பிடியாணையை நீக்க கோரிய பசில் – நீதிவான் நிராகரிப்பு
வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை, திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை, மாத்தறை பிரதம நீதிவான் சதுரங்க எரங்க திசநாயக்க, நிராகரித்துள்ளார்.
மாத்தறை, எலியகந்த வீதியில் உள்ள பிரவுன்ஸ் ஹில்லில் ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கியது தொடர்பாக காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மே 22 ஆம் நாள் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பசில் ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டவானர், தனது கட்சிக்காரர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருப்பதால், நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாக இயலவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக மருத்துவ அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
சந்தேக நபரின் உடல்நிலையைக் காரணம் காட்டி, பிடியாணையைத் திரும்பப் பெறுமாறும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும், பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் முன்னிலையாகத் தவறியதைச் சுட்டிக்காட்டிய நீதிவான் , சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாவிட்டால் பிடியாணையைத் திரும்பப் பெற முடியாது என்று கூறினார்.
அத்துடன் பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.
