மேலும்

சிறிலங்காவின் திறனை விட கடல்சார் அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு

கடல்சார் பாதுகாப்புச் சூழலில், அவற்றை எதிர்கொள்ளப் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களின் திறனை விட, வேகமாக மாறிவரும் அச்சுறுத்தல்களை சிறிலங்கா எதிர்கொண்டுள்ளதாக, கொழும்பை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழாமின் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.

மூலோபாய ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்தின் ஆராய்ச்சி/திட்ட அலுவலரான ஷயான் பீரிஸ், சிறிலங்கா  எதிர்கொள்ளும், விரிவடைந்து வரும் திறன்-செயல்பாட்டு இடைவெளி குறித்து, வெளிப்படுத்தியுள்ளார்.

‘சிறிலங்காவின் மாறிவரும் கடல்சார் பாதுகாப்புச் சூழல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் உருவாகி வரும் மரபுசாரா பாதுகாப்புச் சவால்களின் வளர்ந்து வரும் வீச்சு’ என்ற தலைப்பில் ஏசியன் பவுண்டேசனில் நடைபெற்ற ஒரு  நிகழ்வில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 517,000 சதுர கி.மீ பரப்பளவுள்ள தனித்துவ பொருளாதார வலயத்தைப் பாதுகாப்பதற்கும், கடல்சார் கள விழிப்புணர்வை உறுதி செய்வதற்கும் சிறிலங்கா பொறுப்பேற்றிருந்தாலும், கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் முதல் இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் கடல் மாசுபாடு வரை பெருகிவரும் சிக்கலான சவால்களை அது எதிர்கொள்கிறது.

கடல்சார் கட்டுப்பாடு,  பல அமைப்புகளிடையே சிதறிக் கிடக்கிறது, இந்த அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குறைவாகவே உள்ளது; கடல்சார் கண்காணிப்பு மற்றும் நடைமுறைப்படுத்தும் திறன்கள் குறைவாக உள்ளன; ஆராய்ச்சிக் கப்பல்கள் தொடர்பான நிலையான இயக்க நடைமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை; மேலும், புலனாய்வு ஒருங்கிணைப்பு, சுற்றுச்சூழல் பதிலளிப்புத் தயார்நிலை மற்றும் இணையவழி-கடல்சார் அவசரகாலத் திட்டமிடல் போன்ற பகுதிகளில் முக்கியமான இடைவெளிகள் நீடிக்கின்றன என்றும் ஷயான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் கடல்சார் களத்தை வடிவமைக்கும் அனைத்துலக குற்றங்கள், சட்டவிரோத மீன்பிடித்தல், சுற்றுச்சூழல் சீரழிவு, கடல்சார் ஆளுகையில் உள்ள இடைவெளிகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் சவால்கள் குறித்து  இந்த நிகழ்வில் ஆராயப்பட்டது.

கடல்சார் போதைப்பொருள் கடத்தல், வர்த்தக அடிப்படையிலான பணமோசடி, சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல், கடல் மாசுபாடு சம்பவங்கள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள்,  இணையவழி அச்சுறுத்தல்கள், கடலடி கேபிள்களின் பாதிப்புகள், ஆளில்லா அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கடல்சார் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் வளர்ந்து வரும் மூலோபாய தாக்கங்கள் குறித்தும் இதில் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *