அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் 8 மாவட்டங்களிலும் போராட்டம்
சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும், இன்று வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நலன்பேணும் அமைப்புக்களும், தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து அந்தந்த மாவட்ட அரச செயலகங்களுக்கு முன்பாக இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.
இந்தப் போராட்டத்தின் முடிவில், காணாமல்போயுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் அனைத்துலக தலையீடு அவசியம் என்று வலியுறுத்தும் மனு ஒன்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக கையளிக்கப்பட்டுள்ளன.
காணாமற்போனோரின் உறவினர்களால், ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டம், அனைத்துலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது