந்த குறைந்தது 20 பொதுமக்கள், இந்தப் பெட்டிக்குள் அகப்பட்டுக் கொண்டதாக சாட்சி 7 குறிப்பிடுகின்றார்.
அவர்களும் காயப்படத் தொடங்கிய வேளையில், போரில் நேரடியாக ஈடுபடாத இவ்வாறான பலருக்கு அவர் சிகிச்சையளித்திருந்தார்.
நீதித்துறையில் இருந்து சண்டைக்கு மாற்றப்பட்டு, சில வாரங்களுக்கு முன்னர் கைவிடப்பட்ட, புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு குழந்தையைப் பிரசவிப்பதற்காக தனது மனைவியைக் கொண்டு சென்ற சாட்சி 6, இந்த பெட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
சாட்சி 7 இனைப் போல், அவரும் சிறிலங்கா இராணுவம் அடையாளங் காணமுடியாத இரசாயன ஆயுதங்களை ஆனந்தபுரம் சமரில் பயன்படுத்தியதாகப் பதிவு செய்கின்றார். அவர் ‘புகைக்குண்டு போன்ற ஒருவகையான குண்டைப்’ பற்றி விபரிக்கின்றார்.
அது காற்றில் கலந்தவுடன் தோலில் கொப்பளங்களை உருவாக்கியதாகவும், அவை பல மணி நேரத்தில் வீங்கி நீர் நிரம்பிய பலூன்கள் போன்று வந்து, பின்னர் அவை வெடித்து தாங்க முடியாத அளவுக்கு காயத்தை ஏற்படுத்தியதாகவும் விபரிக்கின்றார்.
அத்துடன் சாட்சி 7 போல், சாட்சி 6 இரண்டாவதாக ஒரு வேறுபட்ட வகையான வெடிகுண்டினைப் பற்றி குறிப்பிடுகின்றார்.
அது கிட்டத்தட்ட 50 மீற்றர் சுற்றுவட்டாரத்திலுள்ள எல்லா ஒட்சிசனையும் உறிஞ்சி எடுத்தது. ‘குண்டு வெடித்த பின்னர் பல விடுதலைப் புலிகள் போராளிகள் அவர்களது உடல்களில் காயங்கள் எதுவுமின்றி சிறு சிறு குழுக்களாக உயிரிழந்தார்கள்’.
மார்ச் பிற்பகுதியில் வயிற்றிலும் குடலிலும் காயங்களுடன் ஆனந்தபுரத்தில் இருந்து அகற்றப்பட்ட சாட்சி 5 இதனை உறுதி செய்கின்றார்.
அவர் ஒரு நிரம்பி வழியும் கள மருத்துவமனையில் தறப்பாளில் கிடக்கும் போது, புகையை ஏற்படுத்தும் இந்தக் குண்டுகள் ‘தொண்டைக்குள் எரியும் உணர்வினையும் மூச்சுத்திணறலையும்’ ஏற்படுத்துவதாக , பெட்டிக்குள் இருந்து தொலைதொடர்புக் கருவியில் சொல்லப்பட்ட சம்பவங்களை ஆற்றாமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
மார்ச் 30 திங்கட்கிழமை: ஆனந்தபுரம் பெட்டியை முற்றாகத் துண்டிப்பதற்கு சிறிலங்கா இராணுவம் இருபுற முற்றுகைத் தாக்குதல் நகர்வினை மேற்கொண்டது.
மார்ச் 30 திங்கட்கிழமை, புதுக்குடியிருப்பில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் வெவ்வேறான அணிகள், ஆனந்தபுரத்தின் தெற்குப் பக்கமாகவும் வடக்குப் பக்கமாகவும் சென்றதுடன் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் பாதுகாப்பு நிலைகளுக்குள் முன்னேறிச் சென்றார்கள். இது ஒரு பாரிய இரு புறத்தாக்குதல் நகர்வாக திட்டமிடப்பட்டிருந்தது.
இவ்வாறு சென்ற படையினரில் பிரிகேடியர் சவேந்திர சில்வாவின் 58 ஆவது படைப்பிரிவு வடக்கிலும், பிரிகேடியர் கமல் குணரட்ணவின் 53 ஆவது படையணியுடன் இணைந்து செயற்பட்ட, கேணல் ரவிப்பிரிய தலைமையிலான நடவடிக்கைப் படைப்பிரிவு 8 இன் படையினரும் தெற்கிலும் இடம்பெற்றிருந்தார்கள்.
இந்த நடவடிக்கை வெற்றியளித்தால் இது பெட்டியை இறுக்கமாக சுற்றிவளைப்பதுடன் அதனை முற்றுமுழுவதுமாக துண்டித்து விடும்; சில ஆயிரம் விடுதலைப் புலிகள் போராளிகள் பல மடங்கு எண்ணிக்கையான அரசாங்கப்படைகளுடன் போரிட்ட பலத்த சண்டைக்கு மத்தியில், இரண்டு முனைகளிலும் சிறிலங்கா இராணுவத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிச் சென்றார்கள்.
இறுதியில் பெட்டியின் மறுபுறத்தினைச் சுற்றிச் சென்று ஆனந்தபுரத்திற்கும் அதற்கு அப்பாலுள்ள கடற்கரை மணல் முனையிலுள்ள ‘பாதுகாப்பு வலயத்திற்கும்’ இடையில் ஒரு இடத்தில் இரண்டு அணிகளும் சந்தித்துக் கொள்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.
மார்ச் 31 செவ்வாய்க்கிழமை: கேணல் லோறன்ஸ் இன் ஒருங்கிணைப்புடனான உடைப்பு முயற்சி தோல்வியடைகிறது.
அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை, தொடையிலுள்ள காயம் குணமடையாத போதிலும், கேணல் கடாபியின் பொறுப்பின் கீழ் இருந்த, தென்பகுதிக்கு திரும்பி வந்த சாட்சி 3, புதுமாத்தளனைச் சென்றடையும் நோக்கில், போராளிகள் மேற்கொண்ட ஒரு உடைப்பு முயற்சியில் பங்கெடுத்தார்.
கேணல் லோறன்சின் தலைமையின் கீழ், வெளியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகளை உடைத்துக் கொண்டு உள்நுழையும் தாக்குதல் முயற்சியில், இவரும் இவரது சக போராளிகளும் ஒருங்கிணைந்து செயற்பட்டார்கள்.
அப்போது இம்ரான் பாண்டியன் படையணிக்குப் பொறுப்பாக இருந்த கேணல் வேலவனின் பொறுப்பின் கீழ் இருந்த ஒரு அணி, கேணல் லோறன்சிற்கு கனரக ஆயுதச் சூட்டு ஆதரவை வழங்கியது.
ஆயினும், வேலவனின் அணியினரால் பயன்படுத்தப்பட்ட பல்குழல் எறிகணை செலுத்தி பழுதடைந்து விட்டது.
பத்து நாட்களின் பின்னர் இதுபற்றி எழுதிய ஆய்வாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், ஐந்து வாகனங்களில் நகர்ந்த 120 போராளிகளைக் கொண்ட கேணல் லோறன்சின் படை, எதிரியின் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு எரிந்து அழிந்ததாகவும், அதில் இருந்த பெரும்பாலானோர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த முயற்சி தோல்வி அடைந்ததுடன் கேணல் லோறன்சும் காயமடைந்தார்.
பாதுகாப்பமைச்சின் நிலைமை அறிக்கை அன்றைய தினம் ‘பலத்த சண்டை’ இடம்பெற்றதாக குறிப்பிட்டதுடன் இரணைப்பாலைப் பகுதியில் ‘படையினர் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு நிலைகளை பலவீனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக’ அறிவித்தது.
அத்துடன் ஒரு குறைவான இழப்பு மதிப்பீட்டைக் கொடுத்து, 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 11 பேர் காயமடைந்ததாகவும்’ அது தெரிவித்தது.
ஏப்ரல் 01 புதன்கிழமை: கடும் இழப்புக்களுடன் தோல்வியில் முடிந்த இரண்டாவது உடைப்பு முயற்சி
ஏப்ரல் 01 புதன்கிழமை, வெடிபொருட்களின் அளவு வேகமாக குறைந்து சென்ற நிலையில், பெட்டியின் தென்கிழக்குப் பதியிலுள்ள ஆனந்தபுரம் பாடசாலையில் இரண்டாவது தப்பிச்செல்லும் முயற்சியினை மேற்கொள்வதற்காக போராளிகள் மீள ஒன்று திரண்டார்கள்.
மீண்டும் ஒருமுறை சாட்சி 3 உம் இவ்வாறு ஒன்று திரண்டவர்களில் இருந்தார். ஆனால் இந்த புதிய முயற்சி ஒரு பேராபத்தினை நோக்கியதாக இருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் இருபக்க வழி முற்றுகை நகர்வு, புதிய உடைப்பினை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட அதே இடத்தையே, வெற்றிகரமாக சுற்றிவளைத்து மூடியிருந்து.
ஏப்ரல் 01 பாதுகாப்பு அமைச்சின் நிலைமை அறிக்கை கடுமையான சண்டையின் பின்னர், இரண்டு முனைகளிலிருந்தும் முன்னேறிச் சுற்றிவளைத்த அதன் படைகள், இறுதியாக ஆனந்தபுரத்தின் கிழக்குப் பக்கமாகவுள்ள பச்சைப்புல்மோட்டையில் சந்தித்ததுடன் நண்பகலில் பச்சைப்புல்மோட்டைச் சந்தியையும் கைப்பற்றியதாக கூறுகின்றது.
இதனுடன், பெட்டிக்கு உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் ஆபத்தானதாக இருந்த விடுதலைப் புலிகளின் இறுதி வழியை சிறிலங்கா இராணுவம் துண்டித்தது. இது முக்கியமான மேலதிக விநியோகப்பொருட்கள் அல்லது மேலதிக ஆளணிகள் பற்றிய இறுதி நம்பிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தது.
தோல்வியில் முடிந்த தமது தப்பிச் செல்லும் முயற்சியை மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகள் சிறிலங்கா இராணுவத்தினரும் வெறும் 20 மீற்றர்கள் தூரத்தில் நேருக்கு நேரே முட்டிக் கொண்டார்கள். எண்ணிக்கையில் மேலோங்கியிருந்த அரசாங்கப் படைகள் கண்ணீர் புகைக்குண்டு என்று சாட்சி 3 கருதியதைக் கொண்டு தாக்குதலை மேற்கொண்டு, தமது ஆயுதத் தாக்குதல்களையும் அதிகரித்தார்கள்.
இந்தப் புகைக்குண்டுகள் ‘மூச்சுத்திணறலையும் கண் எரிவையும் ஏற்படுத்தியது’. உடைத்துக் கொண்டு தப்பிச் செல்லும் முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகள் ஐந்து தளபதிகளையும் இழந்தது.
விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி அணியின் பொறுப்பாளர் கேணல் மணிவண்ணன், உடனடியாகவே கொல்லப்பட்டார்.
விடுதலைப் புலிகளின் மிகவும் மூத்த பெண் தளபதிகளான கேணல் துர்க்கா மற்றும் கேணல் விதுசா கடுமையாகக் காயமடைந்து சயனைட் அருந்தினார்கள். மேலும் இரண்டு தளபதிகள் காயமடைந்து மறுநாள் இறந்தார்கள்.
சிறிலங்கா இராணுவத்தினர் உயிர்தப்பியவர்களை தமது ஆயுதங்களை கீழே வைத்து விட்டு, சரணடையுமாறு ஒலிபெருக்கிகளில் தமிழில் கேட்டுக் கொண்டார்கள்.
சாட்சி 3 ஞாபகப்படுத்திக் கொள்வது போல், ‘எங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனவும், தண்டனை இல்லாமல், மீளஒன்றிணைவதற்கு அனுமதிக்கப்படுவோம்’ எனவும் நம்புவதற்கு சாத்தியமில்லாத செய்தி விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பினை எவரும் ஏற்றுக் கொண்டதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் காணவில்லை, பதிலாக அவரும் அவரது தோழர்களும் தமது பாதுகாப்பு நிலைகளுக்குச் சென்றார்கள்.
பெரும் எண்ணிக்கையான தமது சகபோராளிகளின் இழப்பினால் சாட்சி 3 மிகவும் மனச்சோர்வடைந்திருந்ததுடன், அவரே சயனைட் அருந்துவதற்கு முடிவெடுத்திருந்தார். ஆனால் அவரது பொறுப்பாளர்களில் ஒருவர் அவருடன் கதைத்து அவரைத் தடுத்து நிறுத்தினார்.
அன்றைய தினம், கட்டளை மையம் இருந்த பெட்டிக்கு எதிர்ப்பக்கமாக சிறிலங்கா இராணுவத்தின் வேறு படைகள் இன்னும் நெருக்கமாக முன்னேறி வந்தமையால் விடுதலைப் புலிகளின் தலைமை மீதான நம்பிக்கை குலையத் தொடங்கியது.
வீதியிலுள்ள நிலக்கண்ணிகளை அகற்றும் பணியிலிருந்து, காயப்பட்டவர்களை மருத்துவ உதவிக்காக வெளியேற்றும் பணிக்கு மாற்றப்பட்டு, பின்னர் ஒரு பாதுகாப்பு பதுங்குகுழியில் பணிக்கு விடப்பட்ட சாட்சி 4, எதிர்த்து நிற்கும் படைகளுக்கு எதிராக மூத்த தளபதி பானு சரியான முறையில் எதிர்த்தாக்குதலை நடத்தாமை குறித்து இளம் தளபதிகள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்ததாகக் கூறுகின்றார்.
தளபதி பானுவுக்கும் அவரது இரண்டாம் நிலைத் தளபதி தீபனுக்கும் இடையில் தந்திரங்கள் மற்றும் மூலோபாயங்கள் குறித்து ஒருவிதமான முறுகல்நிலை காணப்பட்டது.
கேணல் தீபன் கடுமையாகக் காயமடைந்து கட்டளை மையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது தளபதி பானு அவ்வளவிற்கு பெரிதாக அக்கறை காட்டாமல் நடந்து கொண்டார் என்பதை சாட்சி 4 விபரிக்கின்றார்.
அதேவேளை, தளபதி பானு, அப்போது கேணல் கடாபியை தனக்கு அடுத்த நிலையிலுள்ள தளபதியாக நியமித்திருந்தார்.
ஒரு சந்தர்ப்பத்தில், அன்று அல்லது அடுத்தநாள் சாட்சி 4 காயமடைந்தார். கேணல் கீர்த்தி அவரை மேற்கு பாதுகாப்பு முன்னணி நிலையில் மேலதிக போராளிகளுடன் இணைத்து விட்டார். அத்துடன் அங்கு நெருக்கமாக இடம்பெற்ற மோதலில் வீசப்பட்ட கைக்குண்டின் சிதறலில் காயமடைந்தார்.
பின்னர் “த நேசன்” என்ற செய்தித்தாளின் கட்டுரையில் ஆளில்லா வேவு விமானங்கள் மற்றும் பீச் கிராப்ட் உளவு விமானங்களின் ‘முழு நேர வான் கண்காணிப்பு’ அரசாங்கத்தின் தரைப் படையினருக்கு பெட்டிக்குள்ளே இருக்கும் விடுதலைப் புலிகளை இலக்கு வைக்க ‘எவ்வளவு பெரிய உதவியாக’ இருந்தது என்பது பற்றி தொகுத்துக் கூறியது.
அதேவேளை, ‘புலிகள் உடைத்துக் கொண்டு வெளியே செல்வதை அல்லது உடைத்துக் கொண்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் வருவதை தடுக்கும் வகையில் விசேட படைகள் தமது பெயர் போன 8 பேரைக் கொண்ட அணிகளை அந்த பிரதேசம் முழுவதிலும் பணியில் ஈடுபடுத்தியிருந்தார்கள்’.
ஏப்ரல் 02 வியாழக்கிழமை மாலை: கடுமையாகக் காயமடைந்தவர்களை கணணி நிலையத்திற்கு நகர்த்தும் போராளிகள்
ஏப்ரல் 02 வியாழக்கிழமை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் நிலைமை அறிக்கை, சிறிலங்கா இராணுவத்தின் தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக இன்னும் ‘கடுமையான சண்டை’ இடம்பெற்று வருவதாக, பதிவு செய்தது.
அன்றைய தினம் மாலையில் அரசாங்கப் படைகள் தடுத்து நிறுத்த முடியாத படி நெருக்கமாக முன்னேறி வந்திருந்த நிலையில், உயிர்தப்பியிருந்த விடுதலைப் புலிகள் கட்டளைத் தலைமை, ‘கடுமையான மற்றும் பாரிய’ காயங்களுடன் இருந்த கிட்டத்தட்ட 350 போராளிகளை, பெட்டியின் மேற்குப் பக்கமாக இருந்த , மருத்துவ நிலையங்களில் இருந்து, கிழக்கு மூலைக்கு நகர்த்துவதற்கு முடிவெடுத்தது.
ஏனைய 10-15 வரையான போராளிகளுடன் இணைந்து இந்தப் பணிக்கு உதவுமாறு கேட்டு சாட்சி 4 இற்கு கேணல் கீர்த்தி மீண்டும் புதிய பணி வழங்கினார். காயமடைந்தவர்கள் விடுதலைப் புலிகளின் கணணி நிலையம் இருந்த வளவுக்கும் இடமாற்றம் செய்யப்பட இருந்தார்கள்.
இது ஒரு தேவாலயத்திற்கு முன்பாகவும் தளபதிகள் திட்டமிட்ட பாரிய வெளியேற்றத்திற்கான இடத்திற்கு அருகிலும் அமைந்திருந்தது.
முன்னர் வகுப்பறையாகப் பயன்படுத்தப்பட்ட கணனி நிலையத்தின் பிரதான கட்டிடம் கொங்கிறீட்டினால் ஆன கூரையைக் கொண்டிருந்தது, இங்கு கடுமையாக காயமடைந்தவர்கள் நெருக்கமாக வைக்கப்பட அதேவேளையில், கடுமையாக காயப்படாதவர்கள் அதற்கு அருகில் இருந்த கட்டடங்கள் மற்றும் பதுங்குகுழிகளுக்குள் பிரித்து விடப்பட்டனர்.
இந்த வளவு மாமரங்களினால் ஓரளவிற்கு சூழப்பட்டிருந்ததுடன், தகரவேலிக்குப் பின்னால் அமைந்திருந்தது. இது எறிகணைகள் மற்றும் சினப்பர் தாக்குதல்களில் இருந்து ஓரளவிற்குப் பாதுகாப்பை வழங்கியது.
இருளுவதற்கு முன்னர் ஆரம்பித்து, பல மணித்தியாலங்களாக அங்கும் இங்குமாக சாட்சி 4 ஏற்கனவே கிட்டத்தட்ட கடுமையாகக் காயமடைந்த 60 பேரை இடமாற்றம் செய்ய உதவினார். அப்போது அவர் நேரடித் தாக்குதலுக்கு இலக்காகி குண்டுச் சிதறல் தலையில் பட்டு, அவரது பார்வை நரம்புக்கு அருகில் வரை சென்றது.
அவர் கிழக்குப் பக்கத்திற்குச் சென்று அங்கு தங்கினார். தப்பிச் செல்வதற்காக கரும்புலிகள் தாக்குதல் நடத்தி ஒரு புதிய பாதையை திறக்கப் போகிறார்கள் என்ற வதந்திகள் பரவியது.
வியாழன் இரவு முழுவதும் – வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 2 – 3 : வெளியேற்றப்பட்ட கட்டளை மையம்
மேற்குப் பகுதியில் அந்த வியாழக்கிழமை மாலையில் சாட்சி1 இருந்தார், இவர் முன்பு விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை நிர்வகிப்பதில் கரிசனையாக இருந்தார். அத்துடன் புதிதாக சேர்க்கப்பட்ட 100 பெண் போராளிகளுடன் பெட்டிக்குள் ஊடுருவி இருந்ததுடன், பின்னர் சினைப்பர் தாக்குதலில் கழுத்து எலும்பில் காயமடைந்திருந்தார்.
கட்டளை மையத்தினையும் அருகிலிருந்த மருத்துவ நிலையங்களையும் கைவிட்டு எல்லாப் போராளிகளையும் கணனிப்பிரிவின் முகாமிற்கு பின்வாங்கி வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடமிருந்து ஒரு செய்தி வந்தது.
கணனிப் பிரிவின் வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு பதுங்குகுழி உள்ள இடத்தில் ஒன்று கூடுமாறு உயிர்தப்பி காயத்துடன் நடமாடக் கூடியவர்களாக இருந்தவர்களுக்கு சொல்லப்பட்டது, அத்துடன் சிலர் தேவாலயத்தினுள் தஞ்சம் புகுந்தார்கள்.
அது ஒரு பயங்கரமான நகர்வாக இருந்தது. ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில், தளபதி பானு மற்றும் படுகாயமடைந்திருந்தும் நடமாடக் கூடியதாக இருந்த, கேணல் தீபன் மற்றும் கேணல்களான கடாபி மற்றும் மணிவண்னன் ஆகியோருடன் பின்வாங்கிச் செல்வதற்கு, சாட்சி 1 தனது சொந்த அணியைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களுடனும் புதிதாக இணைக்கப்பட்ட பெண் போராளிகளுடனும், ஒருங்கிணைந்து செயற்பட்டார்.
ஆனால் அவர்கள் வெளியே செல்ல ஆரம்பித்த வேளையில், பரசூட்டுகளில் இருந்து தொங்கவிடப்பட்ட உயர் ஒளிச் செறிவைக் கொண்ட மெதுவாக கீழே விழும் ஒளியான பரா வெளிச்சத்தினால் திடீரென வானமே நிரம்பியது.
இதனுடன் அவர்கள் கடுமையான எறிகணைத் தாக்குதலுக்கு உட்பட்டார்கள். பல போராளிகள் காயமடைந்தனர், சிலர் படுகாயமடைந்தனர். ஏனையவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள். இயலுமானவர்கள் பாதுகாப்பு தேடி எல்லா திசைகளிலும் கட்டுப்பாடில்லாமல் ஓடினார்கள்.
தளபதி பானுவை அதன்பின்னர் சாட்சி 1 காணவில்லை, ஆனால் கேணல்களான தீபன், கடாபி, மணிவண்ணன் மற்றும் 30 வேறு போராளிகளுடன் அவர் பாதுகாப்பு தேடி ஒரு இடத்தில் இருந்தார்.
தாக்குதல்கள் சற்று நின்றிருந்த வேளையில், கேணல் கடாபி, சுற்றியுள்ள இடங்களை தனக்கு நன்றாக தெரியும் எனவும், தான் அவர்களை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் கூறி, அதற்கு தலைமை தாங்கினார்.
அவர்களது குழு மீண்டும் புறப்பட்ட வேளையில், சாட்சி 1 மற்றும் அவரது சகதோழர்கள் ஆங்காங்கே கிடந்த இறந்த போராளிகளிடமிருந்து ஏதாவது ஆயுதங்கள் மற்றும் மிஞ்சிக்கிடந்த ரவைகளை மீட்டெடுப்பதற்காக, குனிந்தபடி கிட்டத்தட்ட 100 மீற்றர்கள் சத்தம் போடாமல் எந்த தடையுமின்றி சென்றார்கள்.
திடீரென சிறிலங்கா இராணுவம் ஒரு புதிய, மோசமான, மிக நெருக்கமான தாக்குதலை மேற்கொண்டது. இந்தச் சம்பவம் பற்றிய விபரங்களில் சற்று வேறுபாடுகள் இருப்பினும், ஒரு காலில் எலும்பு உடைவு ஏற்பட்டதுடன், கேணல் கடாபி கடுமையான காயத்திற்குள்ளானதாக அனைவரும் கூறுகிறார்கள். இதற்கிடையில், கேணல் மணிவண்ணன் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.
சாட்சி 1, கேணல் தீபன் மற்றும் ஏனையவர்கள் நிலையெடுத்து சிறிலங்கா இராணுவத்தினர் பின்வாங்கிச் செல்லும் வரை சண்டை பிடித்தார்கள், அப்போது காயமடைந்த கடாபிபை மீட்டு வருமாறு கேணல் தீபன் போராளிகளுக்கு உத்தரவிட்டார்.
இப்போது கடாபியை அவரது மெய்ப்பாதுகாவலர்கள் நோயாளர்களைக் காவும் படுக்கையில் காவிக் கொண்டு வந்தார்கள், உயிர்தப்பிய குழுவினர் தொடர்ந்தும் கிழக்கு மூலையை நோக்கி நகர்ந்து சென்றார்கள், அவர்கள் நகர்ந்து செல்லும் போது, மீண்டும் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்கானதாகவும் , கேணல் கடாபியின் மெய்ப்பாதுகாவலர்கள் தாக்குதலுக்கு இலக்காகி அவர்களில் எவருமே உயிர்தப்பவில்லை எனவும், இந்தச் சம்பவம் பற்றிய விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
விடிகாலைக்கு முன்னர், ஏப்ரல் 03 வெள்ளிக்கிழமை,: மீண்டும் தோல்வியடைந்த பெட்டியை உடைத்து உள் நுழைவதற்கான கேணல் லோறன்சின் முயற்சி
தனது தலையிலும் பார்வை நரம்பிலும் கடுமையாக காயமடைந்த சாட்சி 4, எஞ்சியிருந்த விடுதலைப் புலிகள் அனைவரும் பெட்டியின் மேற்குப் பக்கத்தில் இருந்து பின்வாங்கிச் செல்லும் வேளையில், இரவு முழுவதும் கிழக்குப் பகுதியிலே இருந்தார்.
கரும்புலிகள் வந்து கொண்டிருப்பதாக வதந்திகளும் பரவின, சிறிலங்கா இராணுவத்தின் நிலைகள் மீது இரண்டாவது தாக்குதல் முயற்சியினை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட கேணல் லோறன்சிற்காக, அவரும் ஏனையவர்களும் காத்துக் கொண்டிருந்தார்கள். வடகிழக்குப் பக்கமாக அவர் வருவார் என்று சாட்சி 4 கேள்விப்பட்டிருந்தார்.
கேணல் லோறன்ஸ் உடைத்து உள்ளே நுழைய முடிந்தால், போராளிகள் பெட்டிக்கு உள்ளே இருந்து சண்டை பிடித்துக் கொண்டு சென்று, அவரைச் சந்திக்க வேண்டும். அதாவது காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தக் கூடியதாக வாகனங்கள் சென்று வரக்கூடிய ஒரு பாதுகாப்பான வெளியேற்றப் பாதையை உருவாக்குவதே திட்டமாக இருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில், தீபனின் தலைமையின் கீழ் இருந்த சாட்சி 1 மற்றும் அவரது குழுவில் எஞ்சியிருந்தவர்களும் இறுதியாக கணனி நிலையத்திற்கு அருகில் இருந்த ஒன்று சேரும் இடத்தினை வந்தடைந்தார்கள், இந்தக் கணனி நிலையத்திற்குள்ளே கடுமையாகக் காயப்பட்டவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுடன், இப்போது கடுமையாகக் காயமடைந்த கேணல் கடாபியையும் அங்கு வைத்திருந்தார்கள்.
சாட்சி 1 கழுத்து எலும்பில் காயமடைந்திருந்த போதிலும், ஆனந்தபுரம் சந்தையடியில் பாதுகாப்பு நிலைகளை மீளமைத்து சிறிலங்கா இராணுவத்தின் முன்னேற்றத்தினை அவதானிக்குமாறு, சாட்சி1 இற்கு கேணல் தீபன் கட்டளையிட்டார்.
கேணல் அன்ரன் மற்றும் ஏனைய போராளிகளையும் இவருடன் கேணல் தீபன் அனுப்பி வைத்தார். சாட்சி 1 அறிந்தவரை, வெளியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் முன்னரங்க நிலைகளை உடைப்பதற்கான விடுதலைப் புலிகளின் முயற்சியினை புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான் ஒருங்கிணைத்து வந்தார்.
இதைவிட, கரும்புலிகளால் குறுகிய நேரத்திற்கு முன்னரங்க நிலைகளை உடைக்க முடிந்தது என்றும் அறிந்தார். ஆனால் அவ்வாறிருந்தும், சிறிலங்கா இராணுவத்தினர் பதில் தாக்குதலை மேற்கொண்டு அந்த உடைப்பு இடம்பெற்ற பகுதியை விரைவாகவே மூடிவிட்டார்கள். அத்துடன் கேணல் லோறன்சின் முயற்சிகளும் மீண்டும் ஒருமுறை தோல்வியில் முடிந்தன.
வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில், பெட்டியினுள் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப் புலிகள் படைகளும் தமது இறுதியான தற்காப்பு நிலைகளுக்குச் சென்றிருந்ததுடன், சாட்சி 4 இன் கணிப்பீட்டின் படி இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவினை விட, சிறியதாக சுருங்கிய ஒரு நிலப்பரப்பினுள் அவர்கள் அகப்பட்டிருந்தார்கள்.
கேணல் கடாபி கடுமையாக காயமடைந்ததை அடுத்து, பெட்டிக்குள் எஞ்சியிருந்த சண்டைப் போராளிகளுக்கு கேணல் கீர்த்தி இரண்டாவது நிலைக் கட்டளைத் தளபதியானார். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அன்று இரவு பொட்டம்மான் கேணல் கீர்த்தியைத் தொடர்பு கொண்டு முழுமையான கட்டளைப் பொறுப்பினை ஏற்குமாறு கேட்டார்.
இந்த நடவடிக்கையினை தான் நேரடியாகப் பார்த்ததாகவும், தனக்குப் பதிலாக இன்னுமொருவர் நியமிக்கப்படுவதை தளபதி பானு ஏற்றுக் கொண்டதாகவும் சாட்சி 4 தெரிவிக்கிறார்.
மிகுதி நாளை தொடரும்.


