மேலும்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து ஐ.நா கடும் கவலை

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் (PSTA) சட்டமூலம் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் (OHCHR) கடும் கவலைகளை எழுப்பியுள்ளது.

அதன் பல விதிகள் தன்னிச்சையான தடுப்புக்காவலுக்கு வழிவகுக்கலாம், கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் சித்திரவதை மற்றும் பிற மனித உரிமை மீறல்களின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று அது எச்சரித்துள்ளது.

செப்ரெம்பர் 22,ஆம் நாள் அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த சட்டமூலம் குறித்து. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், 19 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முந்தைய வரைவுகளுடன் ஒப்பிடும்போது பல மேம்பாடுகளை அது ஒப்புக்கொண்டாலும், முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம், தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் குறைபாடுகளைத் தொடர்ந்து மீண்டும் உருவாக்குகிறது அல்லது விரிவுபடுத்துகிறது என்றும் எச்சரித்துள்ளது.

ஒக்டோபர் 13ஆம் நாளிடப்பட்ட இந்த மதிப்பீட்டு அறிக்கையில், சிவில் சமூகம், சுதந்திரமான நிறுவனங்கள் மற்றும் சட்ட வல்லுநர்களை உள்ளடக்கிய அர்த்தமுள்ள கலந்தாலோசனையுடன், சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு முன்னர் ஒரு விரிவான மறுஆய்வை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்புக்காவல் அதிகாரங்கள்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இரண்டு மாதங்கள் வரை தடுப்புக்காவலுக்கு அங்கீகாரம் அளிக்க அனுமதிக்கும் விதிகள், அதிகபட்சமாக ஓராண்டு வரை தடுப்புக்காவல் இருக்கலாம் என்பது தொடர்பான விதிகள் என்பன, இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கவலைகளில் ஒன்றாக உள்ளது.

ஆரம்ப இரண்டு மாதங்களுக்குப் பிறகான நீடிப்புகளுக்கு மேல்நீதிமன்ற ஒப்புதல் தேவைப்பட்டாலும், ஆரம்பகட்ட தடுப்புக்காவல் முடிவு ஒரு சுதந்திரமான நீதிமன்றத்தை விட நிர்வாகத்திடமே உள்ளது என்பதை காட்டுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்தது.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது ஆயுதப் படைகளால் கைது செய்யப்பட்ட 72 மணி நேரத்திற்குள் சந்தேக நபர்கள் ஒரு நீதிபதி முன் நிறுத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கை, கைது செய்யும் அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து சந்தேக நபர்களும் கூடிய விரைவில், பொதுவாக 24 மணி நேரத்திற்குள், ஒரு நீதிபதி முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்கள்

பரந்த அளவில் வரையறுக்கப்பட்ட பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும் அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் தனிநபர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் கவலை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இரகசியத் தகவல்கள் மற்றும் பயங்கரவாத வெளியீடுகள் தொடர்பான விதிகளை அந்த அறிக்கை எடுத்துக்காட்டியதுடன், அவை பாதுகாப்பு நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் விசாரணைகள் குறித்த முறையான செய்திகளை குற்றமயமாக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த சட்டமூலம், ஊடகத் தகவல்களின் மூலங்கள், முறையான பொதுநல அறிக்கைகள் மற்றும் மனித உரிமை ஆவணங்களை வெளிப்படையாகப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த பணியகம் கூறியது.

பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள்

முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்தில், ஆயுதப் படைகள் மற்றும் கடலோரக் காவல்படையின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சில கைது மற்றும் சோதனை அதிகாரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்கின்ற நிலையில், இந்த அதிகாரங்கள், குறிப்பாக சந்தேக நபர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி இராணுவக் காவலில் வைக்கப்படும் இடங்களில், தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் கட்டாயமாகக் காணாமல் போதல் போன்ற கூடுதல் அபாயங்களை உருவாக்கக்கூடும் என்றும்  மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் எச்சரித்துள்ளது.

சட்ட அமுலாக்கத்திற்கான முதன்மைப் பொறுப்பை காவல்துறையே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளதுடன், ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்ட பரந்த கைது, தடுப்புக்காவல் மற்றும் தேடுதல் அதிகாரங்களை நீக்குமாறும் பரிந்துரைத்துள்ளது.

போராட்டங்கள் மற்றும் அமைப்புகளுக்கான கட்டுப்பாடுகள்

அமைப்புகளைத் தடைசெய்ய  சிறிலங்கா அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் விதிகள் மற்றும் நடமாட்டம், பொதுக் கூட்டங்கள் மற்றும் தகவல் தொடர்புகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளுக்கு அனுமதிக்கும் விதிகள் குறித்தும் அந்த அறிக்கை மேலும் கேள்வி எழுப்பியுள்ளது.

போதுமான அளவு வரையறுக்கப்படாத அதிகாரங்கள், அமைதியான கூட்டங்கள், அரசியல் எதிர்ப்பு மற்றும் சட்டபூர்வமான குடிமை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படலாம் என்றும் அது எச்சரித்துள்ளது.

வலுவான நீதித்துறை மேற்பார்வை, தெளிவான காலக்கெடு மற்றும் இத்தகைய முடிவுகளின் சுதந்திரமான மறுஆய்வு ஆகியவற்றை ஐ.நா. பரிந்துரைத்துள்ளது.

தற்போதைய சட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னரும் கூட, நிலுவையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு வழக்குகள் மற்றும் சில தற்போதைய விதிமுறைகள் தொடர இடைக்கால ஏற்பாடுகள் அனுமதிக்கக்கூடும் என்றும் அந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் எச்சரித்துள்ளது.

அனைத்துலக மனித உரிமைகள் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் வகையில், முன்மொழியப்பட்ட சட்டத்தை கணிசமாகத் திருத்தி வரைவு செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அடிப்படை உரிமைகளை மதிக்கும் அதே வேளையில் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதில் சிறிலங்காவுக்குத் தொழில்நுட்ப உதவியை வழங்கத் தயாராக இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளர் பணியகம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *