18 மில்லியன் டொலர் செலவில் விமானப்படையை நவீனமயப்படுத்த திட்டம்
சிறிலங்கா விமானப்படை 18 மில்லியன் டொலர் (5.4 பில்லியன் ரூபா) செலவில் விமானங்களின் அணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, விமானப்படையின் பிரதி தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறிலங்கா விமானப்படையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விமானப்படையை விரிவாக்கும் மற்றும் நவீனமயப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவினால், நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு விமானங்கள் – ( Beechcraft King Air 350 மற்றும் 360ER) பெறப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலை திறன்களை மேம்படுத்தியுள்ளன.
அமெரிக்காவிலிருந்து 10 TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானூர்திகளை விமானப்படை எதிர்பார்க்கிறது.
இவை அமெரிக்க கடற்படையிடம் இருந்து பொறுப்பேற்கப்பட்டு, மே மாதத்தில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உலங்குவானூர்திகள் பயிற்சி திறன் மற்றும் பேரிடர் பதிலளிப்பு தயார்நிலையை அதிகரிக்கும்.
நீண்ட செயல்முறைக்குப் பின்னர், நான்கு Mi-17 உலங்குவானூர்திகள் பழுதுபார்ப்பதற்காக ஜோர்ஜியாவிற்கு அனுப்பப்படவுள்ளன.
இவற்றின் பழுதுபார்ப்பு மற்றும் ஆயுள் நீடிப்பு திட்டத்திற்கு சுமார் 18 மில்லியன் டொலர் அல்லது ஒரு உலங்குவானூர்திக்கு சுமார் 4.5 மில்லியன் டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் இந்தப் பணிகள் முடிந்ததும், மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நாவின் பல பரிமாண ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணியில், மூன்று உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்படும் .
அதே நேரத்தில் ஒரு உலங்குவானூர்தி உள்ளூரில் பயன்படுத்தப்படும்.
இரண்டு C-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானங்கள் மற்றும் மேலதிக உலங்குவானூர்திகளை வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
பல ஆண்டுகளாக தரையிறக்கப்பட்ட நிலையில் உள்ள, MA-60 பயணிகள் போக்குவரத்து விமானம், சீன உற்பத்தியாளரின் உதவியுடன் மீண்டும் சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட F-7 மற்றும் K-8 போர் விமானங்கள், தற்போது கட்டுநாயக்காவில் உள்ள விமானபபடை பழுதுபார்க்கும் நிலையத்தில் சீன நிபுணர்களின் ஆதரவுடன் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு இரண்டு விமானங்களும் மீண்டும் சேவைக்கு வரும்.
சிறிலங்கா விமானப்படையுடன் நீண்டகாலமாக தொடர்புடைய, ஆனால் அண்மைய ஆண்டுகளில் செயற்படாமல் உள்ள கிபிர் போர் விமானங்களை, மேம்படுத்தும் திட்டம் நிறைவுக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
இஸ்ரேலிய நிறுவனத்துடனான 50 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின் கீழ், மேம்பட்ட ஏவியோனிக்ஸ், நவீன ராடர் மற்றும் மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் மூலம் ஐந்து கிபில் ஜெட் போர் விமானங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த விமானங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் எயர் வைஸ் மார்ஷல் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
