மேலும்

சிறிலங்காவில் இருந்து விடைபெறும் சீனத் தூதுவர்- மகாநாயக்கர்களிடம் ஆசி பெற்றார்

சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து விலகிச் செல்லும்,  கீ சென்ஹொங், மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

வரும், ஜூலை 31 ஆம் நாளுடன் சிறிலங்காவில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும்,  கீ சென்ஹொங், கடந்த 18 ஆம் நாள் பிற்பகல் ​​மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்போட்டுவாவே சிறி சுமங்கல தேரரையும், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரககோட சிறி ஞானரத்ன  தேரரையும் சந்தித்து ஆசி பெற்றார்.

சீனத் தூதுவர் கீ சென்ஹொங் ஒரு இராஜதந்திரியாக தனது கடமைகளை மிக உயர்ந்த தரத்தில் ஆற்றியுள்ளார் என்றும்,  ஏறக்குறைய ஆறு ஆண்டு காலப் பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் ஒருபோதும் மறக்கப்படாது என்றும் மல்வத்த மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

ஓய்வுக்குப் பின்னரும், கீ சென்ஹொங் சிறிலங்காவில் தங்கியிருக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் மல்வத்த மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் எடுத்த முன்னெடுப்புகளை, அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரககோட சிறி ஞானரத்ன தேரரும், பாராட்டியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சிறிலங்காவை தனது இரண்டாவது வீடு போல் உணர்வதாகவும்,  தனது பதவிக்காலம் ஜூலை 31 நாளுடன் முடிவடைந்தாலும், இயன்றபோதெல்லாம் சிறிலங்காவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *