மேலும்

பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டது ஏன்?- விளக்கமளிக்க அரசிடம் கோரிக்கை

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’  தொடர்பாக, மூத்த சட்டவாளர் ரியன்சி அர்செகுலரத்ன தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரைகளை, ஏன் புறக்கணிக்கப்பட்டது என்பது குறித்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

17 பேர் கொண்ட இந்தக் குழுவில், சட்டமா அதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, காவல்துறை, ஆயுதப்படைகள் மற்றும் சிறிலங்கா சட்டவாளர் சங்கம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சட்டம் தொடர்பான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ், அந்தக் குழுவின் அறிக்கையில் உள்ள மூன்று அம்சங்களுடன் தான் உடன்படவில்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவை, பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் (இது மிகவும் பரந்த அளவில் இருப்பதால், அதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது);

நிர்வாக ரீதியிலான தடுத்து வைப்பு (இது அமைச்சின் செயலாளரின் கைகளில் இருக்கக்கூடாது, நீதித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்);

மற்றும் அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரம் (இது நீதித்துறை அதிகாரியிடமே இருக்க வேண்டும்) ஆகியனவாகும்.

குறிப்பிட்ட சில விதிகதைத் தவிர, மற்ற அனைத்து விதிகளிலும் குழு உறுப்பினர்கள் அனைவரும் உடன்பட்டிருந்தனர்.

இதில் தடுப்புக்காவல் காலத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில், அவருக்குப் பிணை வழங்க நீதிவானுக்கு அதிகாரம் அளிப்பது போன்ற அம்சங்களும் அடங்கும்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தை நான் ஆய்வு செய்தபோது, ​​குழுவில் ஒப்புக்கொள்ளப்பட்ட அம்சங்களிலிருந்து, இதில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதைக் கண்டறிந்தேன்; குறிப்பாக, பிணை தொடர்பான விதிகளிலும், தடுப்புக்காவல் காலத்தை நீடிக்கும் நடைமுறையிலும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் குறித்தோ அல்லது அதற்கான காரணங்கள் குறித்தோ குழுவிற்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

குழுவுடன் எவ்வித ஆலோசனையும் இன்றி, யார் அல்லது எதன் தூண்டுதலால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன என்பது குறித்து குழுவிடம் எதுவும் கூறப்படவில்லை.

எனவே, குழுவின் அறிக்கையிலிருந்து இந்த சட்டமூலம் எவ்வாறு விலகிச் சென்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, நேற்று நான் குழுவின் தலைவர் றியன்சி அர்செகுலரத்னவுக்கு கடிதம் எழுதினேன்.

இந்தக் குழுவில் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள், நீதி அமைச்சின் அதிகாரிகள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள், அத்துடன் பல மாகாண சபை உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தற்போதைய வடிவில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருந்தது போன்ற நீண்டகாலத் தடுப்புக்காவல் தொடரும்.

சந்தேக நபர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும், இந்தச் சட்டத்தின் கீழ் முன்னிறுத்தப்படும் நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்  கீழ் முன்பு நடந்தது போலவே, அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள், காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.” என்றும் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *