நம்பிக்கையில்லா பிரேரணை நவம்பர் 3இல் விவாதிக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு
சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நவம்பர் 3ஆம் நாள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என, அவை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய குறித்த பிரேரணையைத் திருத்தி, ஒக்ரோபர் 8ஆம் நாளுக்கு முன்னதாக மீண்டும் சமர்ப்பிக்கத் தவறியமையாலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 3ஆம் நாள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.
இருப்பினும், திருத்தப்பட்ட பிரேரணையை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறியதால், திட்டமிட்டபடி இந்த விவாதம் இடம்பெறாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நவம்பர் 3ஆம் நாள், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலாக, ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக, சபாநாயகருக்கு எதிரான திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்தால், 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் (பாதீடு) மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக, இதற்கான விவாதத்திற்கு அரசாங்கம் நேரம் ஒதுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
